விழுப்புரம்: திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி நடக்கிறது. விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் கோவிலில், கடந்த 350 ஆண்டுகளுக்கு முன் தேர் செய்யப்பட்டது. இது கடந்த இரண்டாண்டிற்கு முன் இயக்க முடியாத அளவிற்கு சிதலடைந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளாக இக்கோவிலில் தேர் திரு விழா நிறுத்தப்பட்டது. கோவிலின் ஏழு நிலை ராஜகோபுர திருப்பணி கட்டடத் தலைவர் குபேரன் தலைமையில், கிராம மக்கள் சார்பில் புதிய தேர் செய்யும் பணி, ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது. 37 அடி உயரமுள்ள இத்தேர், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக தயார் செய்யப்படுகிறது. இதற்கு இந்து அறநிலையத் துறை மூலம் 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் நன்கொடைகள் மூலம் இத்தேர் செய்யப்படுகிறது. தேரின் அச்சு மற்றும் சக்கரம், 2 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பில், திருச்சி பெல் நிறுவனம் மூலம் தயார் செய்யப்படுகிறது. இலுப்பை, தேக்கு மற்றும் வேங்கை உட்பட 5 வகை மரங்களைப் பயன் படுத்தி சிற்பங்கள் மற்றும் தேரின் பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. கள்ளக்குறிச்சி, அண்ணா நகரைச் சேர்ந்த கோவிந்த ராஜ் ஸ்தபதியார் தலைமை யில், பத்து ஸ்தபதியார்கள் தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.