பதிவு செய்த நாள்
24
செப்
2013
03:09
வடமொழிக் கவிஞர்களுள் சூர்தாஸ் என்ற மாபெரும் பக்திக் கவிஞர் ஒருவர் இருந்தார். அவர் பெயரை நீக்கிவிட்டு இந்தி பக்தி இலக்கிய வரலாற்றை எழுத இயலாது. பார்வையற்றவரான அவர் இயற்றியதாகக் கிடைப்பவை சுமார் எட்டாயிரம் கவிதைகள். இவையே கணிசமான எண்ணிக்கைதான் என்றாலும், ஏறக்குறைய ஒரு லட்சம் கவிதைகளை அவர் இயற்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கண்ணனையே உறவாகக் கூறிக் கொள்ளும் அவர், உண்மையில் எல்லா உறவுகளாலும் நிராகரிக்கப் பட்டுத் துறக்கப்பட்டவர்! அவரது வாழ்க்கைச் சரிதம் விந்தையான பல சம்பவங்கள் நிறைந்தது- தில்லி அருகே சிஹி என்ற கிராமத்தில் 1478 இல் அந்தப் பார்வையற்ற குழந்தை பிறந்தது. குழந்தையின் இயற்பெயர் என்ன? தெரியாது. சூர் என்றால் பார்வையற்றவர் என்று பொருள். அந்தப் பெயராலேயே எல்லோரும் அந்தக் குழந்தையை வேண்டாவெறுப்போடு அழைக்கலானார்கள்.தாய் தந்தை இருவரும் சூர்தாஸ் இயற்கையால் சபிக்கப்பட்டவர் என்ற கண்ணோட்டத்தில் அவரைப் புறக்கணித்தார்கள். மூன்று சகோதரர்கள் அவருக்கு யாரிடமிருந்தும் எள்ளளவு பிரியமும் கிட்டவில்லை.
பார்வையற்றுப் பிறந்ததற்கு, தான் என்ன செய்ய இயலும்? சூர்தாஸ் அடிக்கடி தனிமையில் வாட்டத்தோடு சிந்தித்துக் கொண்டிருப்பார். அவருக்கிணையான வயதுடைய சிறுவர்கள் அவரை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. பார்வையற்றவர் என்று அவர்கள் கிண்டல் செய்தபோது, புகலிடம் தேடித் தாயிடம் அவர் வருவார். தாயோ தானும் சேர்ந்து அவரைத் திட்டித் தீர்ப்பாள். மறுபடியும் தனிமை. சோகம்.ஓயாத சிந்தனை. தெய்வமே! நான் ஏன் இப்படிப் பிறந்தேன்? ஒருநாள் மிகுந்த மனச்சோர் வோடு சூர்தாஸ் வீட்டு வாயிலில் அமர்ந்திருந்த போதுதான், அவர் வாழ்வை மாற்றிய அந்தச் சம்பவம் நடந்தது. யாத்ரிகர்கள் குழு ஒன்று கிருஷ்ண கானங்களைப் பாடியவாறே அவ்வழியே சென்றது. அந்த இனிய பாடல்களைக் கேட்டு அவர் பரவசமடைந்தார். அந்த ராகமும் அவர்கள் ஆலோபனை செய்த நளினமும் அவரைச் சொக்க வைத்தன. அவரின் ஆழ்மனத்தில் இயல்பாகவே இருந்த இசைநாட்டம் அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
தம் தேனினும் இனிய குரலால் அந்த மெட்டைத் தாமே வாய்விட்டு அசைபோட்டுப் பார்த்தார். நான் கட்டாயம் ஒருநாள் இசை கற்பேன்! என்று மனத்தில் உறுதி ஏற்படுத்திக் கொண்டார். முறையான கல்வி கற்கும் ஆசையில் தன் சகோதரர்களோடு அவர் கல்வி பயிலச் சென்றபோது, அவர் தந்தையே அவரை விரட்டிவிட்டார். சூர்தாஸ் கண்களில் கண்ணீர் வழிந்தது. எழுதப்படிக்கக் கூட முடியாத தன்னால் எப்படி இசை கற்றுப் பாட முடியும்? இந்த வீட்டில் இனியும் இருப்பது அவசியம்தானா? ஆனால் எங்கு செல்வேன்? அவரின் பிஞ்சுமனம் துடிதுடித்துத் தவித்தது. அருவியாய் பெருகும் கண்ணீருடன் மீண்டும் வீட்டு வாயிலில் உட்கார்ந்து கொண்டார். அப்போது இன்னொரு யாத்ரிகள் குழு கிருஷ்ண கானங்களை இசைத்தவாறே தெரு வழியே சென்றது.
