Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவஞானபோதம் பகுதி-10 சிவஞானபோதம் பகுதி-12
முதல் பக்கம் » சிவஞானபோதம்
சிவஞானபோதம் பகுதி-11
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
02:11

எடுத்துக்காட்டு
வெண்பா

27. மாயா தனுவிளக்கா மற்றுஉள்ளம் காணாதேல்
ஆயாதாம் ஒன்றை; அது அதுவாய்- வீயாத
வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல்
தன்னைமலம் அன்று அணைதல் தான்.

இதன் பொருள்:

ஆணவமாகிய இருளில் நிற்கின்ற உயிர் மாயையின் காரியமாகிய உடம்பை விளக்காகக் கொண்டு பொருள்களை அறியும். அவ்விளக்கு இல்லாவிடின் அஃது ஒரு பொருளையும் அறியமாட்டாது; அறியாமை உடையதாகவே இருக்கும்.

ஆணவம் உயிரறிவை எவ்வாறு மறைத்திருக்கிறது என்பதை ஓர் உவமை மூலம் உணர்த்துகிறார் ஆசிரியர்.

நெருப்பு எப்பொருளில் இருந்தாலும் அப்பொருளில் மறைந்து அப்பொருளாகவே நிற்குமன்றி வெளிப்பட நில்லாது. அது அதுவாய் நிற்றல் அதன் இயல்பு. அத்தகைய நெருப்பை விறகு தன்னுள் மறைத்து வைத்துத் தான் ஒன்றே உள்ளது எனும்படி நிற்கும்.

நெருப்பினைப் போன்றது உயிர். தான் சார்ந்த பொருளோடு ஒன்றித் தான் என்பது தோன்றாது அப்பொருளாகவே நிற்பது உயிரின் இயல்பு. அத்தகைய உயிரை ஆணவ மலம் தன்னுள் பொதிந்து கொண்டு, என்பதொன்று இல்லை என்னும் படியாக மறைத்து நிற்கும்.

பதவுரை

உள்ளம் - (ஆணவ மலமாகிய இருளில் மறைப்புண்டு நிற்கின்ற) ஆன்மா
மாயாதனு - மாயையின் காரியமாகிய உடம்பை
விளக்கா - விளக்காகக் கொண்டு
காணாதேல்- அறியாவிடில்
ஒன்றைஆயாது - யாதொன்றையும் அறிய மாட்டாது
(இனி ஆணவ மலம் ஆன்மாவினது அறிவை மறைத்து நிற்பதற்கு உவமை கூறப்படுகிறது.)
மற்றுமலம் - மாயை கன்மங்களின் வேறாய், ஆன்மாவுக்குச் சகசமாய் உள்ள ஆணவ மலம்.
அன்று - ஆன்மா என்று உண்டோ அன்றே
தன்னை - அதனை
அணைதல் - மறைத்து நிற்றல் (எது போன்றது எனில்)
அது அதுவாய் வீயாத - எல்லாப் பொருளிலும் மறைந்து அது அதுவாய்க் கெடுதல் இன்றி இருக்கின்ற

வன்னிதனை - நெருப்பை
தன்னுள் மறைத்து -தனக்குள் மறைத்து வைத்து
ஒன்றாம் - தான் ஒன்றே உள்ளது போல் நிற்கின்ற
காட்டம் போல் - விறகு போல்வதாம்.

விளக்கம்
உவமையையும் பொருளையும் பின் வருமாறு பொருத்திக் காட்டலாம்.
உவமை                       பொருள்
1. விறகு         -             ஆணவ மலம்

2. விறகினுள் உள்ள நெருப்பு - ஆணவ மலத்துள் கிடக்கும் உயிர்
3. நெருப்பு இருப்பது தோன்றாமை - உயிர் இருப்புப் புலப்படாமை
4. விறகோடு நெருப்பு அத்துவிதமாய்க் கலந்து நிற்றல்- ஆணவத்தோடு உயிர் அத்துவிதமாய் இயைந்து நிற்றல்

மேற்கூறியவற்றால், ஆணவம் அறிவை மறைத்து இருள் போன்றதாய் நிற்கும் என்பதும், மாயை அவ்வறிவை விளக்கி ஒளி போன்றதாய் நிற்கும் என்பதும் விளங்கும்.
மாயை, கன்மங்கள் அறிவை விளக்குதல்:
மாயையின் காரியமாகிய கருவிகள் அறிவை விளக்க வந்தனவேயன்றி மறைக்க வந்தன அல்ல. விழிப்பு நிலையில் அக்கருவிகளாலேயே நாம் உலகத்தை அறிந்து வருகிறோம். உறக்க நிலையில் அவை செயற்படாமல் மடங்கி நிற்பதாலேயே அறிவு விளங்காமற் போகிறது.

மாயையைப் போன்றே கன்மமும் அறிவை விளக்கும் என்பதே உண்மை. கன்மமே உயிரறிவைத் தூண்டித் தன் பயனைத் தருதற்கு ஏற்ற வகையில் செயற்படுமாறு செய்கிறது. கன்மத்தினாலேயே கருவிகளின் செயற்பாடும் நிகழ்வதாகிறது. செயற்பாட்டினாலேயே அறிவு விளங்குகிறது என்பதைச் சொல்ல வேண்டா.

இதனால் மாயையும் கன்மமும் அறிவை விளக்குவனவே என்பது தெளிவாகும். மாயை கன்மங்களே அறிவை மறைக்கும் என்பார் கூற்றினை ஆசிரியர் மறுத்துள்ளமையை இச் செய்யுளிற் காணலாம்.

ஆணவ மலமும் மாயையும்:
ஆணவத்திற்கும் மாயைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.

ஆணவம்                            மாயை
1. இருள் போன்றது          -  1. விளக்கொளி போன்றது
2. உயிரோடு இயற்கையில் உள்ளது  - 2. உயிரோடு பின்பு சேர்ந்தது         
3. உயிரோடு கலந்து நிற்பது - 3. உயிருக்கு வேறாய் நிற்பது
4. காரணமின்றிக் கலந்து நிற்பது - 4. காரணம் பற்றி வந்து சேர்ந்தது

ஓர் ஐயத்தை தெளிவித்தல்:

இவ்விடத்தில் பின்வருமாறு ஐயம் எழலாம். மாயா கருவிகள் அறிவை விளக்குகின்றன என்பது உண்மையே. ஆயினும் உடம்பாயும் உலகப் பொருள்களாயும் அமைந்த மாயை, அறிவை மயக்குதலையும் செய்கின்றது அல்லவா? எங்ஙனம் எனில், ஊனார் புழுக்கூடு எனவும் மலம் சோரும் ஒன்பதுவாயிற் குடில்.

