பதிவு செய்த நாள்
12
அக்
2013
10:10
வத்திராயிருப்பு: அனைத்து சாதி, மதத்தினரும் இணைந்து கொண்டாடும், வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா துவங்கியது. வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்றது, முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா. ஒருவாரம் நடைபெறும் இவ்விழாவின் முதலில், கலைவிழா துவங்கி, 6 நாட்கள் நடைபெறும். ஏழாவது நாளில் தேரோட்டம் நடைபெறும். இதன் துவக்க விழா, வி.பி.எம். மகளிர் கல்லூரி தலைவர் சங்கர் தலைமையில் நடந்தது. மூத்த உறுப்பினர் கரம்சந்த் நல்லுசாமி வரவேற்றார். காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராதாகிருஷ்ணன் விழாவை துவக்கினார். சாதி, மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ராதா கிருஷ்ணன் ஏ.டி.ஜி.பி., பேசுகையில் ,""அந்தந்த சமுதாயத்தினர், மதத்தினர் கொண்டாடும், எத்தனையோ விழாக்களை, நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கு அனைத்து மதத்தினரும், சாதியினரும் இணைந்து கொண்டாடுவது, மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. இங்குதான் மதம் என்பது மனிதனை பிரிக்கவில்லை. ஜாதி, மதங்களை கடந்து, இந்த விழா நடப்பதற்கு காரணம், கடந்த 61 ஆண்டுகளுக்கு முன்பே, இங்குள்ள மக்கள் மனதில், நல்ல விதை விதைக்கப்பட்டுள்ளது.
அது ஆலமரமாக வளர்ந்து, இன்று உங்களுக்கு (மக்களுக்கு) பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மரத்தை பாதுகாத்து, நமது பிள்ளைகள், பேரன்கள் என, வரும் தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டியது, உங்கள் கடமை, என்றார். மதுரை கிறிஸ்தவ மைய ஒருங்கிணப்பாளர் ஸ்டீபன் முத்து,"" விழாவின் பேரில், சண்டை, சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், மனிதநேயத்தை வளர்க்கும் ஒரு விழாவாக, இத்திருவிழா உள்ளது. சாதி,மத, ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்து, விழாவை துவக்குகிறீர்கள். இது போன்ற விழா, இங்குமட்டும் இல்லாது, இந்தியா முழுவதும் பரவ வேண்டும். மனித நேயத்தைத்தான், அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. அதை இங்கு, நீங்கள்(மக்கள்) மிகவும் செம்மையாக செய்து கொண்டிருக்கிறீர்கள்,என்றார். மதுரை டாக்டர் சையத் பாசுதீன்,"" ஒரு இந்து சமய பக்த சபையில், ஒரு முஸ்லிம் உறுப்பினராக உள்ளதை, எங்காவது பார்த்திருக்கிறீர்களா? ஆனால் அதை, இங்குதான் பார்க்க முடிகிறது. உலகத்தில் எங்கும் இல்லாத சமய நல்லிணக்கம், இங்கு சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இங்கு விழா துவங்குவதற்கு முன், வாசிக்கப்படும் நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழியை, ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களிலும் வாசிக்கச் செய்ய வேண்டும்,என்றார். கருவூலத்துறை மண்டல இயக்குனர் முத்துப்பாண்டி, மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி., சியமளாதேவி, ஸ்ரீவி., டி.எஸ்.பி., ஆனந்த பிரகாசம் பேசினர். பக்தசபா செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.