சூர்தாஸ் ஒரு முடிவுசெய்தார். மெல்ல எழுந்தார். யாரும் அறியாதவாறு தட்டுத்தடுமாறி நடந்து அந்த யாத்ரிகர்கள் குழுவுடன் இணைந்துகொண்டார். அவர்களுடனேயே அவர்கள் இசைத்த பாடல்களைத் தானும் மறுபடி இசைத்தவாறு நடக்கலானார். ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. மறுநாள் தூங்கி எழுந்தபோது அந்தக் குழுவினர் அவரை விட்டுச் சென்றிருந்தனர். இப்போது சூர்தாஸ் எங்கே செல்வார்? மீண்டும் வழி விசாரித்துத் தன்தை வெறுக்கும் வீட்டாரிடம் போய்ச் சேர அவருக்கு விருப்பமில்லை. ஆனால் இனி சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்றும் எங்கே வசிப்பதென்றும் தெரியவில்லை. பெற்றோராலும் சகோதரர்களாலும் புறக்கணிக்கப்பட்டேன். அடைக்கலம் தேடி வந்த இந்த யாத்ரிகர்களும் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் கிருஷ்ண பக்திப் பாடல்களைப் பாடினார்கள்! அந்தப் பாடல்களின் நாயகனான கிருஷ்ணா! நீயும் என்னைக் கைவிட்டு விடுவாயா? அப்படிக் கைவிட்டால் பின் எதன்பொருட்டு என்னை நீ படைத்தாய் தெய்வமே?
அவர் மனத்தில் கடும் துயரம் எழுந்தது. கண்ணா என்னைக் கைவிட்டு விடாதே என்று அந்தப் பிஞ்சு உள்ளம் கதறியது. அந்தக் கதறல் அப்படியே ஒரு பாட்டாக உருவெடுத்தது. இயற்கையிலேயே அவருக்கு அமைந்திருந்த தெய்வீக இனிமை சொட்டும் குரலில் உருகிஉருகி ஆதரவு தேடி அவர் அந்த ஏரிக்கரையில் ஆலமரத்தடியில் அமர்ந்து பாடலானார். அந்த மரம் கண்ணீர் விட்டு அழுதது போல் தோன்றியது. அதில் கூடுகட்டி வசித்துவந்த பறவைகள் துயரத்தோடு மௌனம் காத்தன. நிச்சலனமான ஏரி அவரின் பக்திகானத்தைக் கேட்டு அலை நிறுத்தி அமைதி காத்தது. ஏரிக்கரைப்பக்கம் வந்த கிராமவாசிகள், சூர்தாஸின் அற்புதமான குரலையும் பக்திமணம் கமழும் இசையையும் கேட்டு வியந்தார்கள். யார் பெற்ற பிள்ளையோ? பார்வையற்ற இந்தப் பிள்ளை இங்கே வந்து இப்படி உருகி உருகிப் பாடுகிறதே? ஒரு தாய் அன்போடு அவரிடம் வந்து கேட்டாள்: பையா ! உன் பெயர் என்ன? சூர் ! சூர் என்றால் பார்வைற்றவன் என்றல்லவா பொருள்? இந்தப் பிள்ளை தன்னைத் தானே இப்படிக் கழிவிரக்கத்தோடு சொல்லிக்கொள்கிறதே? நீ பார்வையற்றவன் என்பதைப் புரிந்து கொண்து விட்டேன் அப்பா! அதைக் கேட்கவில்லை நான். உன் பெயர் என்ன என்று கேட்டேன்! என் பெயரே அதுதான். அப்படித்தான் என்னை எல்லோரும் கூப்பிடுவார்கள். நீங்களும் அப்படியே கூப்பிடுங்கள். பரவாயில்லை! அந்தத் தாய் கசிந்துருகினாள். நீ யாரப்பா? அது எனக்குத் தெரியவில்லையே அம்மா ! அதைத்தான் என் பாடல் மூலம் நான் கண்ணனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!
சொல்லச் சொல்ல சூர்தாஸின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. அந்தத் தாய் சூர்தாசை அள்ளி அணைத்துத் தேற்றினாள். எப்போது சாப்பிட்டாயோ என்னவோ என்று வீட்டுக்கு ஓடிபோய் கொஞ்சம் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்தாள். அந்தத் தாயின் அன்பைப் பார்த்தபலரும் அந்தச் சிறுவன் மேல் அளவற்ற அன்பு செலுத்தத் தொடங்கினார்கள். அவர்கள் பிரதிபலனாய் எதிர்பார்த்ததெல்லாம் அந்தச் சிறுவனின் தெய்வீகக் குரலில் அமைந்த இனிய பாடல்களைத்தான். சூர்தாஸ் தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தார். நூற்றுக்கணக்கான பாடல்கள். அந்தக் கிராம மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள். அவரு க்கு உணவளித்துப் பராமரிப்பதைப் பெருமையாகக் கருதினார்கள். ஒரு குடும்பம் அவரைப் புறக்கணித்தால் என்ன? ஒருகிராமமே அவரைக் குழந்தையாய் ஏற்றுக் கொண்டது. அன்பின் சுவட்டையே அதுவரை அறிந்திராத சூர்தாஸ் அந்தக் கிராம மக்களின் தூய்மையான அன்பில் நெகிழ்ந்தார். அந்த மக்கள் அனைவரின் அன்பிலும் அவர் கண்ணனையே கண்டார். கண்ணனே அவர் உள்ளத்திலிருந்து அவருக்கு இசையைக் கற்பித்தான்.
