பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
பொள்ளாச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில்,முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார்.பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரத்திருவிழா கடந்த 3ம் தேதி காலை 10:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி வரை நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு சிவபெருமானிடம் இருந்து சுப்பிரமணிய”வாமிக்கு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 3:00 மணி முதல் மருதாசல அடிகள் முன்னிலையில் சூரசம்ஹார திருவிழா துவங்கியது. கோவிலில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு எஸ்.எஸ்.கோவில் வீதி கிழக்கு வழியாக சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திக்கும் சந்திப்பில் முதல் சூரன் கஜமுகா சூரன் வதை நடந்தது. பின் தெப்பக்குளம் வீதியும், வெங்கட்ரமணா வீதி சந்திக்கும் சந்திப்பில் இரண்டாவது சூரன் சிங்கமுகாசூரன் வதையும்; வெங்கட்ரமணா வீதி வழியாக சென்று ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் (தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எதிரில்) மூன்றாவது சூரன் பானுகோபன் வதையும் நடந்தது. பின் உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையத்தில் நான்காவது சூரன் சூரபத்மன் வதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சூரனை வதம் செய்வதை கண்டு களித்தனர். கந்த சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் வாழைத்தண்டு, இஞ்சி மற்றும் பழங்கள், தயிர் ஆகியவை உண்டு விரதத்தை முடித்தனர். சூரம்ஹார விழாவையொட்டி அசாம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், பாதுகாப்புகாகவும், போக்குவரத்தை சீராக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து, இன்று காலை 10:00 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; நாளை மாலை 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவ பூர்த்தியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.