*வெற்றிக்கான ரகசியம் ஒருமுகப்பட்ட மனதுடன் ஒரு செயலில் ஈடுபடுவது தான். மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை மட்டுமே தேவை என்று கருதுவது தவறு. *எந்த தொழில் என்றாலும் மனதை ஒருமுகப்படுத்த வேண்டியது அடிப்படையானது. கஷ்டப்பட்டு பணி செய்வதை விட இஷ்டப்பட்டு வேலை செய். வெற்றி பெறுவாய். *தொழிலுக்குத் தேவையான சூழ்நிலையே, ஒரு தொழிலாளியின் மனதை ஒருமுகப்படுத்தி ஈடுபாட்டை உருவாக்குகிறது. தொடர்ந்து முயற்சி இருக்குமானால் மனஒருமைப்பாட்டை யாரும் பெற முடியும். *காற்றைக் கூட கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், மனதைஒருமுகப்படுத்த அதை விடகடினமானது. அடித்தாலும், அணைத்தாலும் அது வழிக்கு வராது. இன்றைய வாழ்க்கை முறையினால் மனதை அடக்குவது என்பது எல்லாருக்கும் பெரிய பிரச்னையாக மாறி விட்டது. அதற்காக அதை அப்படியே விட்டு விட்டால் முடிவும் வேண்டுமல்லவா! *நேர்மையும், வீரமும் நிறைந்த அர்ஜூனனே, கிருஷ்ணரிடம், அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்துவது எப்படி? என்று கேட்கும்போது, மனம் போனபடி தறி கெட்டு ஓடும் இக்கால மனிதர்களின் நிலையை சொல்லத் தேவையில்லை. *உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை இருக்கிறது. காற்று வீசும். நெருப்பு சுடும். நீர் நில்லாமல் ஓடும். அதுபோல மனதிற்கும் தனிப்பட்ட குணங்கள் உண்டு. *மனம் எல்லா இடத்திலும் மூக்கை நுழைக்கும். பைத்தியம் போல கூத்தாடும்.அர்த்தமில்லாமல் ஆசைப்படும். நினைவு அலையில் மிதக்கும். ஆகாயத்தில் கோட்டை கட்டும். வேலையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நினைத்து கவலை கொள்ளும். *மனதைக் கட்டுப்படுத்த எண்ணினால், முதலில் அதைச் சிதறடிக்கும் சூழ்நிலையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதற்காக உலகத்தை விட்டே ஓடி விடுவது தான் வழி. என்று தவறாக எண்ணி விடாதீர்கள். *கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை மனதின் வாகனங்கள். தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையில் சிக்கி மனம் சிதறி விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். மனதைக் கட்டுப்படுத்த புத்தியின் உதவி மிகவும் தேவை. *ஏன் மனதை அடக்க வேண்டும் என்று சிலருக்கு சந்தேகம் உண்டாகும். எதையும் அறிவால் அறிவது நல்லது. இல்லா விட்டால் அனுபவம் ஒருநாள் உனக்கு அதை உணர வைத்து விடும். *கட்டுப்பட்ட மனமே, அரிய பெரிய செயல்களைச் சாதிக்கும் வல்லமை பெற்றிருக்கும். இல்லாவிட்டால் சாதாரண செயலைக்கூட செய்ய முடியாமல் சிரமப்பட நேரிடும். *எல்லையற்றசக்தி படைத்தது மனம். ஆனால், மக்களில்பெரும்பாலானவர்கள்பலவீனமான மனதுடன் வாழ்நாள் முழுவதும்தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு காலத்தைவீணாக்குகிறார்கள். *எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள். வேண்டாத தீய எண்ணம் மனதிற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். தூய்மையான மனம் எளிதில் ஒருமுகப்படும். அப்போது எந்தசெயலில் ஈடுபட்டாலும் வெற்றி எளிதில் கிட்டும். -புரு÷ஷாத்தமானந்தர்