பதிவு செய்த நாள்
21
அக்
2013
12:10
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூங்கோவில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி உள்பிரகாரம் வலம் வருதல் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, திங்கள்கிழமை (அக். 21) காலை 8 மணிக்கு வெள்ளிச் சப்பரத்திலும், இரவு 8 மணிக்கு வெள்ளிக்கமல வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை காலையில் கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதியுலா வருதல் நடைபெறும். திருவிழா நாள்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், மாலையில் ஆன்மிக இசைச் சொற்பொழிவுகள் நடைபெறும். 11-ம் திருநாளான இம் மாதம் 30-ம் தேதி தவசுக் காட்சி, 31-ம் தேதி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி - அம்மன் திருக்கல்யாணம், காலை 9.30 மணிக்கு சுவாமி - அம்மன் பூப்பல்லக்கில் பட்டணப் பிரவேச வீதியுலா, தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா ஆகியவை நடைபெறவுள்ளன.