பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
திருப்பதி:திருப்பதி ஏழுமலையானுக்கு புதிய பல்லக்கை, தேவஸ்தானம் தயாரித்துள்ளது. அடுத்த மாதம், 5ம் தேதி பிரம்மோற்சவம் துவங்குவதையொட்டி, ஏழுமலையானின் வாகனங்களை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி ஆய்வு செய்து, செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாள் நடைபெறும் மோகினி அலங்காரம் மற்றும் பத்மாவதி பரிணய உற்சவத்திற்காக, ஏழுமலையானுக்கு, "ரோஸ் வுட்டில் புதிய பல்லக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பல்லக்கை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு, ஆய்வு செய்த பின், அனைத்து வாகனங்களும் வைக்கப்பட்டுள்ள, வைபவ மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிறப்பு கண்காட்சி : திருமலையில், ஏழுமலையான் அருங்காட்சியகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்த, ஆமதாபாத்தில் உள்ள, தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்) நிபுணர்கள் குழு, நேற்று முன்தினம் இரவு, திருமலைக்கு வந்தனர். நேற்று, இவர்களுக்கு, ஏழுமலையானின் வரலாறு, சிறப்புகள், ஆபரணங்கள், நாணயங்கள், காலத்திற்கேற்ப திருமலையில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள், அன்னமாச்சார்யாவின் தாமிர ஏடுகள் குறித்து, தேவஸ்தான உயர் அதிகாரிகள், தலைமை தீட்சிதர், ரமண தீட்சிதர் உள்ளிட்டோர் விளக்கிக் கூறினர். இவற்றின் அடிப்படையில், ஒரு கருத்தை மையமாகக் கொண்டு, கண்காட்சி அமைப்பதற்காக, அனைத்து விவரங்களையும், தேவஸ்தானத்திடம் நிபுணர் குழு கேட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும், கண்காட்சி அமைக்கும் பணியில் நிபுணர் குழுவினர் ஈடுபட உள்ளனர். வரும் பிரம்மோற்சவத்திற்குள், இப்பணி முடிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.