எனவும் ஆன்றோர் அருவருத்துப் பேசுவதாகிய இவ்வுடல் தன் இளமைச் செவ்வியினால் கண்ணையும் கருத்தையும் ஈர்த்து மயக்குகிறதே. உதிர்ந்து வீழ்ந்தால் ஒன்றுக்கும் உதவாத தலை மயிரும் தலைவியின் கூந்தலில் உள்ள காலத்தில் தலைவனுக்கு மழை மேகமோ என்னும் மருட்சியை- மயக்கத்தையல்லவா விளைக்கின்றது! நில்லாதனவாகிய காசும் பணமும் செய்கின்ற ஆசை மயக்கத்தை அளவிட முடியுமோ?

இவையெல்லாம் மாயா காரியங்கள் தாமே. இவை அறிவை மயக்குதலை அல்லவா செய்கின்றன. அவ்வாறிருக்க, அறிவை விளக்குவது மாயை என்று கூறுவது மாறுபாடாக அல்லவா உள்ளது என்று ஐயுறலாம். பின் வரும் விளக்கத்தைத் தெரிந்து கொண்டால் மாயை பற்றி சைவ சித்தாந்த நிலையில் எவ்வித மாறுபாடும் இல்லை என்பது புலனாகும்.

கேவல நிலையில் மாயையின் செயற்பாடு இன்மையால் ஆணவம் தனது மறைத்தல் தொழிலை முழுமையாகத் தடையின்றிச் செய்கிறது. அதனால் உயிர் தனது அறிவை முற்றிலும் இழந்து சட்பபொருள் போலவே கிடக்கிறது. இறைவன் ஆணவத்தின் ஆற்றலைக் குறைப்பதற்காக அதற்கு மறுதலைப் பொருளாகிய மாயையைக் கூட்டுவிக்கின்றான். அஃதாவது மாயையின் காரியங்களாகிய உலகையும், உடம்பையும், கருவிகளையும் உயிருக்குப் படைத்துக் கொடுக்கின்றான். அவற்றின் உதவியினால் அறிவு சிறிது விளங்கப் பெறுகிறது. இதுவே சகல நிலை என்பதை முன்பே பார்த்துள்ளோம்.

இருள் செறிந்த அறையில் உள்ள ஒருவனது கண் இருள் வயப்பட்டு இருளில் மூழ்கி ஒன்றையும் அறியமாட்டாது நிற்றலைப் போன்றது கேவல நிலை. அவ்விருட்டு அறையில் கை விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தால் அதன் ஒளியில் அங்குள்ள பொருள்கள் ஓரளவு புலப்பட்டுத் தோன்றுதலைப் போன்றது சகல நிலை எனலாம். இவ்வுவமையை மேலும் சிறிது நுணுகி நோக்குவோம்.

விளக்கொளியில் அறையிலுள்ள பொருள்கள் உள்ளவாறு புலப்படுவதில்லை. பொருள்களின் வண்ணமும் வடிவும் மாறித் தோன்றுதல் உண்டு. ஒரு மூலையில் வளைந்து கிடக்கின்ற கயிறு பாம்பாகத் தோன்றுதல் கூடும். இவ்வாறு பொருளியல்பு மாறுபட்டுத் தோன்றுவதற்கு எது காரணம்? விளக்கொளி காரணமா? இருள் காரணமா? விளக்கொளி எப்பொழுதும் பொருள்களை விளக்கிக் காட்டுமேயன்றி வேறுபடுத்திக் காட்டாது. பொருள்கள் வேறுபட்டுத் தோன்றுதல் இருளினால் விளைவதேயாகும்.

விளக்கொளி வாராதபோது பொருள்களை முழுதுமாக மறைத்து நின்ற இருளே விளக்கொளி வந்த காலத்தில் அவ்வாறு மறைக்க மாட்டாமல் அவ்வொளியின் சார்பினால் பொருள்களை மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது, அதுபோலவே, கேவல நிலையில் உயிரை முற்றிலுமாக மறைத்து நின்ற ஆணவ மலமாகிய இருள்  சகல நிலையில் விளக்கொளி போன்றதாகிய மாயையின் சார்பினால் இழிந்த பொருளை உயர்ந்த பொருள் போலவும், துன்பப் பொருளை இன்பப் பொருள் போலவும் மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது.

மாயையின் பொதுவியல்பும் உண்மையியல்பும்

எனவே, உண்மையில் மயக்குவது ஆணவ மலம்தான். ஆயினும் ஆணவத்தின் மயக்குதல் தன்மைக்கு மாயை சார்பாக இருக்கிறது. அதுபற்றி மாயை மயக்குவதாகவும் கூறப்படும். உடல்வனப்பும், செல்வமும் பிறவும் எல்லாம் மாயா காரியங்களே. மாயை அவ்வாறு நின்று உயிரைத் தன்னையே நோக்கும்படி செய்து அதன் அறிவை மயக்குதல் சார்பு பற்றிக் கூறப்படும் பொதுவியல்பு ஆகிய தடத்த லக்கணம் ஆகும். அறிவை விளக்குதலே மாயையின் உண்மையியல்பு ஆகிய சொரூப லக்கணம் ஆகும்.

ஆணவ இருளும், திருவருள் ஒளியும்:

இறைவன் உயிரோடு அத்துவிதமாய்க் கலந்துள்ளான் என்பதை இரண்டாம் நூற்பாவில் பார்த்தோம். ஆணவ மலமும் உயிரிடத்து அத்துவிதமாய்க் கலந்துள்ளது. இறைவனும் அவனுக்கு எதிராகிய ஆணவ மலமும் உயிரிடத்தில் ஒரே நேரத்தில் இருத்தல் எங்ஙனம் இயலும் என ஐயுறலாம். பின்வரும் உவமை இதனைத் தெளிவிக்கும். ஒளியும் அதற்கு எதிரான இருளும் வெவ்வேறு இடத்தில் இல்லை. இரண்டுமே ஓரிடத்தில் தான் உள்ளன. ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே  இடம். ஒன்று மேலிடும் போது மற்றொன்று மடங்கி நிற்கும். அதுபோலத் திருவருள் ஒளியும், ஆணவமாகிய இருளும் உயிரிடத்திலேயே உள்ளன.

