பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
நாகர்கோவில் : ஆவணி கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிபட்டனர். ஞாயிற்றுக் கிழமைகளில் நாகராஜருக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளிலும் நாகராஜா கோயில் விழாக் கோலம் பூண்டு விடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டம் முசூவதிலும் இருந்தல்லாமல் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் இக்கோயிலுக்கு வந்து பால், உப்பு, மிளகு ஆகியவற்றை காணிக்கையாக கொடுத்து நாகராஜரை வழிபட்டு செல்கின்றனர். இவ்வாறு வழிபடுவதன் மூலம் குடும்ப கஷ்டம் தீரும், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க ஆவணி ஞாயிற்றுக் கிழமை விழா கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது. இதையொட்டி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அதிகாலை 4மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நாகராஜர், சிவன், பாலமுருகன், துர்க்கை, சாஸ்தா உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகமும், உஷபூஜையும் அதனை தொடர்ந்து தீபாராதனையும் நடத்தப்பட்டது. பகல் 11மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12.30மணிக்கு சிறப்புபூஜை, தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 6.30மணிக்கு தீபாராதனையும், இரவு 8மணிக்கு அத்தாழ பூஜையும், தீபாராதனையும் அதனை தொடர்ந்து அனந்த கிருஷ்ணர் வாகனத்தில் கோயில் பிரகாரம் சுற்றி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செலவுகளை நீதித் துறையும், இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நான்காவது ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு பூஜைகள் தனிநபர்கள் செய்து இருந்தனர். நேற்று ஆவணி கடைசி ஞாயிறு சிறப்பு பூஜை செலவுகளை பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஏற்றனர். கடைசி ஞாயிறையொட்டி காலை 3.30மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4மணிக்கு அபிஷேகம், 5மணிக்கு தீபாராதனை, காலை 11மணிக்கு பால் அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து 11.30மணிக்கு அன்னதானம் நடந்தது. பொதுப் பணித்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தது. செயற்பொறியாளர் சுப்பிரமணியன், தன்ராஜ், மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ்ஆன்றோ, பிரபாகரன், சொர்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகல் 12.30மணிக்கு தீபாராதனை, மாலை 5மணிக்கு நடை திறப்பு, 6.30மணிக்கு தீபாராதனை, இரவு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. ஆவணி கடைசி ஞாயிறு என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூ டம் அதிகமாக காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜரை தரிசித்தார்கள். பக்தர்கள் கோயிலுக்குள் சென்று இறைவனை சிரமமின்றி தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆவணி ஞாயிற்றுக் கிழமையை யொட்டி ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.