பதிவு செய்த நாள்
11
நவ
2013
12:11
மகாபெரியவர் இன்று நம்முடன் வாழும் தெய்வமாக இருக்கிறார். புதுமணத்தம்பதிகள், இவரது பிருந்தாவனத்துக்கு வந்து இன்றும் மானசீகமாக ஆசி பெற்று செல்கிறார்கள். அவர் வாழ்ந்த காலத்திலும், புதுமணத்தம்பதிகளை ஆசிர்வதித்தார் என்றால், அவர்கள் பூர்ண ஆயுளுடன் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்தும் வருகிறார்கள். இதோ! பெரியவரிடம் ஆசி பெற்று இன்றும் வாழும் ஒரு வயதான தம்பதி பற்றி கேளுங்கள்.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், பூஜை செய்யும் பாக்கியம் நீலக்கல் வகையறாவுக்கு பல காலமாக இருக்கிறது. இவர்களில் ஒருவர் ராமச்சந்திர சாஸ்திரி. இவரது துணைவி அலமேலு. கோயில் கொட்டில் சாவியை வைத்திருக்கும் பாக்கியம் சாஸ்திரியிடம் இருக்கிறது. ஒரு சமயம், மகாபெரியவர் காளஹஸ்தியில் முகாமிட்டிருந்தார். ராமச்சந்திர சாஸ்திரியின் திருமணம் முடிந்ததும், சில நாட்கள் கழித்து, மகாபெரியவரிடம் ஆசி பெறுவதற்காக காளஹஸ்தி சென்றார். பெரியவரைத் தரிசித்த போது, அவர் சைகை காட்டி, அங்கேயே தங்கியிருக்கும்படி சொன்னார். சாஸ்திரி தம்பதிகளுக்கு, அவர் தங்களை அங்கே தங்கச் சொன்னதற்கான காரணம் புரியவில்லை.அன்று மதியம் மடத்து ஊழியர்கள், இருவரையும் அழைத்து, இருவரையும் அங்கேயே சாப்பிடச்சொல்லி பெரியவர் உத்தரவிட்டதாகச் சொன்னார்கள். தம்பதிகளும் அங்கேயே சாப்பிட்டனர். பிறகு பெரியவரைச் சந்தித்து, காஞ்சிபுரத்திற்கு கிளம்பலாமா? என உத்தரவு கேட்டனர். உடனே பெரியவர் ஒரு தட்டில் புடவை, வேஷ்டி, துண்டு, பிரசாதம் வைத்து வரும்படி ஊழியர் ஒருவரிடம் சொன்னார். அவற்றை தம்பதிகளுக்கு கொடுத்தார். பிறகு, ஒரு கூஜா எடுத்து வரும்படி, ஒரு ஊழியரிடம் சொன்னார். அதை சாஸ்திரிகளிடம் நீட்டிய பெரியவர், டேய்! இன்று ஆடி முதல்நாள். பெண், மாப்பிள்ளையுடன் பிறந்த வீட்டுக்கு வந்தா தேங்காய் பால் பாயாசம் கொடுப்பது வழக்கம்டா, நீ தீர்க்காயுசா இருப்பே! என்று ஆசிர்வதித்தார். சாஸ்திரி நெகிழ்ந்து போனார். பெரியவர் தன்னை பிறந்த வீட்டுக்காரன்... அதாவது, பெரியவரோடும் மடத்தோடும் ஒன்றிப் போனவன் என்று குறிப்பிட்டதை நினைத்து அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.இப்போது சாஸ்திரி பெரியவரின் ஆசிப்படி வயது 75ஐக் கடந்து துணைவியாருடன், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சந்நிதி தெருவில், ஆறு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். புதுமணத்தம்பதிகள் பலர், இந்த வயதான தம்பதிகளிடம் ஆசி பெற்று செல்கிறார்கள். போன்: 96269 40460, 044 2722 1214.