பதிவு செய்த நாள்
12
அக்
2013
09:10
திருப்பதி: திருப்பதி பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான, நேற்று காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகனத்தில், மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார். நேற்று காலை, செந்நிற பட்டாடை, செந்நிற மாலை அணிந்து, ஏழு குதிரைகள் பூட்டிய, சூரிய பிரபை வாகனத்தில், ஸ்ரீமந்நாராயணராக, மலையப்ப சுவாமி எழுந்தருளினார். பின் பக்தர்கள் புடைசூழ, நான்கு மாட வீதிகளை வலம் வந்தார். இரவு, வெண்மை நிற பட்டாடை, வெண்மை நிற மாலை அணிந்து, சந்திர பிரபை வாகனத்தில், மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வீணாகும் தேங்காய்: திருமலையில், ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள, அகண்டத்திற்கு அருகில், பக்தர்கள் தேங்காய் உடைப்பது வழக்கம். சிதறு தேங்காய்களை சேகரித்து, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் முன்னிலையில், மூட்டைகளாக கட்டுவர். இவ்வாறு சேகரிககப்படும் தேங்காய், அன்னதான கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்பட்டது. பிரம்மோற்சவத்தையொட்டி, அதிக தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இரண்டு நாட்களாக, சேகரிக்கப்பட்ட தேங்காய், மூட்டைகளாக கட்டப்பட்டு, பேடி ஆஞ்சநேயர் கோவில் அருகில், அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், அன்னதானக் கூடத்தில், தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டதால், தேங்காய் சேர்க்காமல், உணவு தயாரிக்கப்பட்டது. பிரம்மோற்சவத்திற்கு வந்த பக்தர்களுக்கு, அதிக வகையில், உணவு தயாரிக்க முடியவில்லை.
பிரசாதம் தட்டுப்பாடு: திருச்சானூர் பத்மாவதி கோவிலில், மடப்பள்ளி புதுப்பிப்பு பணி நடைபெறுவதால், லட்டு பிரசாத வினியோகம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கூடுதலாக தேவைப்பட்ட லட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்டு, ஒரு லட்டு, 25 ரூபாய் என பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தினமும், குறைந்தபட்சம், 10 ஆயிரம் லட்டு வரவழைக்கப்பட்டது. தற்போது, மடப்பள்ளி பணிகள் முடிந்த நிலையில், லட்டு தயாரிக்கும் பணி துவங்கவில்லை. திருமலையில் இருந்து, லட்டு வரவழைக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த, இரண்டு நாட்களாக, ஆர்ஜித சேவை டிக்கெட் வாங்கியவர்களுக்கு மட்டும், 10 ரூபாய் விலையில், லட்டு விற்கப்படுகிறது. தர்ம தரிசன பக்தர்களுக்கு, லட்டு வழங்கப்படுவதில்லை. அதிருப்தி அடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.