கந்த சஷ்டி நாளில் பூட்டிக்கிடந்த முருகன் கோயில்: பக்தர்கள் வேதனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2013 11:11
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் நுழைவு வாயிலில் உள்ள குருமுருகன் கோயில் கந்தசஷ்டியான நேற்று பூட்டி கிடந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர். நெல்லையப்பர் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு கோயிலில் உள்ள முருகன் சன்னதிகளில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் நுழைவு வாயிலில் உள்ள குருமுருகன் கோயிலில் கந்தசஷ்டியான நேற்று பூட்டி கிடந்தது. இதனால் குருமுருகனை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கந்தசஷ்டியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள வருமானம் குறைவாக உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்த நிலையில், அறநிலையத்துறை கட்டப்பாட்டில் உள்ள குருமுருகன் கோயிலில் கந்த சஷ்டியன்று பூட்டி கிடந்தது பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது குறித்து கோயில் அலுவலரிடம் கேட்டபோது, நெல்லையப்பர் கோயிலில் உள்ள அம்பலவான சுவாமி, குருமுருகன், கருப்பசாமி போன்ற சன்னதிகளில் ஒரு கால பூஜை மட்டுமே நடத்தப்படுகிறது. அதன் படி குருமுருகன் கோயிலில் நேற்று காலை வழக்கம்போல் பூஜை நடந்தது என தெரிவித்தார்.