பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
கோவை : ஓணம் பண்டிகையையொட்டி சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான மக்கள் சுவாமியை வழிபாடு செய்தனர். சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில், ஓணம் பண்டிகையையொட்டி நேற்று காலை ஐயப்பசுவாமிக்கு சகல வித வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை 5.00 மணிக்கு நிர்மால்யபூஜை, 7.30 க்கு சீவேலி, 9.00 மணிக்கு பந்திரடி பூஜை, 10.00 மணிக்கு உஷபூஜை நடந்தது. சுவாமிக்கு சம்பங்கி, செவ்வந்தி, துளசி ஆகியவைகளை நாரில் தொடுத்து அலங்கரிக்கப்பட்டு, சுற்றிலும் நெய் தீபங்களால் தூண்டாவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது. தங்கக்கொடிமரத்தருகே துளசி மற்றும் மருகு, ரோஜா, செவ்வந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, செண்டுமல்லி, மல்லி மலர்களை கொண்டு அத்தப்பூக்கோலம் ஒன்பது வரிசைகளில் போட்டிருந்தனர். கோவில் கருவறைக்கு பின் பகுதியிலும் அத்தப்பூக்கோலம் போடப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி, கோவிலிலுள்ள அன்னதானக்கூடத்தில் ஓணசத்யா விருந்து பரிமாறப்பட்டது. இதில் மூன்று வகைகளில் அவியல், ஊறுகாய், பாயாசம், வேகவைத்த வாழைப்பழம், நேந்திரன்சிப்ஸ் உள்ளிட்ட கேரள பாரம்பரி உணவுகள் இடம் பெற்றன. சுவாமியை வழிபாடு செய்த பக்தர்கள், குடும்பத்துடன் அன்னதானத்தில் பங்கேற்று உணவு அருந்தினர்