பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
ராஜபாளையம்: திருக்கார்த்திகை விழாவிற்காக, ராஜபாளையம் அருகே உள்ள கிராமங்களில், மண்விளக்குகள் தயாரிக்கும் பணியில், பலர் ஈடுபட்டு உள்ளனர். முருகப்பெருமானுக்கு உகந்தநாளான திருக்கார்த்திகை, நவ., 17ல் வருகிறது. அன்று, வீடு மற்றும் வியாபார நிறுவனங்களில், மண்ணால் தயாரான விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். இதற்காக, ராஜபாளையம் கலங்காபேரி ரோட்டில், ஆறு குடும்பங்களை சேர்ந்தவர்கள், விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட வெள்ளைச்சாமி, "" கண்மாய் மண் ஒரு லோடு வாங்கினால், பாதிக்கு மேல் கழிவு போய்விடும். மீதம் உள்ள மண்ணில், விளக்கு தயாரிக்கிறோம். மண் விலையுடன், வைக்கோல், தென்னை கழிவுகளின் விலையும் உயர்கிறது. ஒரு விளக்கு ஒரு ரூபாய் என வியாபாரிகளுக்கு தருகிறோம். அவர்கள், 1.50 காசு முதல் விற்கின்றனர். லாபம் குறைவு என்றாலும், தெரிந்த தொழில், வீட்டில் விளக்கேற்ற எங்களது உழைப்பு உதவுகிறது என, திருப்திபடுகிறோம். பீங்கான், மெழுகுவர்த்தி விளக்குகள் விற்பனையில் இருந்தாலும், மண்விளக்கை விரும்பி வாங்குகின்றனர், என்றார்.