அன்னூர்: பூசாரிபாளையத்தில் 150 ஆண்டு பழமையான மாயவன் ஓவிலி பெருமாள் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருதரப்பினருக்கு இடையே திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்களுக்கு, நான்காம் சனிக்கிழமை திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மற்றொரு தரப்பினருக்கு ஐந்தாம் சனிக்கிழமை திருவிழா நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 4-ஆம் சனிக்கிழமை திருவிழாவைக் கடந்த வாரம் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடிச் சென்றனர். இதையடுத்து 5-ஆம் சனிக்கிழமை திருவிழா கொண்டாடுபவர்கள், கடந்த சனிக்கிழமை கோவை, திருப்பூர், ஈரோடு, மைசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளாக கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் பூட்டப்பட்டிருந்தது. அது குறித்து, அவர்கள் தாசில்தாரிடம் கேட்டபோது, 4-ஆம் சனிக்கிழமை திருவிழா கொண்டாடியவர்கள் சாவியைத் திருப்பித் தரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜைப் பொருள்களைப் பூட்டியிருந்த கோவிலின் கதவிற்கு முன்பாக வைத்து பூஜை செய்து நேர்திக்கடன் செலுத்திச் சென்றனர்.