தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். அது வெந்நீராக இருப்பது அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும்.
சகோதரிகளுக்கு பரிசு: தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.