பதிவு செய்த நாள்
16
செப்
2013
11:09
திருச்சூர்: "குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சொந்தமான தங்கம் பற்றிய விவரங்களை தர வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் வேண்டுகோளை, குருவாயூர் தேவஸ்தானம் நிராகரித்து உள்ளது.
பொருளாதார வீழ்ச்சி:
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, அதிக அளவிலான தங்கத்தை இருப்பு வைக்க, ரிசர்வ் வங்கி மூலமாக, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக சில நடவடிக்கைகளை எடுத்தது. அதனடிப்படையில், கேரளாவில் உள்ள, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உட்பட, சில கோவில்களுக்கு கடிதம் ஒன்றை, ரிசர்வ் வங்கி அனுப்பியது. அதில், "உங்கள் கோவில்களுக்கு சொந்தமாக, எவ்வளவு தங்கம் உள்ளது; பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி, தற்போது உங்களின் கைவசம் உள்ள தங்கம் இருப்பு எவ்வளவு? இதுபற்றிய விரிவான அறிக்கையை, அளிக்க வேண்டும் என, தெரிவித்திருந்தது. ரிசர்வ் வங்கியின் இந்த கடிதம், கேரள மாநில பக்தர்களிடமும், பொதுமக்களிடமும், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உட்பட, கேரளாவில் உள்ள சில கோவில்கள், அதிக வருவாயுள்ளவை. இங்கு, பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், அதிக அளவில் இருப்பு உள்ளது.
பக்தர்கள் அதிருப்தி:
இதைக் கைப்பற்றும் நோக்கத்திலேயே, ரிசர்வ் வங்கி, இந்த தகவல்களை கேட்டுள்ளதாக, பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ரிசர்வ் வங்கியின் கடிதம் கிடைக்கப் பெற்றதை, கடந்த, 9ம் தேதி, குருவாயூர் தேவஸ்தான அதிகாரிகளும் உறுதி செய்தனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் வேண்டுகோளை, குருவாயூர் தேவஸ்தானம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக, தேவஸ்தான நிர்வாகி, முரளீதரன் கூறியதாவது:
தேவஸ்தானம் முடிவு:
குருவாயூர் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்கம் பற்றிய விவரங்களை தரும்படி, ரிசர்வ் வங்கி கேட்டிருந்தது. கோவிலில் உள்ள தங்கத்தின் இருப்பை, சரியாக மதிப்பீடு செய்வது இயலாத காரியம் என்பதால், அதுபற்றிய விவரங்களை தர இயலாது என, ரிசர்வ் வங்கிக்கு, தேவஸ்தானம் கடிதம் எழுதியுள்ளது. ரிசர்வ் வங்கி கேட்ட விவரங்களை தருவதில்லை என்ற முடிவு, குருவாயூர் தேவஸ்தான நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, முரளீதரன் கூறினார்.