பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
மூணாறு: சபரிமலை சீசன் தொடங்குவதற்கு, இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்,பக்தர்கள் பெருமளவில் குவியும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்யாமல்,அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்கு,தமிழகம் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், கூடுதலாக குமுளி வழியாக வந்து செல்வது வழக்கம்.குமுளி,வண்டிபெரியார், சத்திரம், குட்டிக்கானம், புல்லுபாறைபகுதிகளில் பக்கதர்கள் கூட்டம், அதிகமாக காணப்படும்.சீசன் தொடங்குவதற்கு ஒரு சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில்,பக்தர்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் உள்ளன. முக்கியமாக, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படாததால்,திறந்த வெளிகள் கழிப்பிடமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குமுளி உட்பட பல பகுதிகளில் அகலம் குறைந்த ரோடுகள் மற்றும் வழியோரக் கடைகள்,விதிமுறைகளை மீறி ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால், இடையூறுகள் காத்திருக்கின்றன. இவற்றை ஒழுங்கு படுத்துவதற்கு, தேவையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.தவிர குமுளி முதல் முண்டகயம் வரை ரோட்டில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டபோதிலும்,முழுமை பெறாமல் பழுதடைந்து காணப்படுகிறது. பக்கதர்கள் கூடுதலாக பயன்படுத்தும், சத்திரம் ரோடு, சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வெளி மாநில பக்தர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில்,ஏற்கனவே தீர்மானித்தபடி அவர்களுக்கு புரியும் மொழியில், இடங்களின் பெயர் மற்றும் எச்சரிக்கை போர்டுகள் அமைக்கப்படவில்லை.பக்தர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும், என்பதை எடுத்துரைக்கும் வகையில்,துண்டு பிரசுரங்கள் வெளியிட வேண்டும். குமுளி-முண்டகயம் இடையே உள்ள பீர்மேடு அரசு தாலுகா மருத்துவமனை முக்கியத்துவம் வாய்ந்தது.இங்கு பக்தர்களின் வசதிக்காக கார்டியோலஜி,எக்ஸ்ரே பிரிவு போன்றவை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கையும் செயல்படுத்தபடவில்லை. இது போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு, அரசுத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால்,விரதமிருந்து ஐயப்பனைக் காண வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாக நேரிடும்.