பதிவு செய்த நாள்
06
நவ
2013
10:11
டேராடூன்: உத்தர்கண்ட் மாநிலத்தில், கடும் குளிருடன், பனிப்பொழிவு துவங்கியுள்ளதால், பிரசித்தி பெற்ற, கேதார்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி கோவில்கள் மூடப்பட்டன. இமயமலை மாநிலங்களில் ஒன்றான, உத்தர்கண்டில், பனிமலைகள் சூழ்ந்த பகுதியில், இந்த நான்கு கோவில்களும் உள்ளன. வழக்கமாக, கடுங்குளிர் காலத்தில் மூடப்படும் இக்கோவில்கள், மூன்று மாதங்களுக்குப் பின் தான் திறக்கப்படும். அந்த வகையில், நேற்று முன்தினம், கங்கோத்ரி கோவில் மூடப்பட்டது. நேற்று, கேதார்நாத் சிவன் கோவில் மற்றும் யமுனோத்ரி அம்மன் கோவில் மூடப்பட்டன; 18ம் தேதி, பத்ரிநாத் விஷ்ணு கோவில் மூடப்படுகிறது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், கேதார்நாத் சிவன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள், மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். ஜூன் மாதம் நிகழ்ந்த பேய்மழை மற்றும் பெருவெள்ளத்தில், கோவிலுக்கு வரும் சாலை வழிகள் சிதைந்து விட்டதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது. பக்தர்கள் அதிகமாக வரவில்லை.