சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த போது, அங்கு அர்ச்சகர் ஒருவர் இலை விபூதி மகிமையைப் பற்றிக் கூறினார். அந்தப் பன்னீர் இலைக்கு மற்றொரு பெயர் பன்னிரு கை இலை என்பதாம். அந்த இலையின் அமைப்பு முருகனின் கை போன்றும் உள்ளது. அடிப்பாகம் அகன்று, மேலே குவிந்து அவனது வேல் போலவும் உள்ளது. இரு பக்கமும் ஆறு வீதம் பன்னிரண்டு நரம்புகள் நீண்டு முழுமையாக உள்ளன. இந்த இலையில் வைத்துப் பூஜித்துத் தரும் விபூதியானது பல மருத்துவ குணங்களுடன் மகத்தான பல மகிமைகளைக் கொண்டது. ஸ்ரீ ஆதிசங்கரர், இத்தலத்திற்கு வந்தபோது இலை விபூதியைச் சிறிது நீரில் போட்டுப் பருகி தன் வயிற்று வலி நீங்கி இங்கு சுப்ரமணிய புஜங்கம் பாடியதாகக் கூறுகிறார்கள். இவ்வளவு தெய்வீகமான திருச்செந்தூர் இலை விபூதியைப் பெற்று பல நல்ல பலன்களுடன் முருகனின் அருளையும் பெறுவோம்.