பதிவு செய்த நாள்
21
செப்
2013
10:09
திருப்பதி: திருமலையில் புதிய தங்கத்தேரின் சோதனை ஓட்டம், வரும், 31ம் தேதி நடைபெற உள்ளதாக, தேவஸ்தான செயல் இணை அதிகாரி, சீனிவாச ராஜு, நேற்று இரவு தெரிவித்தார். திருமலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள, பிரம்மோத்சவ விழாவில், வலம் வருவதற்கு, புதிய தங்கத்தேரை, தேவஸ்தானம், 25 கோடி செலவில், செய்து வருகிறது. பழைய தங்கத்தேர் பழுதடைந்துள்ளதால், வெள்ளித்தேரின், மரக்கட்டையைக் கொண்டு, புதிய தங்கத்தேர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 24 டன் மரக்கட்டையும், 3 டன் செப்புத் தகடுகளும், 74 கிலோ சுத்த தங்கமும், பயன்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை, தங்கத்தேருக்கு, புதியதாக ஹைட்ராலிக் பிரேக் போடப்பட்டுள்ளது. இதனால், தேரை, வளைவுகளில் திருப்புவதற்கும், நிறுத்துவதற்கும், மிகவும் வசதியாக இருக்கும். இதன் பணிகள் விரைவாக, செய்து முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம், வரும் 31ம் தேதி, நடைபெறும். சோதனை ஓட்டத்திற்கு பின் தங்கத்தேர், முழு பாதுகாப்புடன், அதற்கென ஏற்படுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.
திருப்பதி பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம்:
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: ஏழுமலையானை தரிசிக்க, 50, 300 ரூபாய் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வாங்கி வருவோருக்கு, இரண்டு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. பாதயாத்திரை மற்றும் தர்ம தரிசன பக்தர்களுக்கு, 20 ரூபாய் விலையில், லட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனுக்கு ஒரு லட்டு கிடைக்கும். ஏழுமலையானை தரிசிக்க, தினசரி, 70 ஆயிரம் பேர் வருகின்றனர். அவர்களில், 40 ஆயிரம் பேர், பாதயாத்திரை மற்றும் தர்ம தரிசனத்திற்கு வருகின்றனர். இப்படி வரும், ஏழை பக்தர்களுக்கு, இரண்டு லட்டு இலவசமாக வழங்கலாம் என, கோரிக்கை எழுந்தது. ஒருவருக்கு, இரண்டு லட்டு இலவசமாக வழங்கினால், ஒரு நாளைக்கு, 8 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால், தேவஸ்தானத்திற்கு எந்த இழப்பும் வராது. எனவே, இந்த வாரம் நடைபெறவுள்ள, அறங்காவலர் குழுக் கூட்டத்தில், அனுமதி பெற்று, லட்டுப் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். இரண்டு லட்டுகளுக்கு அனுமதி கிடைக்காவிடில், 1 லட்டாவது இலவசமாக வழங்க அனுமதி பெறப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.