பதிவு செய்த நாள்
23
அக்
2013
10:10
திருநெல்வேலி: பாளை.,சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. பாளை., திரிபுராந்தீஸ்வரர் (சிவன்) கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைமுன்னிட்டு, தினமும், காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்து வருகின்றன. மூன்றாம் திருவிழாவான நேற்று காலை, மாலை வேளையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சிம்ம வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (23ம் தேதி) காலையில் சுவாமி சப்பரத்திலும், மாலையில் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரும் 30ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.மாலையில் கோயில் வளாகத்தில் தேவாரம், திருமுறை, பக்தி மெல்லிசை கச்சேரி, பரதநாட்டியம், பார்வதி கல்யாணம் பொம்மலாட்டம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஏற்பாடுகளை திருச்சிற்றம்பலம் வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.