பதிவு செய்த நாள்
19
அக்
2013
10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மஹா ரதம், 8 லட்ச ரூபாய் மதிப்பில் பைபர் கண்ணாடி கூண்டு அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் முக்கிய விழா கார்த்திகை தீப திருவிழா. இந்த விழாவில், பத்து நாட்கள் பஞ்சமூர்த்திகள் ஸ்வாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். இதில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருவர்.ஏழாம் நாள் விழாவில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேரில் வீதி உலா வருவர். இதில், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, 63 அடி உயரமுள்ள மஹாரதத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் வீதி உலா வந்து அருள் பாலிப்பார்.தீபத்திருவிழா முடிந்ததும் இந்த தேர்களை தேரடி வீதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படும். அப்போது மழை, வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க இரும்பு தகரத்தால் மூடி வைப்பர்.மற்ற நாட்களில் தேரின் அழகை கண்டு ரசிக்க முடியாத நிலை உள்ளது. இதனை போக்கும் வகையில் மஹாரதத்தை ஆண்டு முழுவதும் பக்தர்கள் காணும் வகையில், 8 லட்ச ரூபாய் மதிப்பில் பைபர் கண்ணாடியால் செய்யப்பட்ட கூண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தேரை சுற்றிலும் பாதுகாப்பு கவசம் போல் அமைப்பதால் தேருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது, தேரின் பொலிவும், உறுதி தன்மையும் குறையாது. இந்த முயற்சியை தொடர்ந்து மற்ற தேர்களுக்கும் பைபர் கண்ணாடி பாதுகாப்பு கவசம் அணிவிக்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.