பதிவு செய்த நாள்
30
அக்
2013
11:10
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் உள்ள, ரங்கநாதர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில், தொல்லியல் துறை அகழாய்வு செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஸ்ரீரங்கத்தில், புகழ் பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள, ஆயிரம் கால் மண்டபம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதன் அடிப்பகுதி, மண்ணில் புதைந்திருந்தது சமீபத்தில் தெரிய வந்தது. வரலாற்று ஆவணங்களின் படி, கோவிலில் ஏழு கோபுரங்கள் இருக்க வேண்டும். தற்போது, நான்கு கோபுரங்கள் மட்டுமே உள்ளன. மற்ற, மூன்று கோபுரங்கள் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தை சுற்றி, அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான மத்திய அரசின் அனுமதி, சமீபத்தில் தமிழக தொல்லியல் துறைக்கு கிடைத்தது. கூடிய விரைவில் அகழாய்வு பணி துவங்கும் என, தெரிகிறது. அதே போல், ஈரோடு மாவட்டம், கொடுமணல்; தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டனம் உட்பட தமிழகத்தில், எட்டு இடங்களில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்யவும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
- நமது நிருபர் -