பதிவு செய்த நாள்
12
அக்
2013
10:10
பழநி: பழநி திருஆவினன்குடி பகுதியில், சரவணப்பொய்கை அருகே, ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, முடிகாணிக்கை நிலையத்தை அகற்ற, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழநி நகரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, திருஆவினன்குடி கோயிலை சுற்றியுள்ள தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன. சரவண பொய்கை அருகே 50 அடி ரோட்டை ஆக்கிரமித்து, கோயில் நிர்வாகம் கட்டியுள்ள முடிகாணிக்கை நிலையத்தை அகற்றும்படி, நகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டது. அகற்றாவிட்டால், நகராட்சியே அகற்றப்போவதாக அறிவித்தது. பழநி கோயில் நிர்வாகம், குடிநீர் வரி உட்பட நகராட்சிக்கு 2 கோடி ரூபாய் வரை வரிபாக்கி வைத்துள்ளது. இது குறித்து நகராட்சி பலமுறை கேட்டும், கோயில் நிர்வாகம் செலுத்தவில்லை. இந்நிலையில், முடிகாணிக்கை நிலையத்தை அகற்றும் முடிவை, நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையர் சரவணக்குமார் கூறுகையில், ""ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முடிக்காணிக்கை நிலையத்தை, அகற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கும் வரிவசூலுக்கும் சம்மந்தமில்லை, என்றார். பழநிகோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்,""வாடகை, சொத்துவரிகளில், கோயிலுக்கு, சில வரிவிலக்குகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது. நகராட்சிக்கு 7 லட்ச ரூபாய் தான் வரிபாக்கியுள்ளது. அதை செலுத்துவதாக கூறியுள்ளோம். முடிகாணிக்கை நிலையத்தை அகற்ற, கால அவகாசம் தேவைப்படுகிறது, என்றார்.