முத்தலாம்மன் கோயில் விழா: இன்று கண்திறப்பு நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 11:10
திண்டுக்கல்: தாடிக்கொம்பு அருகே அகரம் முத்தாலம்மன் கோயில் விழா கடந்த அக்.,13ல் சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பண்டாரப் பெட்டியில் அம்மன் எழுந்தருளி, கொலு மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. அக்.18ல் பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (அக்.21) காலை 10.30 மணிக்கு அம்மன் கண் திறப்பு மண்டபத்தில், உற்சவ அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அம்மன் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி, கொலு மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாவிளக்கு, தீச்சட்டிஎடுத்தல், கரும்பு தொட்டில் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 12 மணிக்கு, புஷ்ப விமானத்தில் அம்மன் வாணக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளி, இரவு முழுவதும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும். நாளை மதியம் 1.30 மணிக்கு சொருகுபட்டை சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத்தலைவர் சக்திவேல் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் மாரிமுத்து தலைமையில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.