பதிவு செய்த நாள்
14
அக்
2013
10:10
கோவை : கோவையில் நேற்று நவராத்திரி விழாவையொட்டி, இளைஞர்கள் "வேசுக்கோ, தீசுக்கோ கோஷத்துடன், இருகைகளிலும், வயிற்றுப்பகுதியிலும் கத்தியால் குத்தி, ரத்தம் சொட்டச் சொட்டநேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை ரங்கேகவுடர் வீதியில் அமைந்துள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் 150 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா, கடந்த 5ம் தேதி துவங்கியது. நேற்று (13ம் தேதி) வரை அம்மனுக்கு வெவ்வேறு விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டன. நவராத்திரி உற்சவத்தின் நிறைவில், தேவாங்க சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இஷ்ட தெய்வமான சவுடம்மனை நினைத்து, தங்கள் குல மக்கள் செல்வ செழிப்புடன் இருக்கவும், கோரிக்கைகள் நிறைவேறவும், தங்களது இரு கரங்களிலும், வயிற்றிலும் கத்தி போட்டு, நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். அதன்படி, பக்தர்கள் தங்கள் உடலில் இரு கைகளிலும், வயிற்றிலும் தங்களுக்கு தாங்களாகவே கத்தி போட்டு கொண்டனர். ரத்தம் சொட்டச்சொட்ட கோவை தெருக்களில் வலம் வருவது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்ச்சி.இந்த ஆண்டு சாய்பாபா காலனி அண்ணாமலை ரோட்டிலுள்ள விநாயகர் கோவிலிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கத்தி போட்டுக்கொண்டு, தெலுங்கு மொழியில், "வேசுக்கோ, தீசுக்கோ என்று கோஷம் எழுப்பி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் மேட்டுப்பாளையம் ரோடு வழியாக ரங்கே கவுடர்வீதியை அடைந்தது. அங்கிருந்து ராஜவீதியிலுள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலை அடைந்தது. இளைஞர்கள் ஒவ்வொருவரும், பெரிய இரு கத்திகளால் தங்களது தோள்பட்டைக்கு கீழ் கைப்பகுதியில் வெட்டிக் கொண்டனர். கைகளில் கத்திபட்டு, ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. இளைஞர்களின் உறவினர்கள், மஞ்சள் நிற பன்னாரி பொடியை தூவி ரத்தம் சொட்டுவதை கட்டுப்படுத்தினர். முன்னதாக, சாய்பாபா காலனி நெசவாளர் காலனியிலுள்ள விநாயகர் கோவிலில் தங்கபாகு கலச திருமஞ்சன கும்ப தீர்த்தத்துக்கு புண்யாகவாசனம் செய்து, கத்தியோடு அம்மன் அழைத்து வரப்பட்டார். பின், அம்மனுக்கு காலை 10.00 மணி அளவில் மஹா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. கத்தி போடும் ஊர்வலத்தில் தேவாங்க சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். நகரின் முக்கிய வீதிகளான அழகேசன்ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பூமார்க்கெட்,தெப்பக்குளம்வீதி, ரங்கேகவுடர் வீதி, சுக்ரவார்பேட்டை, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி ஆகிய இடங்களில் திருவிழா ஊர்வலமும், கத்திபோடும் நிகழ்ச்சியும் நடந்ததால், இந்த ரோடுகளை பயன்படுத்துபவர்களுக்கு, மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.