பக்தி செலுத்துவது என்றால், ஏதோ மிக பிரமாதமான செயல் போல் காட்டப் படுகிறது. நாமெல்லாம் அதற்கு தகுதியுடையவர்கள் தானா என்ற சந்தேகமும் சிலர் மனதில் எழுகிறது. ஆனால், ஆர்ய தர்மப்பிரகாசி என்ற நூலில், கடவுளிடம் பக்தி செலுத்த எளிய வழிகள் சொல்லப்பட்டுள்ளது. ஆத்மநிவேதனம் (தன்னையே கடவுளிடம் அர்ப்பணித்தல், தன் செயல்களின் பலனை கடவுளிடம் அர்ப்பணித்தல்) என்பது கடுமையான முறை. இதற்கு நிறைய மனப்பக்குவம், விட்டுக்கொடுக்கும் தன்மையெல்லாம் வேண்டும். ஆனால், கடவுளின் புகழைக் கேட்டல் (ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு செல்லுதல்), பாடித்துதித்தல், கோயிலுக்குப் போய் வணங்குதல், வீட்டிலேயே பூஜை செய்தல், கோயில்களிலும், ஏழைகளுக்கும் தொண்டு செய்தல் போன்ற எளிய வழிகளும் உள்ளன. இதையெல்லாம் விட எளிய வழி, ஒரு செயலைத் துவங்கும் முன், அதாவது சாப்பிடும் முன், தூங்கும் முன், பணியைத் துவங்கும் முன் ஆகிய நமது அன்றாட செயல்பாடுகளுக்குமுன் கடவுளை நினைத்தாலே போதும். நீங்களும் பக்தியாளர் என மார்தட்டிக் கொள்ளலாம்.