பதிவு செய்த நாள்
01
அக்
2013
11:10
ஈரோடு: கவுந்தபாடியில் உள்ள காந்தி கோவிலில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர், 2ம் தேதி, 18ம் ஆண்டு காந்தி ஜெயந்தி திருவிழா நடக்கிறது. ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி, செந்தாம்பாளையத்தில், கடந்த, 1997ல், மகாத்மா காந்திக்கு கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில், காந்தி, கஸ்தூரிபா ஆகியோர் மூலவராக வீற்றிருக்கின்றனர். ராஜகோபுரம், மஹா மண்டபத்துடன் கோவில் அமைந்துள்ளது. சராசரி கோவில்களை போல, காந்தி கோவிலிலும், தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது. தவிர, சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில், சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளை நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், 2ம் தேதி, காந்தி ஜெயந்தியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். நடப்பாண்டு அக்டோபர், 2ம் தேதி, 18ம் ஆண்டு திருவிழாவை கொண்டாட உள்ளனர். தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள், மற்றும் அன்னதானம் செய்கின்றனர். திருவிழாவில் பங்கேற்க, செந்தாம்பாளையம் ஊர் பொதுமக்களும், மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் வையாபுரி அழைப்பு விடுத்துள்ளது.