கும்பகோணம் நகரில் பெரிய கடைத் தெருவில் ருக்மணி- சத்ய பாமா சமேத ராஜகோபால
ஸ்வாமி ஆலயம் அமைந்துள்ளது.நீண்ட நாட்களாக மகப்பேறு இல்லாத தாய்மார்கள் இங்குள்ள
சந்தானகிருஷ்ண விக்ரத்தைத் தங்கள் மடியில் வைத்துப் பிராத்தித்தால் புத்திரப்
பாக்கியம் பெறுவார்கள். ஒவ்வொரு மாதமும் ரோகினி திருநட்சத்திரத்தன்று காலை
நேரத்தில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், மாலையில் பிராகார புறப்பாடும் நடைபெறுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி திருவிழா இங்கு வெகு விமர்சையாக நடக்கிறது.
வட இந்தியாவில், சுதாமன் என்று அழைக்கப்படும் குசேலருக்கு குஜராத் மாநிலம்,
போர்பந்தரில் (காந்தி பிறந்த இடம்) மிகவும் பழமையான கோயில் ஒன்று உள்ளது. இந்தக்
கோயில் சுவர்களில் கிருஷ்ண பகவானின் லீலைகளை ஓவியங்களாக வடித்துள்ளனர். குசேலர்
அன்போடு கொண்டு வந்த அவலில் ஒரு பிடியை கிருஷ்ணர் எடுத்துச் சாப்பிடும் காட்சியும்
அதில் ஒன்று. குசேலர், தன் வாழ்நாளில் பயன்படுத்திய சில பாத்திரங்களும்
அங்குள்ளன.
ஒருசமயம், விநாயகரை பூஜித்துக்கொண்டிருந்த யசோதை, அதற்காக பலகாரங்கள் செய்யத்
தொடங்கிய போது, கண்ணனின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டாள். காரணம்,
பிள்ளையார் பூஜைக்காக செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை அவன் உண்டுவிடக்கூடாது
என்பதற்காகத்தான். ஆனால் கண்ணனோ தாவி தாவிக் குதித்து விநாயகரின் முன் நின்றார்.
கண்ணனுக்கு விநாயகரே தன் தும்பிக்கையால் கொழுக்கட்டைகளை எடுத்து ஊட்டி விடத்
தொடங்கினார். அதைப் பார்த்துவிட்ட யசோதை, மெய்சிலிர்த்து மெய்மறந்து நின்றாள்.
அழகான அற்புதமான இந்தக் காட்சியை உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் கண்டு ரசிக்கலாம்.