பதிவு செய்த நாள்
12
அக்
2013
10:10
பழைய வத்தலகுண்டில் 600 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் 12 வகையான அலங்காரங்களை செய்து கொலு அமைத்து சமத்துவ நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர். திண்டுக்கல் அடுத்த பழைய வத்தலகுண்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து மதத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் நவராத்திரியை முன்னிட்டு கொலு அமைத்து சிறப்புப் பூஜைகள் செய்து வருகின்றனர், இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழாவையொட்டி இவர்கள் பிருந்தாவனம், கைலாயம், சிவன் கோயில், பெருமாள் கோயில், நவராத்திரி கொலு நாயகி துர்கா தேவி, பழநி மலை ரோப்கார், விஞ்ச், பார்வதி, சரஸ்வதி, மகாலட்சுமி, விநாயகர் உள்பட 12 வகையான அலங்காரங்களை செய்து கொலு அமைத்துள்ளனர். நவராத்திரியையொட்டி ஒன்பது நாளும், இந்த கொலு அலங்காரங்களுக்கு மாணவ, மாணவிகள் பூஜைகள் செய்து வழிப்பட்டு வருகின்றனர். தினசரி இரவு ஆன்மிகச் சொற்பொழிவுகள், மாணவ மாணவிகள் கும்மி பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாணவர்களே இக்கொலுவை அமைப்பதால் அவர்களுக்கு சிறுவயதிலே ஆன்மிகத்துடன் நல்லொழுக்கம் வளர உதவியாக இருக்கும் என பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.