செஞ்சி: செஞ்சி அருகே மழை வேண்டி , ஆண்கள் நள்ளிரவு 12 மணிக்கு மண் சோறு சாப்பிட்டு விழா எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வருமானமில்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் மழை வேண்டி, ஏரியில் உள்ள எல்லைச்சாமிக்கு நேற்று முன்தினம் இரவு ஆண்கள் ஒன்று திரண்டு விழா எடுத்தனர். இரவு 8 மணிக்கு களிமண்ணால் 108 பிள்ளையார் பிடித்து வைத்து , 108 தேங்காய் உடைத்து படையல் போடப்பட்டது. பின் எல்லைச்சாமிக்கு வெள் ளாட்டு கிடா வெட்டி, அங்கேயே சமைத்தனர். முன்னதாக 100 கிலோ அரிசியில் சாதம் வடித்து கொட்டி வைத்திருந்தனர். இரவு 12 மணிக்கு கிடாய் கறி குழம்பை சாதத்தில் கலந்து உருண்டை பிடித்து ஆண்களுக்கு வினியோகம் செய்தனர். சாதத்தை ஆண்கள் சாப்பிட்டனர். இது குறித்து கிராம பெரியவர் ஒருவர் கூறியதாவது; மழை இல்லாத போது , இது போல் விழா எடுத்து ஆண்கள் மண் சோறு சாப்பிட்டால் , மழை பொழியும் என்பது நம்பிக்கை. இதே போல் விழா 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. விழா எடுத்த பிறகு மழை பெய்து ஏரிகள் நிரம்பின. அதே நம்பிக்கை யில் மீண்டும் விழா நடத்தினோம் என்றார்.