பதிவு செய்த நாள்
08
நவ
2013
10:11
மதுரை: மதுரையில், ஐயப்ப சீசன் நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, மீனாட்சி கோயில் நடை சாத்தாமல் நாள் முழுவதும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு போலீசார் பரிந்துரைத்து உள்ளனர். ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதியின்போது, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகின்றனர். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான வாகனங்களில் வருவதால், நெரிசலால் நகரே ஸ்தம்பிக்கிறது. எல்லீஸ்நகர், தெற்குமாரட்வீதி, மாட்டுத்தாவணி, பைபாஸ் ரோடு போன்ற இடங்களில் "பார்க்கிங் வசதி செய்து கொடுத்தும், போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், மீனாட்சி கோயிலில் நடை சாத்தப்படும் நேரத்தில் ஐயப்ப பக்தர்கள் வருவதே நெரிசலுக்கு காரணம் என தெரியவந்தது. காலை 11.30 மணிக்கு, மதுரைக்கு வரும் பக்தர்கள், நடந்தோ, ஆட்டோவிலோ கோயிலுக்கு செல்ல மதியம் 12.30 மணி ஆகிவிடுகிறது. அப்போது நடைசாத்தப்பட்டு விடும். மாலை 4 மணிக்கு நடை திறக்கும்வரை, கோயில் பகுதியிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த இடைப்பட்ட நேரத்தில், கூடுதல் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களும் மதுரை வருவதாலும், ஏற்கனவே காத்திருக்கும் வாகனங்களாலும் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நாள் முழுவதும் அம்மனை தரிசிக்கும் வகையில், நடைசாத்தப்படாமல் கோயிலை திறக்குமாறு, அதன் நிர்வாகத்திற்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இதை கோயில் நிர்வாகம் ஏற்கவில்லை. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ""இக்கோயில் நடைமுறைகள் அனைத்தும் சிவஆகம விதிப்படி நடக்கிறது. நடைசாத்தப்படும் நேரம் பூதகணங்களுக்குரியது என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே, போலீஸ் பரிந்துரையை ஏற்கவில்லை, என்றனர்.
மறுப்பு: மீனாட்சி கோயிலில், மத்திய உளவுத்துறை அறிவுரைபடி பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடை சாத்தப்பட்ட பின், கோயிலின் ஆடிவீதிகளில் கூட பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், சித்திரை வீதிகளில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதை தவிர்க்க, நடைசாத்தப்பட்ட நேரத்தில் ஆடிவீதிகளில் பக்தர்களை அனுமதித்தால், கோயில் கடைகளில் அவர்கள் "ஷாப்பிங் செய்ய முடியும்; ஆயிரங்கால் மண்டபத்தை சுற்றிபார்க்க முடியும் என போலீசிற்கு கோயில் நிர்வாகம் பரிந்துரைத்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இதை போலீஸ் ஏற்க மறுத்துவிட்டது.