பதிவு செய்த நாள்
12
அக்
2013
10:10
சேலம்: சேலத்தில், , நவராத்திரி அலங்கார போட்டி நடந்தது. சேலத்தில், காலைக்கதிர் நாளிதழ் சார்பில், நவராத்திரியை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான அலங்கார போட்டி நடத்தப்படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஏராளமான மாணவ, மாணவியர் போட்டியில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதன்படி, முன்பதிவு செய்து கொண்ட கிச்சிபாளையம் ஜெய்நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, சோளம்பள்ளம் சின்மயா வித்யாலயா பள்ளிகளில் நேற்று நவராத்திரி அலங்கார போட்டி நடந்தது. ஐந்து வயது முதல், 10 வயது வரை உள்ள மாணவ, மாணவியருக்கு போட்டி நடத்தப்பட்டது. இதில் மூன்று பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டன. அதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன. ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர் தத்ரூபமாக கடவுள்களை போல காட்சி தர வேண்டும் என்பதற்காக, சிறப்பு முயற்சிகளை எடுத்திருந்தினர். மாணவ, மாணவியர் பலர் முப்பெரும் தேவியரான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி போல வேடமணிந்து வந்தனர். மாணவ, மாணவியரை மற்ற மாணவர்கள் வெற்றி பெற செய்வதற்காக ஊக்கம் அளித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு காலைக்கதிர் நாளிதழுடன் இணைந்து, வாய்க்கால் பட்டரை ஜெய்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்ன திருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளியும் இணைந்து, பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.