பதிவு செய்த நாள்
27
செப்
2013
10:09
தர்மபுரி: தர்மபுரி பிரசன்வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில், சீரமைப்பு பணிகள் நடக்கிறது. தர்மபுரி, எஸ்.வி., ரோட்டில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் , மூலவர் கோபுரம், அம்மாள் கோபுரம் மற்றும் கோவில் சுற்று சுவர்கள் பாதிக்கப்பட்டது. இதை சீரமைக்க பக்தர்கள் தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வந்ததுடன், பல பக்தர்கள் சீரமைப்பு பணிக்கு தேவையான பணத்தை நன்கொடையாக தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலைத்துறை, இக்கோவில் மூல கோபுரம், அம்மன் கோபுரம் சீரமைப்பு மற்றும் வண்ணம் பூசல் உள்ளிட்ட, 3 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயில் சீரமைக்க முன் வந்தது. கோவில் சீரமைப்புக்கு தேவையான இத்தொகையை, சில பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர். இதை தொடர்ந்து பிரசன் வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் சீரமைப்பு பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது. தற்போது, கோபுரம் மற்றும் கோவில் சுற்றுசுவருக்கு வண்ணம் பூசும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகள் இன்னும் சில தினங்களில் முடிக்கப்படும் எனவும், அதனை தொடர்ந்து கோவில் எழில் மிகு தோற்றத்துடன் காணப்படும், எனவும், இதே போன்று மாவட்டத்தில் மேலும் சில கோவில்களில் பக்தர்கள் பங்களிப்பில் கோவில் சீரமைப்பு மற்றும் கோபுரம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருவதாக, ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.