பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் மற்றும் கொங்கணகிரி கந்த சுப்ரமணிய சுவாமி கோவில்களில் நேற்று சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.சூரசம்ஹார விழா கடந்த 2ம் தேதி இரவு துவங்கியது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து, முருகனை வழிபட்டு வந்தனர். ஆறாவது நாளான நேற்று, சூரசம்ஹாரம் நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்ரமணியர் சன்னதியில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. கொங்கணகிரி கந்த சுப்ரமணிய சுவாமி கோவிலிலும், மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவிலிலும், உற்சவர் மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பூஜை செய்து, அன்னையிடம் பெற்ற சக்திவேலுடன், சுப்ரமணியர் மயில் வாகனத்தில் போருக்கு புறப்பட்டார். வீரபாகு முன்னே செல்ல, மயில் வாகனத்தில் சென்ற சுப்ரமணியர், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன், பக்தர்கள் சக்திவேலுடன் பாய்ந்து சூரனின் தலையை கொய்தனர். போர் புரிந்து திரும்பிய, சுப்ரமணிய உற்சவருக்கு, அபிஷேக பூஜைகள் செய்து குளிர்விக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்ரமணியர், மயில் வாகனத்தில், சேவல் கொடி மற்றும் சக்தி வேலுடன் அருள்பாலித்தார். இன்று, சுப்ரமணியருக்கு திருக்கல்யாணமும், பட்டி விநாயகரை சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி விழா, கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலை 11.00 மணிக்கு சண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. நேற்று, சஷ்டியை முன்னிட்டு, காலை சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், வேத பாராயணம், அலங்கார பூஜை ஆகியன நடந்தன. மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருமுருகன்பூண்டியில் திரண்ட பக்தர்களுக்கு மத்தியில், கஜமுகாசூரன், பானுகோபன், சிங்கமுகாசூரன் மற்றும் பத்மாசூரன் ஆகிய சூரன்களை வேல் கொண்டு வதம் செய்தார். நான்கு ரத வீதிகளில் திரண்ட பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு, சுவாமியை வழிபட்டனர். இன்று காலை 11.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலும் நேற்று மாலை சூரசம்ஹார விழா நடந்தது.