பதிவு செய்த நாள்
25
அக்
2013
10:10
காரைக்குடி: சுற்றுலாத்தலமாக அரசால் அறிவிக்கப்பட்ட சங்கரபதிகோட்டையில்,தமிழர் பண்பாட்டு மனித நேய மன்றம் சார்பில்,வெள்ளையரை எதிர்த்து போராடி உயிர்நீத்த வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது. காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் வழியில், வனத்துறைக்கு சொந்தமான பகுதியில், சங்கரபதி கோட்டை உள்ளது.மருது சகோதரர்களின் பயிற்சி பாசறையாகவும், புகலிடமாகவும், இந்த சங்கரபதி கோட்டை விளங்கியதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் காலத்துக்கு பின், சங்கரபதி கோட்டையில் உள்ள அறைகளின், மேல் சுவர்கள் பெயர்ந்த நிலையில், தூண்கள் மட்டுமே மிஞ்சி உள்ளன.இந்த கோட்டையை சுற்றுலாத்தலமாக்க வேண்டும், என மானாமதுரை எம்.எல்.ஏ., குணசேகரன், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கலாம், என்றார். இதுவரை அப்பகுதியில், சுற்றுலாத்துறையால் எவ்விதமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையில், அமராவதிபுதூர் ஊராட்சி தலைவி பொன்னழகி, இந்திய ஐக்கிய பொதுவுடைமை கட்சி மாநில செயலாளர் சந்திரன் உட்பட மற்றும் பலர் இப்பகுதியில் நேற்று பொங்கல் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராஜ்குமார் கூறும்போது: இந்த இடம் வரலாற்று சிறப்பு மிக்கது. கடந்த 1801ல், மருது சகோதரர்கள் இங்கு, மறைந்திருந்து, வெள்ளையரை எதிர் கொண்டனர். அவர்களை காப்பாற்ற 300க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இங்கு உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, பொங்கல் வைத்து வழிபட்டுள்ளோம். சாதி, மதங்களை கடந்து தமிழர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்துள்ளோம். சுற்றுலாத்தலமாக தமிழக அரசு வெளியிட்ட, அறிவிப்பு அப்படியே நின்று விடக்கூடாது,என்றார். நாம்தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன், தமிழர் பண்பாட்டு மனித நேய மன்ற துணை தலைவர் முகமது மீரான், இந்திய ஐக்கிய பொதுவுடைமை கட்சி மாநில செயலாளர் சந்திரன், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.