பதிவு செய்த நாள்
19
அக்
2013
10:10
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே உன்னா மாவட்டத்தில் உள்ளது தாண்டியாகேரா கிராமம். இத்தனை நாள், வெளி உலகத்திற்கு தெரியாமல், அமைதியுடன் இருந்த இந்த கிராமம், கடந்த இரு தினங்களாக அல்லோகலப்பட்டு வருகிறது. ஒரே இரவில், சுற்றுலா தலமாக மாறிவிட்ட இக்கிராமத்தில் தற்போது, உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் குவிந்துள்ளனர். சட்டம், ஒழுங்கு குலையாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா?. அங்குள்ள தங்க புதையல் தான். 19ம் நூற்றாண்டில், இப்பகுதியை ராஜாராம்பக்சிங் என்ற மன்னர் ஆட்சி செய்தார். அப்போது, இக்கிராமத்தில் ஒரு கோட்டையை கட்டினார். ஆங்கிலேயர்களுடன் 1857ல் ஏற்பட்ட போரில் மன்னர் ராஜாராம்பக்சிங் வீர மரணம் அடைந்தார். அப்போது இருந்தே கோட்டையில் தங்க புதையல் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அப்பகுதிக்கு சென்ற சிலர் கோட்டையைச் சுற்றி பார்க்கும் போது, வெள்ளிக் காசுகளை கண்டெடுத்தனர். கோட்டையில் பெரும் புதையல் இருப்பதாக தாண்டியாகேரா கிராமத்தில் வழி, வழியாக கதைகள் பேசப்பட்டு வந்தன.
சாது கண்ட கனவு : இந்நிலையில், இக்கிராமத்தில் வசித்து வரும் சாதுவான, சோபன்சார்க்கார் என்பவர் ஒரு கனவு கண்டார். அதில், ராஜராராம்பக்சிங் கட்டிய கோட்டையில், ஏராளமான தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிந்தார். இது குறித்து அவர் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். ஆனால், அவர்கள் சாதுவின் பேச்சை நம்பவில்லை. அலட்சியமாக இருந்தனர். இதையடுத்து, மத்திய அரசுக்கு சோபன்சர்க்கார் கடிதம் எழுதினார். தொல்லியல் துறை களம் இறங்கியது: மத்திய அரசு, இணை அமைச்சர் மகந்த்தை அனுப்பி, ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் திருப்தியடைந்த அமைச்சர், புதையல் குறித்து தொல்லியல் துறையை கொண்டு சோதனை நடத்தலாம் என, அறிக்கை அளித்தார். இந்நிலையில், உள்ளூர் நிர்வாகமும், தங்க புதையல் குறித்து கோட்டையில் சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இந்திய தொல்லியல் துறையும், புவியியல் துறையும் இணைந்து ராஜாராம்பக்சிங் கோட்டையில் தங்க புதையல் குறித்த சோதனையை துவக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
கோர்ட்டில் மனு : இதன்படி, இன்று காலை தொல்லியல் துறை புதையல் தேடும் பணியை துவக்கியது. இதற்காக, கோட்டையில் 100 சதுர அடிக்கு பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், புதையல் குறித்த சோதனையை, கோர்ட் கண்காணிப்பின் பேரிலேயே நடத்த வேண்டும் என, வக்கீல் சர்மா என்பவர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்த மறுத்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், அடுத்த வாரத்திற்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.