பதிவு செய்த நாள்
03
அக்
2013
05:10
டேராடூன்: இமாலயத்தின் சுனாமி என்று வர்ணிக்கப்படும் வகையில், உத்ரகண்ட் மாநிலம் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதில், புகழ்பெற்ற, இந்துக்கள் புனிதமாக கருதும் கேதார்நாத் ஆலயமும் சேதமுற்றது.. வெள்ளப் பெருக்கு காரணமாக, கோவிலின் அருகில் இருந்த பல மாடி கட்டடங்கள் இடிந்து, கோவிலை சுற்றி மண்டி உள்ளன. இவற்றின் கீழ் இறந்தவர்களின் உடல்கள் இருக்கலாம் என்று கூட சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், கற்குவியல்களையும், கட்டட இடிபாடுகளையும் அகற்றாததால், கேதார்நாத் கோவிலில் வழிபாடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கற்குவியங்களை அவசரப்பட்டு அகற்றினால், கோவிலுக்கு கடுமையான சேதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் விஜய் பகுகுணா கூறுகையில், ‘கட்டட இடிபாடுகளை அகற்றுவதா, கூடாதா என்று முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. நிபுணர்களின் ஆலோசனையின்படி செயல்பட முடிவு செய்துள்ளோம், என்றார். வெள்ள பாதிப்பு காரணமாக மூடப்பட்ட கேதார்நாத் கோவில், கடந்த 11ம் தேதி முதல் வழிபாடுகள் துவக்கப்பட்டன. இருப்பினும், பக்தர்களுக்கும், கோவிலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பெரிய கற்களும், இடிபாடுகளும் உள்ளதால், பழமையான கோவிலில் வழக்கமான வழிபாடுகள் நடத்த முடியவில்லை.