உயிர் தன் பக்குவக் குறைவினால் தன்னிடத்தே உள்ள  திருவருள் ஒளியை உணர்வதில்லை. ஆணவமலத்தையே அது பற்றி நிற்கிறது. அதனாலேயே எல்லா வகைத் துன்பங்களையும் எய்துவதாயிற்று. உயிர் பக்குவம் பெற்ற காலத்தில் அஞ்ஞானமாகிய இருள் கீழ்ப்பட்டொழிய, மெய்ஞ்ஞானமாகிய திருவருள் மேற்படும்.

ஆணவம்- பெயர்க் காரணம்: முடிவாக ஒன்றைச் சொல்லுதல் வேண்டும்; ஆணவம் என்றவுடன் அதனை ஒரு பண்பாகவே நினைக்கத் தோன்றும். மும்மலங்களுள் ஒன்றாகக் கூறப்படும் ஆணவம் என்பது பண்பு அன்று. அது ஒரு பொருள்; அறியாமை என்னும் குணத்தை உடைய ஒரு குணிப் பொருள். கண்ணை மறைக்கின்ற புற இருளைப் போல அறிவை மறைக்கின்ற அக இருள் அது. உயிருக்கு இயல்பாய் உள்ள வியாபகத் தன்மையை மறைத்து அதனைச் சிறுமைப்படுத்துவதால்- அதனைச் சிற்றறிவும், சிறு தொழிலும் உடையதாகச் செய்வதனால்- அணுத் தன்மைப் படுத்துவதால் ஆணவம் என்னும் காரணப் பெயரை உடையதாயிற்று.

மூன்றாம் கூறு: ஆணவ மலத்திற் கிடந்த ஆன்மா மாயா கருவிகளோடு கூடி அறிவு பெறலாயிற்று என்பதைப் பார்த்தோம். அவ்வாறு கருவிகளால் அறிவு விளங்கிய ஆன்மா பொருள்களை அறியுங்காலத்தில் ஒரு நிலையாக அறிந்து நிற்றல் இல்லை.

விழிப்பு நிலையில் புறப்பொருள்களை அறிகின்ற ஆன்மா அதனை விடுத்துக் கனவு நிலைக்குச் சென்று அக நிகழ்ச்சிகளை அறிகிறது. பின் அந்நிலையும் நீங்கி உறக்க நிலையை யடைந்து, அறிவும் செயற்பாடும் இன்றிக் கிடக்கிறது. பின் மீண்டும் அறியத் தலைப்படுகிறது. இவ்வாறு ஆன்மா பல நிலை வேறுபாடுகளை எய்துவதற்குக் காரணம் என்னை என வினவலாம். அதற்கான விடையை நூற்பாவில் அமைச்சு அரசு ஏய்ப்ப அஞ்சவத்தைத்தே என்ற தொடரில் குறிப்பாக அமைத்துள்ளார் ஆசிரியர்.

அமைச்சர் முதலிய அனைவரோடும் சேர்ந்து ஆட்சியினை நடத்தும் வேந்தன் அந்தந்த நேரத்தில் அந்தந்த அரசச் சுற்றத்தோடு கூடுதலும் பின் நீங்குதலும் ஆகிய பல நிலைகளை உடையனாதல் போல, ஆன்மாவும் அவ்வப்பொழுது அவ்வக்கருவிகளோடு கூடியும் நீங்கியும் விழிப்பு, கனவு, உறக்கம் முதலிய பல நிலை வேறுபாடுகளை உடையதாயிற்று என்பதே அவ் விடையாகும்.

நூற்பாவில் குறிப்பாக உணர்த்திய பொருளை இங்கு மேற்கோளும் ஏதுவும் அமைத்து விளங்க உணர்த்துகின்றார்.

மேற்கோள்

இனி, இவ்வான்மாச் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம்
துரியாதீதமாய் உள்ள பஞ்சாவத்தினாய் நிற்கும் என்றது.

மேற்கோளின் பொருள்

அவத்தை-நிலை; பஞ்சாவத்தை- ஐந்து நிலைகள்; அவத்திகன்- நிலையை உடையவன்.

ஆன்மா சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்து நிலைகளை உடையதாய் நிற்கும் என்பது மேற்கோளின் பொருளாகும்.

மேற்கோள் விளக்கம்

உயிர் அடையும் நிலைகள் காரண அவத்தை, காரிய அவத்தை என இருவகைப்படும்.

காரண அவத்தைகள்:

கேவலம் என்பது உயிர் ஆணவத்தோடு மட்டும் உள்ள நிலை; மாயை கன்மங்கள் சேராத நிலை; அறிவும் செயலும் சிறிதும் இன்றித் தான் ஒரு பொருள் உண்டு என்பதையும் அறியாமல் முழு மறைப்பிலே மூழ்கிச் சடப் பொருள் போலக் கிடக்கும் நிலை. இதுவே உயிரின் அநாதி நிலை.

சகலம் என்பது ஆணவத்தோடு ஏனைய மாயை கன்மங்களும் வந்து பொருந்த. உயிர் மும்மலங்களோடும் கூடியிருக்கும் நிலை; பிறப்பு இறப்புக்களில் சுழலும் நிலை; இஃது இடைப்பட்ட நிலை.

சுத்தம் என்பது உயிர் மும்மலங்களும்  நீங்கப் பெற்றுப் பிறவி ஒழிந்து இறைவனோடு கலந்திருக்கும் நிலை. இதுவே முடிந்த நிலை.

இவை மூன்றும் காரண அவத்தைகள் ஆயின. இம் மூன்றில் முதலிரண்டும் கட்டு நிலையாகும். மூன்றாவது நிலைமுத்தி நிலையாகும்.

