நிரம்பும் நிலையில் இடுக்கி அணை : மூழ்குகிறது ஐயப்பன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2013 10:09
மூணாறு: கேரளாவில் மூன்று மாதங்களாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், இடுக்கி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இடுக்கி அணையில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில், உப்புதரா வரை தண்ணீர் தேங்கும். இதனால், உப்புதரா அருகில் நீர் தேக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்த பழைமை வாய்ந்த ஐயப்பன் கோயில், கடந்த 1975ல் இடிக்கப்பட்டது. இதற்கு பதில் மின் வாரியம் சார்பில் வேறு இடத்தில் கோயில் கட்டிக் கொடுக்கப்பட்டது.இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கோயில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட போதிலும்,அதன் சக்தி பழைய கோயிலில் இருப்பதாக பக்தர்கள் நம்பினர். ஆகவே பழைய கோயில் இருந்த இடத்தில் சில ஆன்மிக இயக்கங்கள் இணைந்து, கடந்த 2001ல், மீண்டும் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். தற்போது, இடுக்கி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால், உப்புதரா வரையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் அருகில் உள்ள பழைமை வாய்ந்த ஐயப்பன் கோயில் தண்ணீரால் சூழப்பட்டு, மூழ்கும் நிலையில் உள்ளது. கோயிலுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஐயப்பனுக்கு செய்ய வேண்டிய அன்றாட பூஜைகள் பாதிக்கப்பட்டுள்ளன.