பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
திருப்பூர்: திருப்பூர் கோவில்களில், குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.விஜயதசமி அன்று, குழந்தைகளுக்கு எழுத்தறிவுக்கும் வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருப்பூர் ஐயப்பன் கோவிலில் நடந்த அந்நிகழ்ச்சியில், குழந்தைகளின் நாக்கில் தேன் தொட்டு வைத்து, தங்க ஊசியால் "ஹரி ஓம் நமக என எழுதப்பட்டு, அரிசியில் குழந்தைகள் கை பிடித்து, "அ எழுதப்பழக்கி விடப்பட்டது. இதையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜையும் நடந்தது.நேற்று காலை 6.00 முதல் 1.00 மணி வரை நடந்த இந்நிகழ்ச்சியில், 2,000 குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் நடந்தது. பங்கேற்றவர்களுக்கு, சிலேட், பென்சில், வாய்ப்பாடு, புத்தக பை ஆகியவை வழங்கப்பட்டன. ஐயப்பன் கோவில் தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் கோபால், செயலாளர் மணி, துணை செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் முருகேசன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர். அறம் அறக்கட்டளை சார்பில், விஸ்வேஸ்வரர் கோவிலில் வித்யாரம்பம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். எழுத்தாளர்கள் மற்றும் பேராசிரியர்களான ஜே.டி.குரூஸ், அரவிந்தன் நீலகண்டன், சீனிவாசன், ஜடாயு, வெங்கடேசன், சுற்றுசூழலியல் நிபுணர் சரஸ்வதி உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு எழுதப்பழக்கினர். 170 குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு, சிலேட், வாய்ப்பாடு, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டன.
பாலக்காடு: விஜயதசமி நாளான நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி கேரளத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்றது. கோவில் தந்திரிகள், குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் விதமாக, இனிப்பை வழங்கி, நாக்கில் தங்க மோதிரத்தால் அட்சரம் எழுதி அரிசியில் ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நம என்று கையை பிடித்து எழுதி கற்றலை துவக்கி வைத்தனர். கேரள மாநிலம் மலப்புரம் , திரூர் அருகேயுள்ள துஞ்சன் பரம்பு கோவில், பாலக்காடு மாவட்டம் கல்லேக்குளங்கரை ஏமூர் பகவதி கோவில், சித்தூர் அருகேயுள்ள துஞ்சன் மடம் கோவில், கொடுந்திரப்புள்ளி கிராமம் அயப்பன் பெருமாள் கோவில், அய்யப்புரம் ஸ்ரீ பெருமாள் கோவில், வடக்கன்துறை திருப்புராய்க்கல் பகவதி கோவில், புத்தூர் திருப்புராய்க்கல் பகவதி கோவில், மீன் குளத்தி பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் "விஜயதசமி விழா வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
திருவனந்தபுரம்: விஜயதசமி நாளை முன்னிட்டு, கேரள கோவில்களில் நேற்று, வித்யாரம்பம் எனப்படும், சிறு குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் நிகழ்ச்சி, பாரம்பரிய உத்வேகத்துடன் விமரிசையாக நடந்தது. நெல் பரப்பிய தட்டில், ஹரி ஸ்ரீ என எழுதிய குழந்தைகள், தங்கள் கல்வியை துவக்கின. இதில், குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள் பெருந்திரளாக கோவில்களில் பங்கேற்றனர்.