காரிய அவத்தைகள்:

இனி, காரிய அவத்தைகள் ஐந்து உள்ளன. அவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன. தமிழில் அவை பின்வருமாறு சொல்லப் பெறும்.

1. சாக்கிரம் - நனவு/ விழிப்பு
2. சொப்பனம் - கனவு
3. சுழுத்தி - உறக்கம்
4. துரியம் - பேருறக்கம்
5. துரியாதீதம் - உயிர்ப்பு அடங்கல் (மூச்சு அடங்கி யிருத்தல்)

இவை ஐந்தும் அன்றாட வாழ்வில் நிகழும் காரியங்கள் ஆதலின் காரிய அவத்தைகள் எனப்பட்டன. இவை கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்றும் பற்றி மூவைந்து பதினைந்தாய் விரியும். அவற்றை இங்கு விளக்கமாகக் காண்போம்.

கேவல ஐந்தவத்தை:

உடம்போடு கூடி வாழ்வதாகிய சகல நிலையில் அன்றாடம் கேவலம் (அறியாமை) வந்து பொருந்தும். எவ்வாறெனில், விழிப்பு நிலையாகிய சாக்கிரத்தில் சில கருவிகள் செயல்படாது மடிதலினால், உணர்ந்தும் உணராது போல அறிவு மந்தமாய் நிகழும். பின்னும் சில சில கருவிகள் ஒடுங்குதலினால் கனவு ஆகிய சொப்பனம், உறக்கம் ஆகிய சுழுத்தி, பேருறக்கம் ஆகிய நிலைகள் உண்டாகும்.

இந் நிலைகளிலெல்லாம் ஆன்மாவுக்குப் படிப்படியே அறியாமை மிகுந்து வரும். துரியாதீதம் ஆகிய நிலையில் ஆன்மா முழு அறியாமையில் மூழ்கியிருக்கும்.

இவ்வைந்து நிலைகளிலும் கேவலமாகிய அறியாமை குறைந்தும் மிகுந்தும் நிகழ்தலின், இந்நிலைகள் கேவல சாத்திரம், கேவல சொப்பனம், கேவல சுழுத்தி, கேவல, துரியம், கேவல துரியாதீதம் எனச் சொல்லப் பெறும். இவற்றைத் தொகுத்துக் கேவல ஐந்தவத்தைகள் என்பர்.

சகல ஐந்தவத்தை:

இனி ஆன்மா ஐம்பொறிகளால் பொருள்களை நன்றாக அறிகின்ற சகல நிலையில் ஒரே வகையாய்த் தொடர்ச்சியாய் அறிந்து நில்லாமல் விட்டுவிட்டே அறியும். இதனை நம் அனுபவத்தில் வைத்தே உணர்தல் வேண்டும்.

நாம் ஒரு பொருளை அறியும் காலத்தில் அதனைப் பற்றியும் விட்டும், மீண்டும் பற்றியும் விட்டும் இவ்வாறு மாறி மாறியே உணர்கிறோம். விடுதலும் பற்றுதலும் மிக விரைவாக நிகழ்வதால் அவை நமக்குப் புலனாவதில்லை. தொடர்ச்சியாய் அறிந்து கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. அஃது உண்மையன்று.

இங்ஙனம் பொருள்களை அறிந்து வருவதாகிய விழிப்பு நிலையிலேயே சாக்கிரம், சொப்பனம் முதலிய ஐந்தவத்தைகள் நுட்பமாய் நிகழ்கின்றன என்ற கொள்ளப்படுகிறது. இவற்றைத் தனித்தனியே தெளிவாகப் பிரித்துக் காட்டல் இயலாது.

இந்த ஐந்தவத்தைகள் காற்றாடியில் உள்ள ஓலைகள் விரைவாகச் சுழல்வது போல மிக விரைவாக மாறி மாறி நிகழும். இவற்றை விளங்க உரைத்தல் இயலாமை பற்றி, நினைப்பும் மறப்பும் எனச் சுருங்கச் சொல்லுவர்.

நன்கு விழித்திருக்கும் சகல நிலையில் இடையூறாது நிகழ்வனவாகிய இவ்வவத்தைகள் சகல சாக்கிரம், சகல சொப்பனம், சகல சுழுத்தி, சகல துரியம், சகல துரியாதீதம் எனச் சொல்லப் பெறும். இவற்றைத் தொகுத்துச் சகல ஐந்தவத்தைகள் என்பர்.

சுத்த ஐந்தவத்தை:

இனி, சகலத்தில் நிகழ்வதாகிய சுத்த நிலையைப் பார்ப்போம். பக்குவ ஆன்மாக்கள் சகல நிலையில் வாழும்போதே கருவிகளின் தொடர்பு நீங்கித் திருவருளோடு ஒன்றி நிற்பார்கள். அவரெல்லாம் சகல நிலையில் உள்ளபோதே சுத்த நிலை எய்தினோர்.

சகலத்தில் பொருந்துவதாகிய இச் சுத்த நிலையில் அவர்கள் பால் ஐந்தவத்தைகள் நிகழ்வனவாகும். அஃதாவது திருவருளைச் சிறிது சிறிதாக உணர்ந்து அதில் அழுந்துதலும், முடிவில் சிவத்தின்கண் அழுந்துதலுமே அந்நிலைகளாகும்.  

அவை சுத்தம் என்ற அடைமொழியோடு சுத்த சாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, சுத்த துரியம், சுத்த துரியாதீதம் எனக் கூறப்பெறும். நின்மலம் என்ற அடை கொடுத்து இவற்றை வழங்குதலும் உண்டு.

இவற்றுள் நான்காம் நிலையாகிய துரியம், திருவருளில் அழுந்தும் நிலையாகும். முடிவாகிய துரியாதீதமே சிவத்தில் அழுந்தும் நிலையாகும் இவற்றைத் தொகுத்துச் சுத்த ஐந்தவத்தைகள் என்பர்.

இவ்வாறு காரிய அவத்தைகள் 1) கேவல ஐந்தவத்தை 2) சகல ஐந்தவத்தை 3) சுத்த ஐந்தவத்தை என மூவைந்தாய், பதினைந்து ஆகும்.