பிருந்தாவனத்திற்குக் கண்ணனை வழிபடுவதற்காகச் செல்லும் பக்தர்கள் எல்லாம் அந்த ஏரிக்கரையின் வழியேதான் சென்றார்கள். அவர்கள் சூர்தாஸ் பாடும் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தார்கள். ஏரிக்கரையில் அவர்கள் கூடாரமடித்துத் தாங்கியபோது அவர்கள் பேச்சைக் கூர்மையாகக் கேட்டுப் பல விஷயங்களை அறிந்துக்கொள்வார் சூர்தாஸ். அவ்விதமே மெல்ல மெல்ல அவர் உலகியல் அறிவு பெற்றார். அவரது இசையின் பெருமை போலவே அவரது அறிவின் பெருமையும் பரவத் தொடங்கியது. இப்படியாக சூர்தாஸுக்குப் பதினான்கு வயதாகிறது. அதற்குள் உலகியல் அறிவாலும் அனுபவத்தாலும் சூர்தாசின் ஞானம் பெரிதும் வளர்ந்திருந்தது. இறையருளும் அவருக்குக் கைகொடுத்தது. பல விஷயங்களை அவர் இருந்த இடத்தில் இருந்தவாறே கண்டறியும் திறன் பெற்றார்.கிராம மக்களின் கால்நடைகள் தொலைந்தால் அவை எங்கே நின்று கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார். அவர் சொன்ன இடத்தில் அவை மீண்டும் கிடைத்தன. ஒருநாள் அந்த கிராமத்தில் வசித்த ஒரு செல்வந்தரின் மகன் காணாமல் போனான். அவர் அழுது அரற்றியவாறு சூர்தாஸிடம் கேட்டார். அவன் எங்கிருப்பான் என்பதைத் தெளிவாகச் சொன்னார் சூர்தாஸ். என்ன ஆச்சரியம். சொல்லி வைத்தாற்போல் அவன் அங்கேதான் இருந்தான். மகன் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் பதினான்கு வயதான சூர்தாஸின் பாதங்களில் விழுந்து பணிந்தார் அந்தச் செல்வந்தர். தன் நன்றிக் காணிக்கையாக அந்த ஏரிக் கரையிலேயே சூர்தாஸுக்கு ஒரு குடில் அமைத்துத் தந்தார்.
சூர்தாஸின் பெருமையுணர்ந்து அவரைச் சுற்றி அடியவர் கூட்டம் சேரத் தொடங்கியது. யாரோ ஒருவர் அவருக்குத் தாம்பூரா ஒன்றைப் பரிசளித்தார். அவர் பாடியபாடல்களையெல்லாம் பலர் அவர் பாடும்போதே எழுதி வைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். அந்த அன்பர்களின் முயற்சியால்தான் இன்று சூர்தாஸின் அற்புதமான கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகள் நமக்குக் கிடைக்கின்றன. ஒருநாள் கண்ணன் வாழ்ந்த பிருந்தாவனத்திற்குத் தாம் சொல்ல விரும்புவதாகக் கூறி அந்தக் கிராமத்து மக்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுப் புறப்பட்டார் சூர்த்ஸ். கண்ணீர் வழிய அவர்கள் விடைகொடுத்து அனுப்பினார்கள். பிருந்தாவனத்திலேயே கண்ணன்மேல் பாடல்கள் இசைத்தவாறு அவர் வாழலானார். அப்போது ஒருநாள் அவரைத் தேடிவந்தார், அவரது பாடல்களின் சிறப்பை அறிந்த இன்னொரு கவிஞரும் ஆசார்யருமான வல்லபாச்சாரியர். மதுராஷ்டகம் உள்ளிட்ட அற்புதமான கிருஷ்ண பக்தித் தோத்திரங்களை எழுதியவர் அல்லவா அவர்! பாம்பின் கால் பாம்பறியதா!
சூர்தாஸுக்கு மந்திரோபதேசம் செய்வதுவைத்து கோவர்த்தன் என்ற இடத்தில் உள்ள கண்ணன் ஆலøமான ஸ்ரீநாத் கோயிலில் அவரைப் பிரதான பாடகராகவும் நியமித்தார் வல்லபாச்சாரியார். அவரது எட்டுப் பிரதான சீடர்களில் சூர்தாஸ் முதன்மைச் சீடராகக் கொண்டாடப்படலானார். சூர்தாஸின் இசைப் பெருமை அறிந்து இசை ரசிகரான அக்பர், தாமே அவரைத் தேடிவந்து அவர் பாட்டைக் கேட்டதாகவும் வரலாறு சொல்கிறது. உறவுகளைத் துறவிகள் துறப்பதுண்டு. உறவுகளால் துறக்கப்பட்ட துறவி சூர்தாஸ். கண்ணனை மட்டுமே உறவாகக் கொண்டு, அந்த உறவின் ஆதாரத்திலேயே வாழ்வை நடத்தி இறுதியில் (1573 இல்) நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து, கண்ணனுடனேயே கலந்துவிட்ட பக்தி மணம் கமழும் புனிதச் சரிதம் அவருடையது.