பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பாலகொலா கிராமத்தில், "ஒச அண மற்றும் "சூஞ்சு பண்டிகை கொண்டாடப்பட்டது.ஊட்டி அருகேயுள்ள பாலகொலா கிராமத்தில் படகரின மக்களின் பாரம்பரிய விழா நேற்று கொண்டாடப்பட்டது.விழா குறித்து, சுவாரஸ்யமான தகவல்: கடந்த 300 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சியில், அரசின் பிரதிநிதியாக, நீலகிரியில் இருந்து கப்பம் (வரி) வசூலித்து வந்தவர் சிக்கணதொரை. அவர் தூதூரில் வசித்த பாலசெவனன் என்பவருக்கு "மணியகாரர் பட்டம் கொடுத்து, மக்களிடம் வரி வசூலிக்க ஏற்பாடு செய்து, மணியகாரருக்கு அடையாள சின்னமாக ஒரு வெள்ளி முத்திரை வழங்கியுள்ளார். அந்த முத்திரை, இன்று வரை பாலகொலாவில் ஆண்டுதோறும் நடக்கும் "ஒச அண பண்டிகையில் வைத்து பூஜை செய்யப்படுகிறது. தவிர, கோவில் பூஜைகளுக்கு உதவியாக ஒருவரை நியமித்து, அவருக்கு 3 தங்க குண்டுமணிகளை வழங்கியுள்ளனர். அத்துடன் மேலூரில் பொதுவான சிவன் கோவில் அமைத்து, ஒரு பூசாரியையும் நியமித்துள்ளனர். ஆண்டு தோறும், படகரின மக்களின் முதல் மாதமாக கருதப்படும், "தை மாதத்தில் பாலகொலா பெந்தோரணை பகுதியில், சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த விழாவில், "குண்டுமணி மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின், ஆண்கள் அனைவரும் காணிக்கை செலுத்தினர்; இந்த காணிக்கை, பூமிக்கு செலுத்தும் இந்தாண்டிற்கான புதுப்பணம் (கந்தாயம்) என கூறப்படுகிறது. மக்கள், கால்நடைகளை தீய சக்தி, கொடிய நோய், பில்லி சூனியம், பேய் பிசாசுகள் தொல்லை ஏற்படக்கூடாது என்பதற்காக, நேற்று, மேலூர், தங்காட்டில் உள்ள மகாலிங்கா கோவிலில் தீ மூட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், முன்னாள் கூடுதல் தலைமை செயலர் சுந்தரதேவன் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த படகரின மக்கள் திரளாக பங்கேற்றனர்.