இம் மூவகை ஐந்தவத்தைகளும் கேவலம், சகலம், சுத்தம் என்னும் அடைமொழிகளோடு கூறப்பெறினும், அவை மூன்றும் உண்மையில் சகல நிலையாகிய ஒன்றில் நிகழ்வனவே என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.

ஏது

மேற்கூறியவாறு ஆன்மா; ஐந்தவத்தைகளை அடைதற்குரிய காரணத்தை ஏதுவில் கூறுகின்றார். அவ்வேது வருமாறு:

அதுதான் சல சொரூபத்தின் மறைந்து, அரூப சொரூபியாய் நிற்றலான்.

ஏது விளக்கம்

அரூபம் என்பது, புலப்படாது நுட்பமாய் உள்ள தத்துவங்களைக் குறிக்கும். தத்துவங்கள் என்பவை அந்தக் கரணம் இந்திரியம் முதலிய கருவிகளேயாம். அரூப சொரூபி என்பதற்கு, ஆன்மா தத்துவங்களையே தனது வடிவமாகக் கொண்டுள்ளது என்பது பொருள்.

ஆன்மா ஆணவ மலத்தினுள் மறைந்து தன் அறிவையிழந்து நிற்பதனால், அறிவு பெறுதற் பொருட்டுத் தத்துவங்களாகிய கருவிகளைக் கூடும்; அவற்றோடு கூடி அவையே வடிவாய் நிற்கும். ஆன்மா எக்கருவிகளோடு கூடினாலும் அக்கருவியாகவே நின்று அறியும். காட்டாக, மனத்தோடு கூடியபோது மனமாகவே நின்று பொருளைப் பற்றும்; சித்தத்தைக் கூடிச் சித்தமாகவே நின்று சிந்தனை செய்யும். இவ்வாறு அது அதுவாகவே நின்று அறிதல் ஆன்மாவின் இயல்பு.

தத்துவங்களாகிய கருவிகள் வினைக்கு ஏற்பவே செயற்படுதல்:

தத்துவங்களாகிய மாயா கருவிகள் எப்பொழுதும் ஒரு நிலையில் நிற்பதில்லை. அவ்வப்போது அவை செயற்படாமல் மடங்கியும், பின் மீண்டும் எழுச்சியுற்றும் நிற்கும். கருவிகள் நன்கு செயற்படுதலும், மந்தமாகச் செயற்படுதலும், செயற்படாது மடங்கி நிற்றலும் ஆகிய எல்லாம், வினை தன் பயனை ஊட்டும் முறைக்கு ஏற்பவே நிகழும் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். இதனை அவரவரும் தம் வாழ்க்கை அனுபவத்தில் வைத்து உணரலாம். சான்றாக ஒரு நிகழ்ச்சியைக் காட்டுவோம்.

ஒரு நேர்முகத் தேர்வு நிகழ்கிறது. சிறப்பான ஒரு பெரும் பணிக்குத் தகுந்தவரைத் தேர்ந்தெடுக்க  அது நடைபெறுகிறது. நம்மிடம் அப்பணிக்கு வேண்டிய தகுதியனைத்தும் நிரம்பியிருக்கிறது. ஆதலால் மிகுந்த நம்பிக்கையோடு அங்கே செல்லுகிறோம். ஆயின் அப்பணி நமக்குக் கிடைக்காது வருந்த வேண்டும் என்று வினையிருக்கிறது. அது நமக்கு எப்படித் தெரியும்? நேர்காணலில் தேர்வுக்குழுவினர் சில வினாக்களைக் கேட்கிறார்கள். அவையெல்லாம் தெரிந்தவை தான். ஆனால் அந்நேரம் பார்த்து நமது சித்தம், புத்தி முதலிய கருவிகள் நன்கு செயற்படாமல் போகும். கிடைக்காது வருந்துதலாகிய பயனை ஊட்டும் அவ்வினை காரணமாக- அவ்வினைக்குத் துணையாக- அக்கருவிகள் செயற்படாமல் மடங்கி நிற்கும். அதனால், தெரிந்த வினாவாக இருப்பினும் அந்நொடியில் திகைத்து நிற்கும்படியாக நேர்கிறது; மாறான விடையைச் சொல்ல நேர்கிறது. அதனால் அப்பணி கை நழுவிப் போக நேர்கிறது. வெளியில் வந்ததும் அக்கருவிகள் நன்கு செயற்படுவதனால் விடைகள் நமக்குச் சட்டென்று தோன்றுகின்றன. அடடா! அங்கேயே தோன்றியிருக்கக்கூடாதா என்று எண்ணி மனம் உளைகிறோம். ஆகவே வினைக்கு ஏற்பவே, கருவிகளின் தொழிற்பாடு நிகழும் என்பது புலனாகும்.

ஆன்மா பல அவத்தைகளை அடைதற்குரிய காரணம்:

இவ்வாறு தத்துவங்களாகிய கருவிகள் தொழிற்படும் நிலைகள் பலவாதலால், அத் தத்துவங்களின் வடிவாய் நின்று அறியும் ஆன்மாவும் பலநிலைகளை எய்துவதாயிற்று

இனி, மாயா கருவிகளோடு கூடிய ஆன்மா அஞ்சவத்தைப்படும் முறையே இரண்டு எடுத்துக்காட்டுகளால் கூறுகின்றார்.

கேவல ஐந்தவத்தை:

முதல் எடுத்துக்காட்டில் கேவல ஐந்தவத்தையின் இயல்பினைக் கூறுகின்றார்.

1. கேவல சாக்கிரம்:

விழிப்பு நிலையில், ஐம்பொறிகளுக்கு வலிமை தரும் சில கருவிகள் செயற்படாமல் மடங்கி நிற்கும்போது அவ்வைம்பொறிகள் எழுச்சியுடன் செயற்படாமையால், அறிவு கூர்மையாய் நிகழாமல் மந்தமாய் நிகழும். அந்நிலையில் முப்பத்தைந்து கருவிகள் செயற்படுவனவாகும். அவை

1. ஞானேந்திரியங்கள் ஆகிய அறிகருவிகள்       -  5
   (செவி, தோல், கண், நாக்கு, மூக்கு)

2. கன்மேந்திரியங்கள் ஆகிய தொழிற் கருவிகள்    -  5
   (வாய், கால், கை, எருவாய், கருவாய்)

3. ஞானேந்திரியங்களின் விடயங்கள்                     -   5
    (ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம்)

4. கன்மேந்திரியங்களின் விடயங்கள்
   (பேச்சு, நடை, கொடை, போக்கு, இன்பம்)           -   5

5. பிராண வாயு முதலிய வாயுக்கள்                         -   10

6. அந்தக் கரணங்கள்                                               -   4

7. புருடன்                                                               -   1
                                                                                -------
                                                                                     35        
                                                                                -------

அறிவு நன்கு விளங்காத இவ் விழிப்பு நிலையே கேவல சாக்கிரம் என்னும் அவத்தையாகும். இவ் அவத்தையின்போது ஆன்மா புருவ நடுவில் நிற்கும். புருவநடு இலாடம் எனப்படும்.

