பதிவு செய்த நாள்
03
அக்
2013
04:10
தூத்துக்குடி: பழங்காலத்தில் புகழ்பெற்றிருந்த கரந்தேஸ்வரர் கோயிலின் மிச்சங்களான, சுவாமி சிலைகளை பாதுகாக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேலக்கரந்தை கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே இரண்டு சிவலிங்கம் சிலைகள், முருகன், துவாரபாலகர், நந்தி உள்ளிட்ட கற்சிலைகள் மண்ணோடு மண்ணாக புதைந்து கிடக்கின்றன. இப்பகுதியில் முன்பு கரந்தேஸ்வரர் என்ற திருக்கோயில் (சிவன் கோயில்) இருந்துள்ளது. காலப்போக்கில் அக்கோயில் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டது. எஞ்சிய சுவாமி சிலைகள்தான் தற்போது வீதியில் வீசப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரை - தூத்துக்குடி இடையே முதல் முதலாக சாலை அமைத்தபோது, இக்கோயிலில் இருந்த பெரிய கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கோயில் சுவர்கள் சேதமடைந்து, கோயிலுக்குள் இருந்த சுவாமி சிலைகள் படிப்படியாக பூமியில் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கண்மாய், வேளாண்மை கிட்டங்கி என சில கட்டடங்கள் 1952-க்கு பிறகு படிப்படியாக கட்டப்பட்டன. இக்கட்டடங்களை கட்ட அஸ்திவாரம் தோண்டியபோதுதான் இச்சிலைகள் கிடைத்தன. தற்போது தெருவோரம் கிடக்கும் பெரிய சிலைகள் தவிர, ஏராளமான சிறிய சிலைகள், கல் சிற்பங்கள் போன்றவற்றை மக்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். சில சிலைகள் உடைந்து சேதமடைந்துவிட்டன.
சிவன் கோயிலின் கொடிமரம் கூட இப்பகுதியில் இப்போதும் இருக்கிறது. இப்பகுதி கோயில்கள், ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. அதுபோல கரந்தேஸ்வரர் கோயிலும் சேதுபதி சமஸ்தானத்தில் இருந்திருக்கலாம். அதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை. பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் பி. முத்துமுருகன் கூறுகையில், கலைநயம் மிக்க, பழமைவாய்ந்த சிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தொல்லியல் துறை இதுவரை முன்வரவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். சிலைகளை பாதுகாக்க தொல்லியல் துறை அல்லது இந்து அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சிலைகளை, கோயில்களில் வைத்து வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கிறார்.