பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
படப்பை: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, அகல் விளக்கு தயாரிக்கும் பணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. கார்த்திகை தீபம், வரும், 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அகல் விளக்கு தயாரிக்கும் பணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக நடந்துவருகிறது.படப்பை அருகே சாலமங்கலம் ஊராட்சியில் அகல் விளக்கு செய்யும் பணியில் பலர், குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:அகல் விளக்குகளை தீபம் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே விற்பனை செய்ய முடியும். ஒரு விளக்கு விலை ஒரு ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது. அகல்களின் வகைகளுக்கு ஏற்ப, விலை நிர்ணயம் செய்யப்படும். ஒரு நாளைக்கு ஒருவர், 700 முதல், 1,000 விளக்குகள் உற்பத்தி செய்வோம். அதிகபட்சம் மொத்த விற்பனையாளர்களிடம், 70 பைசாவிற்கு கொடுக்கிறோம்.இவ்வாறு, கைவினைஞர்கள் தெரிவித்தனர்.சாலமங்கலம் கணேசன் கூறுகையில், பாரம்பரியமாக நாங்கள் செய்யும் தொழில் அழிந்து வருகிறது. பொங்கல் போன்ற பண்டிகை மற்றும் சாதாரண நாட்களில் பானை விற்பனையாகும், என்றார்.