2. கேவல சொப்பனம் :  

பின் ஆன்மா புருவ நடுவினின்றும் இறங்கிக் கழுத்தை அடையும். அங்கு ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் செயற்படாது ஒடுங்கும்; ஏனைய இருபத்தைந்து கருவிகள் செயற்படும். ஆன்மா இவ்விடத்துக் கனவு நிலையை எய்தி நிற்கும். இது கேவல சொப்பனம் என்னும் அவத்தையாகும்.

3. கேவல சுழுத்தி:

அதன்பின் ஆன்மா கழுத்தினின்றும் கீழிறங்கி இதயத்தை அடையும். அங்கு அந்தக் கரணங்களுள் சித்தமும், பிராண வாயுவும், புருடனும் ஆகிய மூன்று கருவிகளே தொழிற்படும். எனவே இதற்கு முந்திய கனவிடமாகிய கழுத்தில் தொழிற்பட்ட விடயங்கள் பத்தும், வாயுக்களில் ஒன்பதும், அந்தக் கரணங்களில் மனம் புத்தி, அகங்காரம் மூன்றும் ஆகிய இருபத்திரண்டு கருவிகள் செயற்படாது ஒடுங்கின என்பது விளங்கும். ஆன்மா இவ்விடத்து உறக்கத்தை எய்தி நிற்கும். இது கேவல சுழுத்தி என்னும்  அவத்தையாகும்.

4. கேவல துரியம்:

அதன்பின் ஆன்மா இதயத்தினின்றும் இறங்கி உந்தியை அடையும். அங்கு, இதுவரை செயற்பட்டு வந்த சித்தம் ஆகிய அந்தக்கரணமும் செயற்படாது ஒடுங்க, பிராண வாயுவும் புருடனும் ஆகிய இரண்டு கருவிகளே உளவாகும். ஆன்மா பேருறக்கத்தில் ஆழ்ந்து விடும் நிலை இதுவாகும். இது கேவல துரியம் என்னும் அவத்தையாகும்.

கேவல துரியாதீதம்:

இறுதியாக ஆன்மா உந்தியினின்றும் இறங்கி மூலாதாரத்தை அடையும். அங்குப் பிராண வாயுவும் ஒடுங்கிப்போக, புருடன் என்னும் ஒரு கருவியே உளதாகும். மூச்சும் ஒடுங்கி ஆன்மா முழு அறியாமையிற் கிடக்கும் நிலை இதுவாகும். இது கேவல துரியாதீதம் என்னும் அவத்தை யாகும்.

இதுகாறும் கூறியவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தி அமைத்துக் கொள்வோம்.

அவத்தைகள்                     இடங்கள் செயற்படும் கருவிகள்            உணர்வு நிலைகள்

1. கேவல சாக்கிரம்                    புருவ நடு 35                                மந்தமாய் நிகழும் பொறியுணர்வு
2. கேவல சொப்பனம்                 கழுத்து     25                                கனவுணர்வு
3. கேவல சுழுத்தி                       இதயம்       3                                உறக்கம்
4. கேவல துரியம்                        உந்தி          2                                 பேருறக்கம்
5. கேவல துரியாதீதம்                   மூலாதாரம்  1                                முழு அறியாமையில் அழுந்துதல்

இவ்வாறு புருவ நடுவினின்றும் இறங்கி மூலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் உயிர், மீண்டும் மேலேறிச் சென்று அந்த அந்த இடங்களில் அந்த அந்த அவத்தைப் பட்டுப் புருவ நடுவை அடைவதாகும்.

கீழிறங்கிச் செல்லுதல் கீழாலவத்தை என்றும், மேலேறிச் செல்லுதல் மேலாலவத்தை என்றும் சொல்லப்பெறும். இறங்குதல், மேற்செல்லுதல் என்பது தவிர, இவ்விரண்டிடையே வேறுபாடு யாதும் இல்லை.

கருவிகள் குறைந்து உயிர் அறியாமையில் அழுந்துதல் பற்றி இவை கேவல ஐந்தவத்தைகள் எனப்பட்டன.

இக் கேவல ஐந்தவத்தை பற்றிக் கூறும் எடுத்துக்காட்டுச் செய்யுளை நோக்குவோம்.

எடுத்துக்காட்டு - 1
வெண்பா

28. ஒன்று அணையாமூலத்து; உயிர் அணையும் நாபியினில்;
சென்று அணையும் சித்தம் இதயத்து; - மன்ற ஏய்
ஐயைந்தாம் நன்னுதலில்; கண்டத்து வாக்காதி
மெய்யாதி விட்டு அகன்று வேறு.

இதன் பொருள்:

ஆன்மா தான் ஒடுங்கியிருந்த மூலாதாரத்திலிருந்து மேலேறிச் செல்லும்பொழுது அவ்வவ்விடங்களில் வந்து பொருந்தும் கருவிகள் இவை என்பதை இங்கே உணர்த்துகின்றார்.

எந்தக் கருவியும் செல்லாத மூலாதாரத்தில் ஆன்மா ஒடுங்கி நிற்கும் காலத்தில் புருடன் என்னும் ஒரு கருவியே செயற்படுவதாகும்.

ஆன்மா மூலாதாரத்தினின்றும் மேலேறி உந்தியை அடைந்தபொழுது முன்சொன்ன புருடனோடு பிராண வாயுவும் வந்து சேரும். ஆக, அங்கு இரண்டு கருவிகள் செயற்படும் என்பதாயிற்று.

பின் ஆன்மா உந்தியினின்றும் மேலேறி இதயத்தை அடைந்தபொழுது மேற்கூறிய இரண்டோடு சித்தம் என்னும் அந்தக் கரணமும் சென்று சேரும். ஆக, அங்கு மூன்று கருவிகள் செயற்டும்  என்பது விளங்கும்.

அதன்பின் ஆன்மா இதயத்தினின்றும் மேலேறிக் கழுத்தினை அடைந்தபொழுது மேற்கூறிய மூன்றையும் உள்ளிட்ட இருபத்தைந்து கருவிகள் செயற்படும்.

பின்னர் ஆன்மா கழுத்தினின்றும் மேலேறிப் புருவ நடுவை அடைந்தபொழுது,  அந்த இருபத்தைந்து கருவிகளோடு கன்மேந்திரியம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும் சென்று பொருந்தும். ஆக முப்பத்தைந்து கருவிகள் அங்கு செயற்படும் என்பது தெளிவாகும்.

பதவுரை

அணையா மூலத்து ஒன்று - எந்தக் கருவியும் செல்லாத மூலாதாரத்தில் ஆன்மா ஒடுங்கி நிற்கும்பொழுது புருடன் என்னும் ஒரு கருவியே செயற்படும்.

நரபியினில் உயிர் அணையும் - ஆன்மா மூலாதாரத்தினின்றும் மேலேறி உந்தியை அடையும்பொழுது முன் சொன்ன புருடனோடு பிராண வாயுவும் சென்று பொருந்தும் (எனவே அங்கு இரண்டு கருவிகள் செயற்படும்)

இதயத்து சித்தம் சென்று அணையும் - பின் ஆன்மா உந்தியினின்று இதயத்தை அடைந்தபொழுது, மேற்கூறிய இரண்டோடு சித்தம் என்னும் அந்தக்கரணம் சென்று பொருந்தும். (எனவே அங்கு மூன்று கருவிகள் செயற்படும்.)

கண்டத்து வாக்கு ஆதி மெய் ஆதிவிட்டகன்று வேறு ஐயைந்தாம் - ஆன்மா  இதயத்தினின்றும் கழுத்தை அடைந்த பொழுது வாக்கு முதலிய கன்மேந்திரியங்கள் ஐந்தும் மெய் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், நீங்கி நிற்க ஏனைய இருபத்தைந்து கருவிகள் செயற்படும். (மேற்கூறிய மூன்று கருவிகளும் இவற்றுள் அடங்கும்)

நன்னுதலில் வாக்காதி மெய்யாதி மன்ற ஏய் ஐயைந்தாம் - ஆன்மா கழுத்தினின்றும் புருவ நடுவை அடைந்தபொழுது, முன்பு நீங்கி நிற்கும் எனப்பட்ட கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் சென்று பொருந்திய ஐயைந்தாம். (எனவே முப்பத்தைந்து கருவிகள் அங்குச் செயற்படும் என்பது விளங்கும்.)

விளக்கம்:

முதலடியில் உயிர் என்பது பிராண வாயுவைக் குறிக்கும். பிற்பகுதியில் உள்ள சொற்களைப் பின் முன்னாக மாற்றிக் கூட்டினால் தான் பொருள் அமையும்.

கண்டத்து வாக்காதி மெய்யாதி விட்டகன்று வேறு ஐயைந்தாம் எனவும், நன்னுதலில், வாக்காதி மெய்யாதி மன்ற ஏய் ஐயைந்தாம் எனவும் இயைத்துப் பொருள் செய்ய வேண்டும்.

புருடன் விளக்கம்:

புருடன் என்பது உயிர் அன்று; தத்துவங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுவது; அது பற்றியே புருடதத்துவம் என்று கூறப்படுகிறது. தத்துவம் என்பதற்குக் கருவி என்பது பொருள். புருடன் என்பது கருவியாகக் கூறப்படினும், மற்றக் கருவிகளைப் போல இதுவும் மாயையினின்றும் தோன்றிய, சடமாகிய, தனித்ததொரு கருவி என்று கருதி விடுதல் கூடாது.

காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் மிகு நுண் கருவிகள் ஆன்மாவைப் பொருந்தி எப்பொழுதும் நீங்காமல் சட்டை போல ஒட்டியிருப்பவை. ஆணவ மலத்தைச் சிறிது நீக்கி, ஆன்மாவின் அறிவையும் செயலையும் விளக்கி, உலகப் பொருள்களை நுகர்தற்குரிய தகுதியை உண்டாக்கி நிற்பவை. அக்கருவிகள் ஐந்தும் கூடி நிற்கும் அமைப்பே புருட தத்துவம் என்று குறிக்கப்படுகிறது. ஆகவே புருடன் என்று கூறப்படும் இடங்களிலெல்லாம், மேற்கூறிய ஐந்து கருவிகளும் எப்பொழுதும் ஒடுங்காமல் செயற்படுகின்றன என்றே கொள்ளுதல் வேண்டும்.

ஆன்மா அவத்தையுறும் இடங்களாகிய புருவநடு, கழுத்து, இதயம், உந்தி, மூலாதாரம் ஆகிய ஐந்திலும் புருடன் என்னும் கருவி உள்ளது எனப் பார்த்தோம். அதன் பொருள், அவ்விடங்களிளெல்லாம் காலம், நியதி, கலை முதலிய மிகு நுண் கருவிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதேயாம். ஆன்மா மூலாதாரத்தில் முழு அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் பொழுதும், இக் கருவிகளின் தொழிற்பாடு நிகழும் என அறிதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு- 2

சகல ஐந்தவத்தை:

முந்திய எடுத்துக்காட்டில் கேவல ஐந்தவத்தையின் இயல்பை மேலாலவத்தை என்ற முறையில் வைத்து விளக்கினார்; இவ்வெடுத்துக்காட்டில் சகல ஐந்தவத்தையின் இயல்பைக் கூறுகின்றார்.

வெண்பா

29. இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும்;- இலாடத்தே
அவ்வவ இந்திரியத்து அத்துறைகள் கண்டு அதுவே
அவ்வவற்றின் நீங்கல்; அது ஆங்கு.

இதன் பொருள்:

முந்திய செய்யுளிற் கூறியவாறு. மூலாதாரத்தினின்றும் படிப்படியே மேலேறிப் புருவ நடுவை அடைந்து சாக்கிரத்தை எய்திய ஆன்மா, அப்புருவ நடுவிலேயே ஐந்தவத்தைகளை அடையும்.

புருவ நடுவில் நின்று ஐம்பொறிகளுள் ஒவ்வொன்றைக் கொண்டு அது அதற்கு உரிய புலன்களை நன்கு உணர்தலும், உணர்ந்த அப்பொழுதே அப்புலன்களை உணராது விடுதலுமே அவ்வவத்தைகளாம்.

இங்குக் கூறிய கேவல, சகல அவத்தைகளேயன்றிச் சுத்த அவத்தை என்பதும் ஐந்து வகையாய் நிகழ்வதாகும்.

பதவுரை

இலாடத்தே - முந்திய வெண்பாவிற் கூறியவாறு மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மேல் ஏறி முடிவில் இலாடத்தானம் எனப்படும் புருவ நடுவை அடைந்து

சாக்கிரத்தை எய்திய - விழிப்பு நிலையாகிய சாக்கிரத்தை எய்திய

உள்ளம் - ஆன்மா

இலாடத்தே - அனைத்துக் கருவிகளும் எழுச்சியுற்றுச் செயற்படும் அப்புருவ நடுவிலேயே

ஐந்து அவத்தை எய்தும் - சாக்கிரம் முதலிய வேறு ஐந்தவத்தைகளை அடையும்.

(இவை சகல ஐந்தவத்தைகள் எனப்படும். அவை யாவை எனின்)

இலாடத்தே - அப்புருவ நடுவில்

அவ்வவ இந்திரியத்து - அந்த அந்த இந்திரியங்களால்

அத்துறைகள் கண்டு - அந்த அந்தப் புலன்களை உணர்ந்து

அதுவே - அப்பொழுதே

அவ்வவற்றின் நீங்கல் - அந்த அந்தப் புலன்களை உணராது மறந்து விடுதலாகும்.

(புருவ நடுவில் மிக விரைவாக மாறி மாறி வருகின்ற இந்த நினைப்பு மறப்புக்களை அவரவரும் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்து கொள்ளலாம்.)

(இங்குக் கூறிய கேவல ஐந்தவத்தை, சகல ஐந்தவத்தை என்னும் இவையேயன்றி வேறுவகை அவத்தையும் உண்டு. அது சுத்த அவத்தை எனப்படும்).

அது - சுத்த அவத்தையாகிய அதுவும்

ஆங்கு - மேற்கூறியனபோல ஐந்து வகைப்பட்டு நிகழ்வதாகும்.

விளக்கம்

புருவ நடுவிலேயே எய்தும் ஐந்தவத்தை சகல ஐந்தவத்தை எனப்படும். மத்தியாலவத்தை என்றும் கூறுவர்.

முந்திய எடுத்துக்காட்டில் கூறப்பட்ட கேவல ஐந்தவத்தைக்கும் இங்குக் கூறப்படும் சகல ஐந்தவத்தைக்கும் உள்ள வேறுபாட்டினைப் பின்வருமாறு எடுத்துக்காட்டலாம்.

கேவல ஐந்தவத்தை                    சகல ஐந்தவத்தை

1. ஐந்து வேறு இடங்களில் நிகழ்வன. 1. புருவ நடுவாகிய ஒரே இடத்தில் நிகழ்வன
2. நீடித்து நிகழ்வன                           2. மிக விரைவில் நிகழ்வன
3. உயிர் அறியாமையில் அழுந்தும்     3. உயிர், அறியப்படும் பொருளில் அழுந்தும்

சாக்கிரத்தில் இரண்டு வகை:

புருவ நடுவில் நிகழ்வதாகிய சாக்கிரத்தில் இரண்டு வகையிருத்தல் காணலாம். ஒன்று கேவல சாக்கிரம். மற்றொன்று சகல சாக்கிரம். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டினைப் பின்வருமாறு சுட்டலாம்.

சகல சாக்கிரத்தில் எல்லாக் கருவிகளும் குறைவின்றிச் செயற்படும். அதனால் உயிர் பொருள்களை நன்றாக உணரும்.

கேவல சாத்திரத்தில் ஐம்பொறிகளுக்கு வலிமை தரும் சில கருவிகள் செயற்படாது போகும். அதனால் அப்பொறிகள் தத்தம் புலன்களை நன்கு உணரமாட்டாமல் மந்தமாகவே உணரும். ஒருவன் ஏறிச் செலுத்தும் மிதிவண்டி, அதன் சக்கரத்தில் காற்று இறங்கிப் போனால், விரையச் செல்லாது, உடையவன் கீழே இறங்கி மெதுவாக உருட்ட, மெல்லவே இயங்குவது போன்றது கேவல சாக்கிரம் எனலாம்.

இனி, சுத்த அவத்தைகளை இங்குக் கூறுதல் பொருத்தமில்லை என்பதனால் அவற்றினை ஆசிரியர் விரித்துரைக்காமல் அது ஆங்கு எனச் சுட்டியதோடு அமைந்தார்.

ஆன்மாவின் பொதுவியல்பு:

இந் நூற்பா ஆன்மாவின் பொதுவியல்பாகிய தடக்க லக்கணம் கூறுவதாகும். ஒரு பொருளுக்குப் பிற பொருளின் சேர்க்கையால் உண்டாகும் தன்மையே பொது வியல்பு. அம்முறையில், ஆன்மா மாயை கன்மங்களோடு கூடிச் சகல நிலையில் அஞ்சவத்தைப் படுதலே அதற்குப் பொதுவியல்பாயிற்று.

ஆன்மாவின் உண்மையியல்பாகிய சொரூப லக்கணம் ஏழாம் நூற்பாவில் கூறப்பெறும்

நான்காம் நூற்பா முடிந்தது

 
மேலும் சிவஞானபோதம் »
temple news
நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு ... மேலும்
 
இருவகை இயல்புகள்சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, ... மேலும்
 
முதல் நூற்பாமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் ... மேலும்
 
அம் முதல்வன் அழித்தற்  கடவுளே:இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு ... மேலும்
 
இரண்டாம் நூற்பாமுதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar