பதிவு செய்த நாள்
13
நவ
2013
02:11
எட்டாம் நூற்பா
ஆன்மா அசத்தாகிய உலகத்தையும், சத்தாகிய சிவத்தையும் அறிந்து அனுபவிக்கும் திறன் உடையது என்பதை முந்திய நூற்பாவில் பார்த்தோம்.
இயற்கையும், செயற்கையும்:
சித்தாகிய ஆன்மாவுக்குச் சித்தாகிய சிவமே தன்னினம் ஆகும்; சடமாகிய உலகம் வேற்றினம் ஆகும். ஆன்மா தன்னினமாகிய சிவத்தோடு கூடி நிற்றலே அதற்கு இயற்கையாகும். வேற்றினமாகிய உலகத்தைச் சார்ந்து நிற்றல் செயற்கையாகும். இயற்கை, செயற்கை என்பவற்றை ஓர் உவமை மூலம் விளக்குவோம்.
கடுமையான கோடை வெயில். அதையும் பொருட்படுத்தாமல் சிலர் பரபரப்பாகவும் விரைவாகவும் சென்று கொண்டிருப்பார்கள். அப்படி ஒன்றும் தலை போகிற வேலையாக இருக்காது. மனைவியின் சொற்படி காய்கறி வாங்கக் கடைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்; வழியில் குளிர்ந்த நிழல் பரப்பி நிற்கும் மரத்தைக் கண்டாலும் அதனடியில் சற்றே தங்கி இளைப்பாற எண்ண மாட்டார்கள். வெயிலின் கொடுமையை உணர்ந்தால்லவா நிழல் எங்கே? எங்கே? என்று தேடிச் சென்று அதனையடைந்து இளைப்பாறுதற்கு மனம் வரும். வெயிலைப் பற்றி நினைக்க அவர்களுக்கு எங்கே நேரம்? தாமதமாகச் சென்றால் வீட்டில் துணைவியின் சீற்றத்திற்கு ஆளாக வேண்டுமே. வெயிலைக் கூடத் தாங்கலாம். அதனை எப்படித் தாங்குவது? அதற்குத்தான் இத்தனை விரைவு! குடும்பத் துழனியில் சிக்குண்டவர் நிலை இது.
இதற்கு மாறான ஒரு காட்சியையும் பார்க்கலாம். ஒரு பற்றுக் கோடும் இல்லாத இரவலன் ஒருவன் வெயிலில் வெதும்பி வருகிறான்; ஒதுங்கி நிற்பதற்கு ஒரு நிழல் இருக்காதா என்று ஏங்கி வருகிறான். வழியில் தண்ணிழலையுடைய மரத்தைக் கண்டால் அவன் ஒரு கணமேனும் தாமதிப்பானா? தயங்கி நிற்பானா? நிழலின் அருமை அவனுக்கல்லவா தெரியும். உடனே ஓடிச் சென்று அந்நிழலையடைந்து, அதனுள் அடங்கி அமர்ந்து, ஆராத அவ்வியற்கையின்பத்தை அனுபவிப்பான் அன்றோ?
இனி இவ்வுவமையைப் பொருத்திப் பார்ப்போம். வெயிலில் அலைந்து திரிதல் செயற்கை நிலையும், நிழலில் அடங்கி நின்று இன்புறுதல் இயற்கை நிலையும் ஆதல் போல, உயிர்கள் உலகச் சார்பினால் துன்புறுதல் செயற்கையும், அதனை விடுத்துச் சிவத்தைச் சார்ந்து இன்புறுதலே இயற்கையும் ஆகும். சுருங்கக் கூறினால், கட்டுநிலை செயற்கை; முத்தி நிலையே இயற்கை.
செயற்கை நிலையை உணராமை:
கட்டுநிலை செயற்கை என்பதை உயிர்கள் உணர்வதில்லை. செயற்கையாகிய உலகச் சார்பையே தமக்குரிய இயற்கை நிலை என்று எண்ணுகின்றனர்; உலக வாழ்வில் விடுதல் அறியா விருப்பம் கொள்கின்றனர். கால் ஊன்றி விரைவாக நடந்த காலம் போய்க் கோல் ஊன்றித் தள்ளாடி நடக்கும் முதுமை வரினும் உலக நாட்டம் தணிவதாய் இல்லை. உலகின் மீள மீளப் பிறத்தல் வேண்டும்; அனுபவித்தவற்றையே மீள மீள அனுபவித்தல் வேண்டும் என்றுதான் பலரும் ஆசைப்படுகின்றனர். உலகச் சார்பு செயற்கை யாதலையும், பாசத்தால் விளையும் துன்ப நிலையையும் உணராமையே இதற்குக் காரணம்.
நாக்கு பித்தத்தில் உள்ளபொழுது தித்திப்பதாகிய பாலும் அதற்குக் கசப்பாகவே தோன்றும். அதுபோல உயிர்கள் பாசத்தில் மூழ்கியுள்ள போது தித்திப்பதாகிய திருவருள் இன்பம் இன்பமாகத் தோன்றாது; கைக்கின்ற பொருளாகவே-வேண்டாத பொருளாகவே தோன்றும். அதுபற்றியே உயிர்கள் திருவருள் இன்பத்தை நாடாதிருக்கின்றன.
அஞ்ஞானம் காரணம்:
இவ்வாறு உயிர்கள் இன்பப் பொருளைத் துன்பப் பொருள் என்றும், துன்பப் பொருளை இன்பப் பொருள் என்றும் மாறி உணர்தற்குக் காரணம், ஆணவ மலம் உயிரறிவை வேறுபடுத்திப் பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணரவொட்டாது தவறாக உணரச் செய்தலேயாகும்.
பொருளியல்பைத் தவறாக உணர்தல் அஞ்ஞானம் ஆகும். உயிர் அஞ்ஞானத்தில் கட்டுண்டு நிற்கின்ற வரையில் அஃது உறவல்லாத அசத்தோடு உறவாடித் துன்புறும்; தான் பெறத்தக்க பேரின்பம் எங்கும் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்றலை அறியாதிருக்கும்.
ஞானத்தால் அஞ்ஞானம் நீங்குதல்:
இந்த அஞ்ஞானம் நீங்குவதற்கு என்ன வழி? அதற்கு ஒரே வழி தான் உள்ளது. அஞ்ஞானம் என்பது பொருளியல்பைத் தவறாக உணர்தல் எனப் பார்த்தோம். எனவே, பொருளியல்பை உள்ளவாறு உணரும் அறிவு வருமானால் அஞ்ஞானம் நீங்கி விடும். உள்ளவாறு உணரும் அறிவு ஞானம் எனப்படும். உண்மையறிவாகிய ஞானம் வந்தபோது பொய்யறிவாகிய அஞ்ஞானம் நீங்குதல், ஒளிவந்த போது இருள் நீங்குதல் போன்றது.
ஓர் எடுத்துக்காட்டு:
உண்மையறிவால் அஞ்ஞானம் நீங்கும் என்பதை வாழ்க்கை நிகழ்ச்சி யொன்றைக் கொண்டு விளக்குவோம். ஒரு பெற்றோர் தம் ஒரே செல்வ மகனைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்க்கிறார்கள். படிப்பு பணம் முதலிய பல வசதிகளைக் குறைவின்றி அளிக்கிறார்கள். அவனோ தீய இனத்தோடு சேர்ந்து, நெறியல்லா நெறியில் சென்று கெட்டுத் திரிகிறான்; ஆனால் தன் பெற்றோர் முன் நல்லவன் போல் நடிக்கிறான். அதனை அவர்கள் நம்பி விடுகிறார்கள்; தம் மகனைப் போல ஒருவன் உண்டா என்று பெருமைப்படுகிறார்கள். ஊரில் ஒரு சிலர் அவர்களிடம் வந்து உங்கள் மகனது போக்கு அவ்வளவு சரியில்லை என்று எடுத்துச் சொன்னாலும் அவர்கள் அதை எடுத்துக் கொள்வதாக இல்லை. தம் மகன்மீது உள்ள பொறாமையினால் இப்படிச் சொல்லுகிறார்கள் என்றுதான் கருதுகிறார்கள். இதுதான் அஞ்ஞானம் என்பது.
இந்த அஞ்ஞானம் எப்பொழுது நீங்கும்? அம்மகன் கொடியதொரு குற்றத்தைச் செய்து, கைகளில் விலங்கு பூண்டு சிறைக்குச் செல்லும் காட்சியைக் கண்ணாரக் காணும்போது- தம் மகனது உண்மையான இயல்பை உள்ளவாறு அறிகின்றபோது -அவர்கள் அவனைப்பற்றிக் கொண்டிருந்த மயக்க அறிவு- அஞ்ஞானம் நீங்குவதாகும்.
உண்மையறிவு வந்தபோது அஞ்ஞானம் நீங்கும் என்பதை இன்னோரன்ன வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அறியலாம்.
ஞானமே வழி:
அஞ்ஞானத்தின் வசப்பட்டிருக்கும் கட்டு நிலையிலிருந்து விடுபடுவதற்கு வழி, உண்மையறிவாகிய ஞானத்தைப் பெறுதலேயாம். தான் அசத்தாகிய உலகத்தைச் சார்ந்து நின்று துன்புறுதல் செயற்கை என்பதையும், சத்தாகிய சிவத்தைச் சார்ந்து இன்புறுதலே தனக்குரிய இயற்கை என்பதையும் உயிர் உள்ளவாறு உணர்தல் வேண்டும்.
வெயிலின் துன்பத்தை உணராதவர் வெயிலிலேயே அலைந்து கொண்டிருப்பர். வெயிலின் கொடுமையை உள்ளவாறு உணர்ந்தவரே அதற்கு அஞ்சி அதனை விடுத்து நிழலையடைந்து இன்புறுவர். அதுபோல பாசத்தால் விளையும் துன்ப நிலையை உள்ளவாறு உணர்ந்தவரே வெயில் போல வெதுப்பும் அதனை விட்டு விலகிப் பதியாகிய தண்ணிழலைச் சார்ந்து இன்புறுவர்.
பசுவாகிய உயிர் தன்னியல்பையும், தனக்கு வேறாகிய பாசத்தின் இயல்பையும், தனக்கு உறவாகிய பதியின் இயல்பையும் உள்ளவாறு உணரும்போதே அது பாசத்தை விட்டுப் பதியினைச் சேரும். அதுவே முத்தி நிலை. இதனால், முத்திக்கு வழி அல்லது சாதனம் முப்பொருள்களின் இயல்பையும் உள்ளவாறு அறிவதாகிய ஞானமே என்பது தெளிவாகும்.
ஞானத்தில் வேட்கை உண்டாகாமை:
ஞானமே வீடு பேற்றிற்கு வழியாயின், அந்த ஞானம் எப்பொழுது வரும்? உலக மக்கள் ஞானத்தைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்வதாகத் தெரியவில்லையே. அதனை யாரும் பொருட்படுத்தியதாகத் தோன்றவில்லையே. ஞான நூல்களை நன்கு கற்றவரும் தாம் கற்றவற்றைப் பிறருக்கு ஆரவாரமாக எடுத்துச் சொல்லிப் பெருமை பெற்றுத் திரிகிறார்களேயன்றி, அவ்வழியில் சிறிதும் நிற்கவில்லையே. சொற்பொழிவில் அவர்கள் இது என்ன உடம்பு? இது நீர் மேல் தோன்றும் குமிழிக்கு ஒப்பானது என்பார்கள். ஆனால் தம் உடம்புக்கு இது பொருந்தாது என்பது அவர்கள் எண்ணம்! செல்வம் நில்லாது. அது மின்னலைப் போன்றது. அதற்கு ஆசைப்படலாமா? என்பார்கள். தமது பேச்சுக்குரிய பெருந்தொகையை எண்ணிப் பெற்றுக் கொண்டு தான் இப்படிப் பேசுவார்கள்! யாரேனும் பசியினால் வருந்தி வந்து ஐயா சோறு இடுங்கள் என்று இரந்து கேட்டால், எங்கேயோ விரைவாகப் போகிறவர் போன்று அந்த இடத்தை விட்டே எழுந்து போய் விடுவார்கள். இப்படியாக ஞான நூல்களை அறிந்தவர்களும் அதன்படி ஒழுகாதவராக வாழ்கின்றார்களே. இந்நிலையில் ஞானம் எப்படி வரும்? என்றெல்லாம் வினவலாம். அதற்கான விடையைக் காண்போம்.
மக்கள் ஞானத்தைப் பற்றிச் சிறிதும் எண்ணாதிருப்பதற்குக் காரணம், அந்த ஞானத்தின்மேல் அவர்களுக்கு ÷வ்டகை உண்டாகாமை. நீர் வேட்கை இல்லாதவர் நீரை நாடமாட்டார்; பசியெடுக்காதவர் உணவை நாடமாட்டார். அதுபோல, ஞானத்தில் வேட்கையில்லாதவர் அதனைப் பற்றி எண்ணமாட்டார்; அதனை அடைவதற்கு முயல மாட்டார்.
வேட்கை உண்டாகாமைக்குக் காரணம்:
ஞானத்தில் வேட்கை உண்டாகாமைக்கு என்ன காரணம்? உயிரறிவை அஞ்ஞானத்துட் படுத்துவதாகிய ஆணவ மலமே அதற்குக் காரணம். ஆணவ மலம் மேலான ஞானத்தில் நாட்டம் செல்லாதபடி தடுக்கும்; கீழான உலகப் பொருளையே நாடி நிற்கும்படி செய்யும். இவ்வாறு ஆணவ மலம் அறியாமையைச் செய்வதுடன், அந்த அறியாமையையே அறிவு போலக் காட்டி நிற்கும்! அஃதாவது, தன்னை உடையவர் உயர்ந்த நூல்களை ஓதி உணர்ந்தவராக இருந்தாலும், அவற்றின் பொருளைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லிப் பெருமையடையும் நிலையைப் பெற்றிருந்தாலும், அவ்வழியிலே நில்லாது அவரைத் தவறி நடக்கும்படி செய்யும்; தான் மேற்கொண்ட ஒழுக்கம் தீயதாயினும் அதனைச் சரியானது என்றே எண்ணச் செய்யும்.
மல பரிபாகம்:
உயிரின் அறிவைப் பிணித்திருக்கும் ஆணவ மலத்தின் சத்தி மெலிந்து நீங்கும் நிலையை அடையும் போதே ஞானத்தைப் பெறுதலில் உண்மையான நாட்டம் உண்டாகும்.
ஆணவ மலத்தின் ஆற்றலை மெலிவித்தற் பொருட்டே இறைவன் மாயை, கன்மங்களை உயிருக்குக் கூட்டிப் பிறப்பு இறப்புக்களிற் செலுத்தி இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்கின்றான். ஆணவ மலம் சடப்பொருள். சடப்பொருளின் ஆற்றல், செயற்படச் செயற்பட, மெலிவடைதல் இயல்பு. கணக்கற்ற பிறவிகளில் ஆணவ மலத்தின் சத்தி உயிரறிவைத் தடைப்படுத்தியும், திரிவு படுத்தியும் செயற்படுவதனால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலைச் செய்யமாட்டாத நிலையை அடையும்; உயிரறிவைத் தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலையை அடையும். அந்நிலை மல பரிபாகம் எனப்படுகிறது. பரிபாகம் என்பதற்குப் பக்குவம் என்பது பொருள். மல சத்தி நீங்கக் கூடிய பக்குவத்தை- தகுதியை அடைந்துள்ளது என்பதை இது குறிக்கிறது.
சத்தி நிபாதம்:
இவ்வாறு மலபரிபாகம் சிறிது சிறிதாக நிகழ நிகழ, அதற்கேற்ப, இதுகாறும் உயிரில் மறைந்திருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சத்தியும் சிறிது சிறிதாகத் தன் தன்மை மாறி, அருள் புரியும் சத்தியாக உயிரின்கண் விளங்கித் தோன்றும். ஆணவ மலத்தின் சத்தி எந்த அளவுக்கு மெலிந்து வருகிறதோ, அதன் மறைப்பு எந்த அளவுக்கு நீங்குகிறதோ, அந்த அளவுக்கு இறைவனது சத்தியும் உயிரில் விளங்கி விளங்கி மேம்பட்டு வரும்.
வளர்பிறைக் காலத்தில் நாள்தோறும் இரவில் மதியின் ஒளி படிப்படியே மிகுந்து வரும். அதற்கேற்ப, இருளின் செறிவும் படிப்படியே தேய்ந்து வரும். மதியின் ஒளி மிகுந்து வருதலும், இருள் மடங்கி வருதலும் ஒரு சேர நிகழ்கின்ற உடன் நிகழ்ச்சிகளாகும். அதுபோல, மலத்தின் சத்தி தேய்தலும், இறைவனது சத்தி மேம்படுதலும் முன் பின் இன்றி, ஒருங்கே உடனாக நிகழ்வன ஆகும்.
இறைவனது சத்தி வளர்பிறை மதி போல உயிரின் அறிவைச் சிறிது சிறிதாக மேலும் மேலும் விளக்கி வரும். உயிரின் அறிவை மறைத்து நின்ற ஆணவ மலத்தின் சத்தியும் வளர்பிறைக் காலத்து இருள் போலச் சிறிது சிறிதாகத் தேய்ந்து தேய்ந்து வரும். மல சத்தி தேய்ந்து வரும் நிலையை மலபரிபாகம் என்றாற் போல, அருட்சத்தி விளங்கி வரும் நிலையைச் சத்தி நிபாதம் என்பர்.
சத்தி நிபாதமாவது, மலத்தின் பக்கமாய் நின்று மறைத்தல் தொழிலைச் செய்து வந்த திரோதான சத்தி அந்நிலை நீங்கி அருட் சத்தியாக மாறி உயிரிடத்தில் சிறிது சிறிதாகப் பதிதல் எனலாம்.
சத்தி நிபாதம் என்பதன் நேரான பொருள் திருவருள் வீழ்ச்சி என்பதாகும். சத்தி - திருவருள்; நிபாதம்- வீழ்ச்சி; இதனைச் சத்தி பதிதல் என்றோ, சத்தி தோன்றுதல் என்றோ கூறாமல், சத்தி வீழ்தல் என்று கூறுவது எதற்காக என வினவலாம். அதில் ஒரு குறிப்பு உண்டு. ஒரு கூட்டத்தில் ஒரு கல் வந்து வீழ்ந்தால் அங்குள்ளோர் அதிர்ச்சியடைந்து அவ்விடத்தைவிட்டு அஞ்சி அகல்வர். அதுபோலச் சத்தி நிபாதம் ஒருவருக்கு நிகழுமானால், உலகச் சூழலில் நின்ற அவர்க்கு ஓர் அதிர்ச்சி உண்டாகும். அவர் பிறவித் துன்பத்திற்கு அஞ்சி, உலகச் சூழலிலிருந்து நீங்குவதற்கு முயல்வர் என்னும் குறிப்புத் தோன்ற அவ்வாறு கூறப்பட்டது.
நிலையில் உண்டாகும் மாற்றம்:
அருட்சத்தி பதிவால் உயிர் உலகப் பொருள்களின் இழிவையும் நிலையாமையையும் உணரும். அங்ஙனம் உணர உணர, அவற்றினின்றும் நீங்குதற்குரிய முயற்சியில் மனம் செல்லும். சத்தி நிபாதம் நிகழப் பெற்றவர் நிலையில் உண்டாகும். மாற்றத்தினை
ஐந்து வகை யாகின்ற பூத பேதத்தினால்
ஆகின்ற ஆக்கை நீர்மேல்
அமர்கின்ற குமிழியென நிற்கின்றதென்ன நான்
அறியாத கால மெல்லாம்
புந்தி மகிழுற உண்டு உடுத்து இன்ப மாவதே
போந்த நெறி என்றிருந்தேன்;
பூராயமாக நினது அருள்வந்து உணர்த்த இவை
போன வழி தெரியவில்லை.
என வரும் தாயுமானவர் வாக்கிற் காணலாம்.
சத்தி நிபாதத்தின் வகைகள்:
சத்தி நிபாதம் எண்ணிறந்த வகையில் நிகழ்ந்துவளர்ந்து வரும். ஆயினும் அது நிகழும் முறையைப் பொதுவாக நால்வகைப் படுத்துக் கூறுவர். அவை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன.
சத்தி நிபாதம் தொடக்கத்தில் மிக மந்தமாய் நிகழும். அந்நிலையே மந்ததரம் என்பது. பின்பு ஓரளவு மந்தமாய் நிகழும். பின்பு தீவிரமாய் நிகழும். கடைசியில் முற்ற முதிர்ந்து தீவிரதரமாய் முடியும். தீவிரதரம் என்பது அதி தீவிரம் என்றும் சொல்லப்படும்.
சத்தி நிபாதத்தின் தன்மைக்கு ஏற்ப உலகியலில் பற்று நீங்குதலும், சிவ நெறியில் மனம் பற்றுதலும் படிமுறையில் உண்டாகும். சத்தி நிபாதம் மந்ததரமாய் நிகழும்போது உலகியல் நாட்டம் சிறிதே நீங்கி, சிவநெறியில் நாட்டம் சிறிதே உண்டாகிப் பின் படிப்படியே பெருகி வரும்.
வழிபாட்டில் விருப்பம்:
சிவபெருமானது முதன்மையைச் சிறிதளவேனும் உணர்ந்து, அப்பெருமானுக்குப் பணி செய்தல் வேண்டும் என்னும் விருப்பம் சிறிதளவேனும் நிகழுமானால் அதுவே சத்தி நிபாதத்தின் அறிகுறியாகும்.
சத்தி நிபாதத்தின் தன்மைக்கு ஏற்பச் சிவ வழிபாட்டில் விருப்பம் உண்டாகும். அவ் விருப்பத்தின் அளவிற்கு ஏற்ப அவ் வழிபாடும் சரியை, கிரியை, யோகம் என மூன்றாய் நிகழும்.
சரியை:
சரியை என்பது சிவபெருமானது உருவத் திருமேனியை மட்டும் உணர்ந்து அதனைப் புறத்தொழிலால் மட்டும் வழிபடுதல் ஆகும். திருக்கோயிலிற் சென்று புலர்வதன்முன் அலகிடுதல், மெழுக்கிடுதல், விளக்கேற்றுதல், மாலை கட்டிக்கொடுத்தல், தலையாரக் கும்பிட்டுக் கூத்தாடுதல், பாடுதல் முதலியன சரியையாகும். சத்தி நிபாதம் மிக மெல்ல நிகழ்வதாகிய மந்த தரம் என்னும் நிலையில் நின்றோர் சரியைத் தொண்டினை விரும்பிச் செய்வர்.
கிரியை:
சரியைத் தொண்டினைச் செய்து வந்த முதிர்ச்சியினால், ஆணவமலம் மேலும் பரிபாகமுற்றுச் சத்தி நிபாதம் மந்தமாய் நிகழும். அப்பொழுது கிரியைத் தொண்டில் விருப்பம் உண்டாகும். கிரியையாவது சிவபெருமானது அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்தின் சிறப்புணர்ந்து அப்பெருமானை மனம் மொழி மெய் என்னும் மூன்றினாலும் அகத்திலும் புறத்திலும் வழிபடுதல் ஆகும். இலிங்கமூர்த்தியை எழுந்தருள்வித்து, நறுமலர் புகை ஒளி திருவமுது திருமஞ்சனம் முதலிய பூசைப் பொருள்களைத் திரட்டிக் கொண்டு, ஆகமங்கள் விதித்தபடி மெய்யன்போடு அருச்சனை செய்து, தியானித்து வழிபடுவது என இதனை விளக்கிக் கூறலாம்.
யோகம்:
கிரியைத் தொண்டினால் ஆணவமலம் மேலும் பரிபாக முற்றுச் சத்தி நிபாதம் தீவிரமாய் நிகழும். அந்நிலையில் இறைவனது அருவத் திருமேனியை உணரும் பக்குவத்தைப் பெற்று அகத் தொழிலால் மட்டும் வழிபடுதல் யோகம் ஆகும். புறத்தே பரந்து செல்லும் மனத்தை அவ்வாறு செல்லாதவாறு அடக்கி அகத்தே நிறுத்தி ஒளி வடிவினனாகிய இறைவனோடு ஒன்றச் செய்தல் என இதனை விளக்கிக் கூறலாம்.
தவம்:
சிவபெருமானை நோக்கிச் செய்யும் சரியை, கிரியை, யோகம் ஆகிய வழிபாடும் தொண்டுமே சைவத்தில் தவம் என்று சிறப்பித்துக் கூறப்படும்.
வீட்டைத் துறந்து காட்டிற் சென்று உணவை வெறுத்தும் உடலை ஒறுத்தும் செய்யும் கடுமையான தவங்களும் சிவபெருமானை நோக்கிச் செய்யாத பொழுது தவம் ஆகா. வீட்டில் மனைவி மக்களோடு கூடியிருந்து மனையறம் நடத்தினாலும் சிவபெருமானையே நினைந்து வழிபாடு செயதால் அதுவே உண்மைத் தவம் ஆகும்.
மந்த தரம், மந்தம், தீவிரம் என்னும் சத்தி நிபாத நிலைகளுக்கு ஏற்பச் சிவ வழிபாடாகிய தவமும் சரியை, கிரியை, யோகம் என மூன்றாய் நிகழ்வதாயிற்று என அறிந்தோம்.
இனி, அதி தீவிரம் எனப்படும் நான்காம் சத்தி நிபாத நிலையில் ஞானம் நிகழும். ஞானம் நிகழும் முறையைக் காண்போம்.
இருவினை யொப்பு:
மேற்கூறிய சரியை கிரியா யோகங்கள் ஆகிய தவத்தினைப் பொருள் புகழ் முதலிய உலகப் பயன்களைக் கருதாது, சிவபெருமானிடம் கொண்ட அன்பு ஒன்றே காரணமாகச் செய்துவரின் அத்தவ முதிர்ச்சியால் இருவினையொப்பு உண்டாகும்.
நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது, அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்று போலக் கருதி அவற்றின்மேல் பற்றுச் செய்யாது நிற்கும் உணர்வே இருவினையொப்பு எனப்படும். இருவினையொப்பு வரப்பெற்றோர் உலகியலில் இச்சையின்றி இருப்பர்; ஓடும் செம்பொன்னும் ஒன்று என நோக்குவர்.
ஞானம் வரும் காலம்:
இருவினையொப்பு நிகழவே, வினை நிங்கும். வினை நீங்கவே, உயிரறிவு உள்ளவாறு விளங்கும்; உணர்த்தியதனை உணர்த்தியவாறே உணரும் தன்மையைப் பெறும். உணர்த்தியவாறு கொள்ளும் அறிவு நிலையே உயிரினது பக்குவம் எனப்படுகிறது. இதுவே ஞானத்தை உணர்தற்கு ஏற்ற பருவம். எனவே, இருவினை யொப்பு வரும் காலமே உயிருக்கு ஞானம் வரும் காலம் என்பது விளங்கும்.
பொருளியல்பை உணரும் வேட்கை:
சத்தி நிபாதம் அதிதீவிரமாய் நிகழும்பொழுது, பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்தல் வேண்டும் என்னும் வேட்கை மிகுந்தெழும். அஃதாவது, நான் யார்? எனக்கும் இவ்வுடம்புக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டது? நான் வந்தவாறு எங்ஙனம்? போமாறு ஏது? எனக்கு வரும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் யாது? இத்துன்பத்தினின்றும் நீங்கி நிலைத்த இன்பத்தைப் பெற முடியுமா? அதற்குரிய வழியாது? என்று இங்ஙனம் பொருள்களின் உண்மை நிலையை உள்ளவாறு உணர்தலில் பெரு விருப்பம் உண்டாகும்.
ஞானாசிரியர் தோன்றுதல்:
பக்குவம் உறாத பொழுது உயிர்க்குயிராய் உள்ளே மறைந்து நின்று அதன் அறிவை வளர்த்து வந்த சிவனே இப்பொழுது அவ்வுயிரின் பக்குவ நிலையையும், ஞானத்தைப் பெறுதலில் உள்ள வேட்கையையும் பார்த்தருளி, ஞானாசிரியராக எழுந்தருளி முப்பொருளின் இயல்புகளையும் அறிவுறுத்துவார். பொருளியல்பு முற்றும் உள்ளவாறு விளங்குதலே ஞானமாகும். அவ்வாறு ஞானம் விளங்கிய பொழுது, அவ்வுயிர் அசத்தை அசத்து என்று கண்டு கழித்துச் சத்தாகிய சிவத்தோடு கூடி இன்புறுதலாகிய முத்தி நிலையைப்பெறும்.
சுருக்கம்:
1) முத்திக்குச் சாதனம் ஞானம்
2) ஞானமாகிய சாதனத்திற்குச் சாதனம் சரியை முதலிய தவம்.
3) தவத்திற்குக் காரணம் மந்ததரம் முதலிய பக்குவம்
4) ஆன்மாக்களின் அறிவு படிமுறையால் மேன்மேலும் விளங்கிப் பக்குவப்பட்டு வருவதற்கு, சிவன் உயிர்க்குயிராய் என்றும் நீங்காமல் உடனாய் நின்று நோக்கி வரும் அருள் நோக்கமே காரணம்.
இனி நூற்பாவை நோக்கினால் அதன் பொருள் நிலை இனிது விளங்கும்.
நூற்பா
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த, விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.
இந் நூற்பா எதனைக் கூற எழுந்தது என்பதனைக் கருத்துரையுட் கூறுகின்றார் ஆசிரியர்.
ஆசிரியர் கூறும் கருத்துரை:
என்பது சூத்திரம். என் நுதலிற்றோ எனின், ஞானத்தினை உணரும் முறைமையினை உணர்த்துதல் நுதலிற்று.
கருத்துரையின் பொருள்
வீடுபேறாகிய பயனை அடைவதற்குச் சிறந்த சாதனம் ஞானமே ஆகும். ஞானமாகிய சாதனத்தைப் பெறுவதற்குரிய வழியை உணர்த்துகின்றது இந்நூற்பா.
நூற்பாவின் பொருள்:
ஓர் அரசன் மகன் சிறு குழந்தையாய் இருந்த பொழுதே வேடர் கூட்டத்தில் அகப்பட்டு அவரிடம் வளர்ந்து வந்தான்; தான் மன்னன் மகன் என்பதை அறியாது, வேடருள் ஒருவனாகவே தன்னைக் கருதி, அவர்க்குரிய இழிதொழிலைச் செய்து கொண்டு காட்டில் வாழ்ந்தான்.
உண்மையை உணர்த்தினால் அறியக்கூடிய பருவத்தை அவன் அடைந்தவுடன், அவனது தந்தையாகிய அரசன் அவனிடம் சென்று அவனைப் பற்றிய உண்மையை உணர்த்தினான். அப்பொழுதுதான் அவன் தான் அரசகுமாரன் என்பதையும், இம்மாநிலம் முழுவதும் தனக்கு உரியது என்பதையும் அறிந்தான். அறிந்த அக்கணமே அவ்வேடர் கூட்டத்தை விட்டு விலகித் தன் தந்தையோடு சேர்ந்து எல்லா நலன்களையும் எய்தினான்.
இக்கதையில் வரும் அரச குமாரனைப் போன்று இருப்பது ஆன்மாவாகும். எல்லாவுலகுக்கும் முதல்வனாகிய சிவபெருமானது மைந்தனாக இருந்தும் அதனை அறியாமல் ஐம்பொறிகளாகிய வேடரிடத்து அகப்பட்டு வளர்கிறது; தனது வியாபக இயல்பைத் தெரிந்து கொள்ளாமல், ஐம்பொறி முதலிய கருவிக் கூட்டத்தால் வரும் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையதாகி அவற்றையே தன்னியல்பாக மயங்கி இடர்ப்படுகின்றது.
ஆன்மா உண்மையை உணரக்கூடிய பக்குவத்தை எய்தாத காலத்தில் உண்மையை உணர்த்தினால் உணர மாட்டாது. ஆதலால் உணர்தற்குரிய பக்குவம் வரும்வரை காத்திருந்து, அப்பருவம் வந்தவுடன் முதல்வனாகிய சிவன் ஞானாசிரியனாகச் சென்று உண்மையை உணர்த்த, அதனை உணர்ந்த ஆன்மா அப்பொழுதே ஐம்பொறி முதலிய கருவிக் கூட்டத்தை விட்டு நீங்கி அம் முதல்வனை அடையும்.
இப் பொருளை மெய்கண்டார் நூற்பாவில் அமைத்துக் கூறியுள்ள முறையைப் பார்ப்போம்.
ஆன்மா முற்பிறப்புக்களில் செய்த சிவ வழிபாடாகிய தவத்தின் பயனாக, இதுகாறும் உயிர்க்குயிராய் மறைந்து நின்று அறிவைத் தந்த முதல்வன் இப்பொழுது குரு வடிவம் கொண்டு நேரே எழுந்தருளி வந்து, எமது மைந்தனாகிய நீ ஐம்பொறிகளாகிய வேடரிடத்து அகப்பட்டு அவர் வழியிலே வளர்ந்தமையால் உனது உண்மையியல்பை மறந்து மயங்கித் துன்புறுகின்றாய் என்று அறிவிக்க, அதனையறிந்த ஆன்மா அப்பொழுதே அவ்வைம்புல வேடரை விடுத்து, உணர்த்திய அம்முதல்வன் தனக்கு வேறாய் நில்லாது தன்னோடு என்றுமே உடனாய் இருத்தலால், அதனை உணர்ந்து அவனது திருவடியை அடைந்துவிடும் என்பது நூற்பாவின் பொருள்.
பதவுரை
தவத்தினில் - ஆன்மா முற்பிறப்புகள் பலவற்றில் செய்த சரியை, கிரியை, யோகம் ஆகிய தவத்தின் காரணமாக
தம் முதல் - பக்குவம் வராத வரையில் உயிர்க்கு உயிராய் உள்ளே மறைந்து நின்று அறிவித்து வந்த முதல்வன்
குருவுமாய்- பக்குவம் வந்த இப்பொழுது ஆசிரியனாயும் வடிவு கொண்டு வெளிப்பட்டுத் தோன்றி
(பின் வருமாறு மெய்ஞ்ஞானத்தை உணர்த்துவான்.)
ஐம்புல வேடரின் - சிவனாகிய மன்னவனுக்கு மைந்தனாகிய நீ ஐம்பொறிகளாகிய வேடரிடத்தில் அகப்பட்டு
வளர்ந்து - அவர் வழியிலே வளர்ந்து
அயர்ந்தனை - உன்னை வேடர் மகனாகவே கருதி மயங்கி, உனது உண்மையியல்பை மறந்தாய்
என உணர்த்த - என்று உண்மையை அறிவுறுத்த
(அவ்வுண்மையை உணர்ந்த ஆன்மா பக்குவம் பெற்றிருந்த காரணத்தால்)
விட்டு - அவ் ஐம்பொறி முதலிய கருவிக் கூட்டத்தை விட்டு நீங்கி
அன்னியம் இன்மையின் - அம்முதல்வன் அவ்வுயிரின் வேறாய் எங்கேயோ இல்லாமல், அவ்வுயிரிடத்தேயே என்றும் உடனாய் இருத்தலின்,
அரன் கழல் செலும் - அவனது திருவடியிலே போய்ச் சேர்ந்து விடும்.
சிறப்புரை:
விட்டுச்செலும் என்னும் பயனிலைக்கு எழுவாய் ஆன்மா என்பது. அச்சொல் நூற்பாவில் இல்லை. அதனை முன்னை நூற்பாவிலிருந்து வருவித்துக் கொள்ள வேண்டும்.
ஐம்புலன் என்றது இங்கே தனது பொருளைத் தராமல் ஆகு பெயராய் நின்று, அவற்றை அறியும் ஐம்பொறிகளை உணர்த்திற்று.
நாம் ஐம்பொறிகளோடு மட்டும் தானா கூடியிருக்கிறோம்? அவற்றினும் நுண்ணியவாய கருவிகள் பலவற்றோடு சேர்ந்து நின்றே இவ்வுலகத்தை அறிந்து வருகிறோம். இக்கருவிகளெல்லாம் நம்மைப் பிணித்து மயக்குகின்றன. இக்கருவிகளுள் நமக்கு எளிதில் விளங்குவன ஐம்பொறிகளே. ஆதலால் அவற்றை மட்டுமே வேடராக உருவகம் செய்து காட்டினார் ஆசிரியர். ஆயினும், இனம் பற்றிக் கருவிக் கூட்டம் அனைத்தையுமே இங்குக் கொள்ள வேண்டும்.
ஐம்பொறிகளை வேடராக உருவகம் செய்ததற்கு ஏற்ப ஆன்மாவை அரசனது மகனாக உருவகம் செய்யாமையால், இஃது ஏகதேச உருவகம்.
இழிவுடைய கருவிகளை விட்டு நீங்கிய உயிர் முதல்வனை எவ்வாறு அடையும் என்னும் ஐயத்தை நீக்குதற்கு அன்னியம் இன்மையின் என்றார் ஆசிரியர்.
அன்னியம் இன்மை - வேற்றுமையின்மை; அத்துவிதம்.
இறைவன் ஆன்மாவின் வேறாதலின்றி எப்போதும் உடனாயே நிற்றலின், அவனை அகமுகமாக உள்ளவாறு உணர்தலே அவனை அடைதலாகும்.
விளக்கம்:
தவத்தினில், தம் முதல் குருவுமாய், ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தனை என உணர்த்த, விட்டு, அன்னியம் இன்மையின் அரன்கழல் செலும் என்ற முறையில் சொற்களை அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.
உருவகப் பொருத்தம்:
இறைவன் உலகிற்கெல்லாம் தானே ஆதாரமாய் நிற்றல், எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்றல், உயிர்க்கு உயிராய் நின்று எல்லாவற்றையும் இயக்குதல் ஆகிய சிறப்புக்களை உடையவனாய் நின்று உலகை நடத்துதலின் அவனை அரசன் என்று கூறியது பொருத்தமாகும்.
ஆன்மா இறைவனைப் போலச் சித்து ஆதல் பற்றியும், அரசனுக்கு உரியவற்றை யெல்லாம் அவனது மைந்தன் பெறுவது போல இறைவனுக்கு உள்ள எண்குணங்களையும் பெற்று நுகர்தற்கு உரிமையுடையவனாதல் பற்றியும் அரசகுமாரன் எனப்பட்டான்.
வேடர்கள் தம்மிடம் அகப்பட்டவர் செல்வத்தைக் கவர்ந்து இடம் விளைவித்தல் போல, ஐம்பொறிகள் தம் வசப்பட்ட ஆன்மாவின் வியாபக அறிவாகிய பெருஞ்செல்வத்தைக் கவர்ந்து கொண்டு சிறுமையை விளைவித்தல் பற்றி அவற்றை வேடராக உருவகம் செய்தார்.
பக்குவ முதிர்ச்சி யுடையார்க்குப் பலவாகிய உபதேசம் வேண்டுவதில்லை. நுண்ணிய சில சொற்களே போதும். அவையே ஞானத்தைத் தந்து விடும். அது பற்றியே, ஐம்புலவேடரின் வளர்ந்து அயர்ந்தனை என ஞானாசிரியரின் உபதேசத்தைச் சுருங்கிய சொற்களாக அமைத்தார் ஆசிரியர்.
இந் நூற்பாவின் பொருளை நான்கு கூறுகளாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர். அக் கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு:
கூறு பொருள்
முதற்கூறு - ஞானத்திற்குக் காரணமாகிய தவத்தினது நிலை
இரண்டாம் கூறு - முதல்வனே குருவாய் வந்து உணர்த்துதல்
மூன்றாம் கூறு - ஐம்பொறி முதலிய கருவிகளின் இயல்பு
நான்காம் கூறு - ஆன்மா கருவிகளின் நீங்கி முதல்வனது திருவடியை அடைதல்
முதற் கூறு
இம் முதற்கூறில் ஞானமாகிய சாதனம் கிடைக்கும் முறையை உணர்த்துகின்றார் ஆசிரியர்.
மேற்கோள்
ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய் தவத்தான் ஞானம் நிகழும் என்றது.
மேற்கோளின் பொருள்
ஆன்மாக்களுக்கு அவை முற்பிறப்புகள் பலவற்றில் செய்த தவங்களின் பயனாகவே ஞானம் நிகழும்.
எனவே இவ்வொரு பிறப்பிற் செய்த தவத்தால் மட்டுமே ஞானம் நிகழ்ந்து விடாது என்பது பெறப்படும்.
மேற்கோள் விளக்கம்
இம் மேற்கோளில் ஞானம் என்ற சொல் என்ன பொருளில் வந்துள்ளது என்பதை நோக்குதல் வேண்டும்.
சாதன ஞானமும் சாத்திய ஞானமும்:
சத்தி நிபாதத்தால் நிகழும் செயல்களே சரியை கிரியை யோகங்கள். அத்தவங்களின் முதிர்ச்சியினால் மல பரிபாகமும் இரு வினையொப்பும் முற்ற நிகழும். அதனால் ஆன்ம அறிவு மயக்கம் நீங்கி உள்ளவாறு விளங்கி, உணர்த்தியதை உணர்த்தியவாறே உணரும் தன்மையைப் பெறும். அவ்வுணர்தல் தன்மையையே இங்கு ஞானம் என்றார். இது சாதன ஞானம் எனப்படும். பின், அருட்குருவினால் அறிவுறுத்தப்படும் உண்மைகள் சாத்திய ஞானம் எனப்படும்.
எனவே ஆசிரியர் உணர்த்தியதனை உணர்த்தியவாறே உணரும் அறிவு ஆகிய சாதன ஞானம் முன்னைத் தவத்தினாலே உண்டாகும் என்பதும், அவ்வறிவினால் அடையப்படும் உண்மைகள் ஆகிய சாத்திய ஞானம் அருட்குருவினால் உண்டாகும் என்பதும் அறியற் பாலன.
ஞானமே நேர் சாதனம்:
இனி, தவமே நேராக வீடு பேற்றினை அளிக்கும். சரியை முதலியவற்றுள் எந்த ஒன்றின் வழியாகவும் வீடு பேற்றினை அடையலாம். ஞானத்தின் வழியாகத்தான் அதனை அடைய வேண்டும் என்பதில்லை என்று சிலர் கூறுவர். அவர் கூற்றை மறுத்து ஞானமே வீடுபேற்றிற்கு நேர் சாதனம். ஏனையவெல்லாம் ஞானத்திற்குச் சாதனங்களே என்பதை வலியுறுத்துதற்கு ஏதுக் கூறுகின்றார் ஆசிரியர்.
ஏது
மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி, நன்னெறியாகிய
ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடா ஆகலான்.
ஏதுவின் பொருள்
முற்பிறப்புக்களில் சரியை கிரியை யோகங்களை முறையே செய்து முடித்தால் அவை ஞானத்தைக் காட்டி அது வழியாக மோட்சத்தைக் கொடுக்குமேயன்றித் தாமே மோட்சத்தைக் கொடா.
ஏது விளக்கம்
தவ முதல்வர் சம்பந்தர்:
ஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு இப் பிறப்பில் ஞானம் நிகழ்ந்தமைக்குக் காரணம் அவரது முன்னைத் தவமே யாகும். அவருக்கு ஞானம் நிகழ்ந்தமையைக் கூறுமிடத்தில் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் என அவரது முன்னைத் தவநிலையை மறவாது குறிப்பிட்டார் சேக்கிழார்.
மேல் என்ற சொல்லின் பொருள்:
ஏதுவில் உள்ள மேல் என்பதற்கு முற்பிறப்புக்களில் என்பது பொருளாகும்.
இனி, மேல் என்பதற்கு மேலான எனப் பொருள் கொண்டு, மேலான சரியை முதலியவை எனவும் உரைக்கலாம். ஆசிரியர் பால் தீக்கை பெற்று, உலகப் பயன் யாதொன்றும் கருதாது இறைவனிடத்திற் கொண்ட அன்பு ஒன்றே காரணமாகச் செய்யும் சரியை முதலியனவே மேலானவை எனவும், அவையே ஞானத்தைப் பயக்கும் எனவும் அதற்கு விளக்கம் அளிக்கலாம்.
நன்னெறி:
ஆசிரியர் ஞானத்தை நன்னெறியாகிய ஞானம் எனச் சிறப்பித்துக் கூறினார். ஏனெனில், மற்ற நெறிகள் யாவும் ஞான நெறியில் வந்து கூட, ஞான நெறியே நேரே வீட்டினிற் கொண்டு போய்ச் சேர்க்கும். இதனைப் பின்வருமாறு கூறினால் விளங்கும். சைவ சமயத்தில் நின்றோர் முதலில் சமய தீர்க்கை பெற்று சரியைத் தொண்டினைச் செய்து, பின்னர் விசேட தீக்கை பெற்றுக் கிரியைகளைச் செய்து, பின்னர் யோகத்தில் நின்று, அதன் பின்னர் நிருவாண தீக்கை பெற்று ஞானத்தை உணர்ந்து அந்த ஞானத்தாலே சிவனை அடைவர். அதுபற்றியே ஞானம் நன்னெறி எனப்பட்டது.
மேலும், எல்லா நன்மைகளிலும் மேலான நன்மை வீடு பேறாகும். அதனைத் தருவது ஞானம் ஆதலின் நன்னெறி எனப்பட்டது. நன்னெறி சன்மார்க்கம் எனப்படும்.
சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய இந் நான்கும் முறையே தாத மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் எனச் சொல்லப்படும். தமிழில் முறையே தொண்டு நெறி, மகன்மை நெறி, தோழமை நெறி, நன்னெறி எனச் சொல்லப்படும்.
இனி, ஏதுவிற் கூறிய பொருளை விளக்குதற்கு எடுத்துக்காட்டுச் செய்யுட்களைக் கூறுகின்றார்.
எடுத்துக்காட்டு - 1
வெண்பா
45. தவம் செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து
பவம் செய்து பற்றறுப்பா ராகத்-தவம்செய்த
நற்சார்பில் வந்துஉதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றார்சூழ் சொல்லுமாம் கண்டு.
இதன் பொருள்:
சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைச் செய்தவர் தவ உலகங்களுக்குச் சென்று, அச்சரியை முதலியவற்றின் பயனாகிய தவ உலகப் பதவிகளை அடைந்து இன்பங்களை நுகர்வர்.
தவ உலகை அடைந்தவர்க்கும் உலகப் பற்று அறுதல் இல்லை. அதனால், தவத்தின் பயனை நுகர்ந்து கழிந்த பின்பு இவ்வுலகத்தில் மீண்டும் வந்து பிறப்பர். உலக இன்பங்களில் உள்ள பற்றினை அறுத்துக் கொள்ளுதற்கு ஏற்ற நல்ல பிறப்பும், சரியை, கிரியா யோகங்களைச் செய்தற்கு ஏற்ற நல்ல சூழலும் அவர்க்கு வாய்க்கும். அத்தகைய நற்சார்பில் வந்து பிறந்து, உலகப் பயன்களில் பற்றின்றி அத்தவங்களை முற்றச் செய்வர்; அதனால் உலகப் பற்றை அறுத்து ஞானத்தைப் பெறுவர்.
இவ்வாறு மெய்ந்நூல்களைக் கற்ற பெரியோர் ஆராய்ந்து சொல்லுவர்.
பதவுரை
தவம் செய்தார் - சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைச் செய்தவர்
என்றும் தவலோகம் சார்ந்து - எக்காலத்திலும் தவறாது அவற்றின் பயனாகிய தவவுலகங்களுக்குச் சென்று, அவ்வுலகப் பதவிகளை அடைந்து அங்குள்ள இன்பங்களை நுகர்ந்து (பின்னர்)
பற்று - உலக இன்பங்களில் உளதாகிய பற்றினை
பவம் செய்து அறுப்பாராக - ஒரு நல்ல பிறப்பை எடுத்து அறுத்துக் கொள்ளுதற் பொருட்டு
தவம் செய்த நற்சார்பில் - வழிவழியாகச் சரியை முதலியவற்றைச் செய்து வரும் நல்ல குடியில்
வந்து உதித்து - வந்து பிறந்து
ஞானத்தை நண்ணுதலை - முன்பிறப்பிலே செய்த சரியை முதலியவற்றின் பழக்கத்தால் இப்பிறப்பிலும் அவற்றை முற்றச் செய்து, அதனால் உலகப் பற்றை அறுத்து ஞானத்தைப் பெறுவர். அங்ஙனம் அவர் ஞானம் பெறும் முறையை
கற்றார் - மெய்ந்நூல்களைக் கற்றவரது
சூழ் - ஆராய்ச்சி
கண்டு சொல்லும் - உணர்ந்து தெரிவிக்கும்.
விளக்கம்
பதமுத்தி:
சரியை கிரியை யோகம் ஆகிய தவங்களைச் செய்தோர் இடை நிலைப்பயனாக அடைவது பதமுத்தியாகும். பதம் என்றசொல் பதவி எனப் பொருள்படும். பதமுத்திக்குரிய தவ உலகங்கள் உள்ளன. அவ்வுலகங்களிற் சென்று சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகியவற்றைப் பெறுவர்.
சாலோகம்:
அவ்வுலகங்களில் எங்கும் தடையின்றி இயங்கும் உரிமையைப் பெறுதல். ஒரு மனையில் பணிபுரியும் பணியாளர் அம்மனையினுள் எங்கு வேண்டினும் செல்லும் உரிமையைப் பெற்றிருத்தல் போன்றது இது. இதுபற்றியே இப்பயனைத் தரும் சரியை, தொண்டு நெறி (தாதமார்க்கம்) என்று கூறப்படுகிறது.
சாமீபம்:
அவ்வுலகங்களில் மேற்கூறிய பணியாளர் போல அகல நில்லாது, மைந்தர் போல அங்குள்ள புவன பதிகளாகிய தலைவர்களோடு அருகில் இருக்கும் உரிமையைப் பெறுதல். இதுபற்றியே இப்பயனைத் தரும் கிரியை மகன்மை நெறி (சற்புத்திரமார்க்கம்) என்று கூறப்படுகிறது.
சாரூபம்:
அவ்வுலகங்களில் தோழர் போல அப்புவன பதிகளோடு ஒத்த உருவம், பெயர் முதலியன பெற்று அளவளாவியிருக்கும் உரிமையை உடையவராதல். இது பற்றியே இப்பயனைத் தரும் யோகம் தோழமை நெறி (சகமார்க்கம்) என்று கூறப்படுகிறது.
உண்மைப் பயன் ஞானம்:
பதமுத்தியை அடைந்தோர் மீண்டும் நிலவுலகிற் பிறந்து, ஞானம் பெறுதற்கு வாய்ப்பான நல்ல சூழலைப் பெற்று தவத்தை முற்றச் செய்து, குருவின் அருளால் ஞானத்தை அடைந்து, வீட்டினை எய்துவர்.
தவ உலகத்தில் உள்ளபொழுதே ஒருவர்க்கு உலகப் பற்று அறுமானால் அவர் நிலவுலகத்தில் வந்து பிறக்க வேண்டுவதில்லை. அப்பொழுதே அவர் ஞானத்தை எய்தி அங்கிருந்தே வீடு அடைவர்.
சரியை முதலியவற்றை இடைநிலைப் பயன் பதமுத்தியாயினும், உண்மைப் பயன் ஞானமேயாகும்.
எடுத்துக்காட்டு- 2
வேதத்தில் விதிக்கப்பட்ட வேள்வி முதலிய செயல்களைப் பயன் கருதாமல் செய்தால் அச்செயல்களே ஞானத்தைக் கொடுக்கும் என்பர். அதனை மறுத்துச் சரியை முதலிய தவமே ஞானத்தைக் கொடுக்கும் என்பதை வலியுறுத்துதற்கு இரண்டாவது எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.
வெண்பா
46. பசித்து உண்டு பின்னும் பசிப்பானை யொக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்- இசைத்த
இரு வினை யொப்பில் இறப்பில் தவத்தான்
மருவுவனாம் ஞானத்தை வந்து.
இதன் பொருள்:
வேதத்தில் விதிக்கப்பட்ட நல்வினைகளைச் செய்வதால் விளையும் இன்பம் நிலையில்லாதது; பசித்தவன் உணவை உட்கொண்டு அதனால் எய்தும் இன்பம் போன்றதாகும். உணவு உண்டதால் வரும் இன்பம் சிறிது பொழுதே நிற்கும். பின்னர்ப் பழையபடி பசித்துன்பம் உண்டாகும். உணவு கொள்பவனுக்கு அவ்வப்பொழுது வரும் நிலையில்லாத இன்பம் போன்றதே வேள்வி முதலிய வற்றால் வரும் இன்பமும்.
சரியை முதலிய தவங்கள் தவவுலகைச் சென்றடைந்து நுகரும் இன்பமாகிய இடைநிலைப் பயனைத் தருதலோடு, ஞானமாகிய முதன்மைப் பயனை விளைவிக்கும்.
சரியை முதலிய தவங்களைச் செய்து வருவதனால் இருவினை யொப்பு என்னும் பக்குவநிலை வாய்க்கும். அதனைப் பெற்றவன் ஞானசிரியரைத் தேடியடைந்து அவரிடம் ஞானத்தைப் பெறுவான்.
பதவுரை
இசைத்து வருவினையின் இன்பம் - வேதத்தால் சொல்லப்பட்டு வருகின்ற வேள்வி முதலிய கருமங்களினால் அடையும் இன்பங்கள் எல்லாம்
பசித்து உண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும் - ஒருமுறை பசியுற்று அது நீங்குதற்கு உணவு உட்கொண்டவன் அப்பொழுது அடையும் இன்பத்தைப் போல நிலையில்லாது ஒழியும் இன்பங்களேயாகும்.
இசைத்த இருவினை - அறநூல்களில் சொல்லப்பட்ட நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும்
இறப்பு இல் தவத்தால் - அழிதல் இல்லாத சரியை முதலிய சிவ புண்ணியங்களால்
ஒப்பில் - தம்முள் சமமாகுமானால்
(அஃதாவது, நல்வினையும் தீவினையும் ஆகிய இரண்டும் பொன் விலங்கும் இரும்பு விலங்கும் போல ஞானம் நிகழ வொட்டாமல் தடை செய்வன என்று உணர்ந்து நல்வினையின் பயனிலே விருப்பும், தீவினையின் பயனிலே வெறுப்பும் கொள்ளாது இரண்டையும் சமமாகக் கொண்டு பற்றற்றிருக்கும் நிலை ஒருவனுக்கு வாய்க்குமாயின்)
வந்து ஞானத்தை மருவுவன் - அவன் ஞானாசிரியரைத் தேடி அடைந்து, அவர்பால் ஞானத்தைப் பெறுவான்.
விளக்கம்
வேள்வி முதலிய வினைகளால் ஞானம் உண்டாகாமை:
வேள்வி முதலிய நல்வினைகள் அவரவர் விரும்பிய காமியப் பயனையே தரும். அவற்றால் ஞானம் உண்டாகாது. மேலும் அவை அக்காமியப் பயன்களிலே மேலும் மேலும் விருப்பத்தை வளர்த்து ஞானத்தின் மேல் நாட்டம் ஏற்படாதவாறு செய்யும். அவ்வகையில் ஞானத்திற்குத் தடையாகவும் அமையும். அத்தகைய காமியமாகிய நல்வினைகள் நீங்கியபோதே ஞானம் நிகழும்.
தவத்தால் இருவினையொப்பும் ஞானமும் நிகழ்தல்:
சரியை முதலிய தவங்களை முறையாகச் செய்து வருவதால் காமியமாகிய நல்வினைகளில் விருப்பம் நீங்கி விடும். நல்வினையின் பயனை விரும்புதலும், தீவினையின் பயனை வெறுத்தலும் இன்றி இரண்டையும் சமமாக உணரும் மனநிலை உண்டாகும். அதுவே இருவினையொப்பு ஆகும். அங்ஙனம் சமமாகப் பெற்றவன் ஞானத்தில் வேட்கை தோன்றி அதனை அடைவான்.
இறப்பில் தவம்:
வேள்வி முதலிய நல்வினைகளால் வரும் இன்பம் பசித்தவனுக்கு உணவால் வரும் இன்பம் போன்று அழியும் தன்மையது. அவ்வினைகள் எல்லாம் தத்தம் பயன் அழியுங்காலத்தில் தாமும் அழிவன. ஆதலால் அழியுந் தன்மையுடைய அவ்வினைகள் நிலை பெற்று நிற்கின்ற ஞானத்தைத் தரமாட்டா என்பது கருத்து.
இனி, சரியை கிரியா யோகங்களாகிய தவங்கள் தேவருலக அமிழ்தம் போன்றனவாகும். அவ்வமிழ்த உணவு தன்னை உண்டார்க்குப் பசி நீங்குதலாகிய இடைநிலைப் பயனைத் தருதலோடு நரை திரை மூப்புப் பிணியின்றி நெடிது வாழ்தலாகிய முதன்மையான பயனைத் தரும். அதுபோலச் சரியை முதலிய தவங்கள் சாலோகம் மதலிய பதமுத்திகள் ஆகிய இடைநிலைப் பயனைத் தருதலோடு அழிந்து போகாமல், அழிவற்ற ஞானமாகிய முதன்மைப் பயனைத் தந்து நிலைபேறுடைய பேரின்ப வீட்டிற் செலுத்துவனவாகும். அதுபற்றியே அத்தவங்களை இறப்பில் தவம் என்றார் ஆசிரியர்.
இரண்டாம் கூறு
ஞானம் தானாக வருவதில்லை:
தவ முதிர்ச்சியினால் ஞானத்தைப் பெறுதற்கு உரிய பக்குவம்- உணர்த்தியதை உணர்த்தியவாறே கொள்ளும் உணர்தல் திறன் உண்டாகும் எனப் பார்த்தோம்.
எனவே தவத்தினால் ஞானத்தை உணரத்தக்க நிலை வாய்க்குமேயன்றி ஞானமே தானாக வந்து வாய்த்துவிட்டது. இதற்கு ஓர் உவமை சொல்லலாம். பாலுண் குழவியாக இருக்கின்ற பருவம் கல்வி கற்றற்கு உரிய பருவம் ஆகாது. அப்பருவத்தைக் கடந்து ஐந்தாண்டுகளேனும் நிரம்பியபோதே அக் குழந்தை கல்வி கற்பதற்குரிய தகுதியைப் பெறுகிறது. அவ்வயதிலும் கற்கும் தகுதி வாய்க்கின்றதேயன்றிக் கல்வியே தானாக வந்து வாய்த்து விடுவதில்லை. ஆசிரியர் ஒருவர் கற்பிக்கவே அக்கல்வி குழந்தைக்குக் கிடைக்கும். அதுபோலத் தவத்தினால் ஞானத்தைப் பெறுதற்குரிய செவ்வி வாய்க்க, அப்பருவத்தில் ஞானாசிரியர் வந்து உணர்த்தவே ஞானம் ஒருவர்க்குக் கிடைப்பதாகும்.
ஞானாசிரியரின் இன்றியமையாமை:
பக்குவம் வந்த காலத்தில் மாணாக்கர் தாமே ஞானநூல்களைப் பயின்று ஞானத்தை எய்துதல் கூடாதோ? ஞானாசிரியர் எதற்கு? என வினவலாம்.
ஆசிரியரையின்றிக் கற்கப் புகுந்தால் பொருள் மயக்கமும், குழப்பமும், திரிபுணர்ச்சியுமே உண்டாகும். ஆசிரியர் துணையின்றித் தாமே அறிதல் என்பது உலகியல் கல்விக்குக் கூடப் பொருந்தி வராத ஒன்றாகும். இசை, ஓவியம், சிற்பம், இலக்கியம், இலக்கணம், கணிதம், வணிகம் மதலிய துறைகளைத் தாமாக ஒருவர் அறிந்து கொள்ளுதல் இயலாது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அவ்வத்துறையில் வல்லவர் ஆகிய ஆசிரியரின் வழிநின்றே அதனை அறியவேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு இருக்க, அக்கல்வியினும் மிக அரியதாகிய ஞானத்தை ஒருவர் தாமே உணர்தல் எவ்வாறு இயலும்? எனவே, ஞானம் ஞானாசிரியரையின்றி அமையாது என்பது தெளிவாகும்.
ஞானத்தை உணர்த்த வல்லவன் சிவன் ஒருவனே: இனி, ஞானாசிரியர் ஆவார் யார்? கல்வி கேள்விகளில் மேம்பட்டு நம்மிற் சிறந்தவராய் விளங்கும் ஆசிரியரை ஞானாசிரியர் எனக் கொள்ளலாமா? எனில், சைவ சித்தாந்தம் அவ்வாறு கொள்ளுவதில்லை. உயிர் ஞானத்தை உணர்தல் பக்குவம் வந்த பின்னேயன்றி எக்காலத்திலும் அன்று. ஆகவே பக்குவம் வருவதற்கு முன் உணர்த்துதல் கூடாது. அது பாலுண் குழவிக்குக் கல்வி புகட்ட முற்படுதல் போலப் பயனற்றது. இனிப் பக்குவம் வந்த பின்னே உணர்த்தாது இருத்தலும் கூடாது. உயிர் அறியாமை தேய்ந்து ஞானத்தை உணரும் பக்குவ நிலையை எய்தியுள்ளது என்பதை அறிந்தவாறே அதனை உணர்த்துதல் கூடும். அவ்வாறு அறிய வல்லார் யார்?
ஒரு வீட்டில் உள்ள ஒருவர்க்கு உற்ற நோயினது நிலையை அவ்வீட்டினுள் உறைபவர் அறிவாரேயன்றி அதனை வெளியில் உள்ள பிறர் அறிவாரோ? அறியார். அதுபோல, உயிரின் அகத்துப் பொருந்தி நிற்கும் அறியாமை நிலையையும், அது தேய்ந்த நிலையையும் வெளியில் உள்ள மக்களாகிய பிறர் அறிதல் இயலாமையின் அவரெல்லாம் ஞானத்தை உணர்த்துதற்கு உரியவர் ஆகார். உயிருக்கு உயிராய் அதனுள் நிற்கின்ற முதல்வன் ஒருவனே அதனை அறிவான். எனவே, அறியாமை தேய்ந்த நிலையை உணர்ந்து வந்து ஞானத்தை உணர்த்துபவன் உயிர்க்குயிராய் நிற்கும் முதல்வனாகிய சிவனே என்று சைவசித்தாந்தம் வலியுறுத்துகிறது. இக்கருத்தையே இவ் இரண்டாம் கூறில் மேற்கோளாக அமைக்கின்றார் ஆசிரியர்.
மேற்கோள்
இனி, இவ்வான்மாக்களுக்குத் தமது முதல் தானே
குருவுமாய் உணர்த்தும் என்றது.
மேற்கோளின் பொருள்: சரியை கிரியா யோகங்களாகிய தவத்தைச் செய்து முடித்து அத்தவ முதிர்ச்சியினால் இருவினையொப்பு, மலபரிபாகம், சத்தி நிபாதம் என்பன நிகழப் பெற்று, ஞானத்தைப் பெறுதலில் வேட்கையுற்ற உயிருக்கு, இது காறும் உள்நின்று பக்குவப்படுத்தி வந்த முதல்வனே இதுபொழுது அதன் பக்குவ நிலையை அறிந்து குருவாய் எழுந்தருளி வந்து உண்மை ஞானத்தை உணர்த்துவான்.
மேற்கோள் விளக்கம் : முதல்வனே ஞானத்தை உணர்த்துவான் என்றால், அவன் தன் உண்மை வடிவில் தோன்றி நேர் நின்று உணர்த்துவான் என்பது கருத்தன்று. அவன் தன் உண்மை வடிவில் தோன்றினால் மக்கட் பிறப்பினராகிய மாணவர் அதனைக் காணவும் அணுகவும் அஞ்சுவர். அது கருதியே அவன் குரு வடிவில் நின்று உணர்த்துவான்.
ஆவேசித்து நிற்றல்: குரு என்பவர் மல மாசு தீர்ந்த தூய அறிவாகிய சுத்தான்மா ஆவார். அவர் நான் என்னும் தற்போதம் சிறிதும் இல்லாதவர்; என் செயலென எதுவும் இல்லை. எல்லாம் அவன் செயலே எனத் தெளிந்து தன்னையிழந்து நிற்பவர். அத்தகைய சுத்தான்மாவிடத்தில் முதல்வன் தயிரில் நெய்போல் விளங்கி நின்று, அவரைத் தன்னுள் அடக்கித் தானேயாய் மேம்பட்டு நிற்பான். இந்நிலையை ஓர் உவமை வாயிலாக விளக்கலாம். உலையில் இட்ட இரும்பை உலைத் தீ பற்றித் தன் வசப்படுத்துகிறது. இரும்பும் தன்னையிழந்து அத்தீயின் தன்மையைப் பெற்று நிற்கிறது. இரும்பினிடத்தில் தீயே விளங்கி நின்று அவ்விரும்பைத் தன்னுள் அடக்கித் தானேயாய் மேம்பட்டு நிற்கிறது. இரும்பில் விளங்கி நிற்கின்ற தீயே போலச் சுத்தான்மாவிடத்தில் சிவனே விளங்கி நிற்கின்றான். அவ்விரும்பு தன் தன்மையிழந்து, தீயினுள் அடங்கித் தீயே உள்ளது என்று சொல்லும்படி நிற்பதைப் போல, அச் சுத்தான்மாவும் தன் தன்மை என்பதின்றிச் சிவத்தினுள் அடங்கிச் சிவமே உள்ளது என்று சொல்லும்படியாகச் சிவமேயாய் நிற்கின்றார். இவ்வாறு சுத்தான்மாவைத் தன்னுள் அடக்கிச் சிவன் தானேயாய் விளங்கி நிற்றலை ஆவேசித்தல் என்று கூறுவர்.
ஞானத்தை உணர்த்துதல் சிவன் செயலேயாதல் : பேய் பிடித்த ஒருவரது செயலெல்லாம் அவர் செயல் ஆகாது பேயின் செயலே யாதல் போல, சுத்தான்மாவாகிய குருவினிடத்தில் சிவன் ஆவேசித்து நின்று ஞானத்தை உணர்த்துதலாகிய செயலும் அவர் செயல் ஆகாது சிவன் செயலே ஆகின்றது. இதனால், குரு வடிவில் நின்று ஞானத்தை உணர்த்துபவன் சிவனே யாதல் விளங்கும்.
ஓர் ஐயம் : இதுபற்றி ஓர் ஐயம் எழுதல் கூடும். முதல்வன் தோன்றி அழிதல் இல்லாத அருளையே சரீரமாக உடையவன். குருவானவர் நம்மைப் போலவே அழியுந் தன்மையுடைய மாயா காரியமாகிய சரீரத்தைப் பொருந்தியவர். அவ்வாறிருக்க, அக்குருவினது வடிவத்தை முதல்வன் தனதாகக் கொள்வான் என்றல் எவ்வாறு பொருந்தும் என்பதே அவ் ஐயம். அதனைப் பின்வரும் ஏதுவினால் நீக்குகின்றார்.
ஏது: அவன் அந்நியம் இன்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்
ஏதுவின் பொருள்
சைதன்னியம் - அறிவு; இங்கு குருவாகிய சுத்தான்மாவைக் குறித்து நின்றது. உயிரானது உடலிற் பொருந்தி உடல் வேறு தான் வேறாய் நில்லாமல், அவ்வுடலே தானாய்க் கலந்து நின்று, அவ்வுடலைத் தன் வடிவமாகக் கொண்டிருத்தல் போல முதல்வன் குருவாகிய சுத்தான்மாவிடத்தில் தான் வேறாய் நில்லாமல் அதுவே தானாய் ஒற்றித்து நின்று, அவ்வான்மாவைத் தன் வடிவமாக- திருமேனியாகக் கொண்டு ஞானத்தை உணர்த்துவான். அது பற்றியே தமது முதல் தானே குருவுமாய் உணர்த்தும் என மேற்கோள் கொண்டது என்பதாம்.
ஏது விளக்கம்
ஐயத்தைப் போக்குதல் :
சுத்தான்மா சிவனுக்குத் திருமேனியாய் அமையும் பொழுது அது சிவமாம் தன்மையைப் பெற்று நிற்கிறது. அதற்கேற்ப, அவ்வான்மாவினது உடம்பும் அருள் மயமாகி விடும். கரணங்களும் பசு கரணமாய் நில்லாது சிவகரணமாய் நிற்கும். அவ்வாறு அருள் மயமான உடம்பை முதல்வன் தனதாகக் கொள்வான். ஆதலால் சரீரம் என்று நோக்கினாலும், குருவினது வடிவத்தை முதல்வன் தன வடிவமாகக் கொள்ளுதல் பொருந்துவதாகிறது. இதனால் மேற்கூறிய ஐயம் நீங்குதல் காணலாம்.
ஞானகுரு நம்மின் வேறானவர் : மேற்கூறியவற்றால், ஞான குரு தோற்றத்தால் நம்மவர் போல இருப்பினும் உண்மையில் அவர் நம்மின் வேறானவர் என்பது விளங்கும். இதற்கு ஓர் உவமை சொல்லலாம். வேடர், காட்டில் உள்ள விலங்குகளைக் கையகப்படுத்துவதற்காக அவ்வவ் இனத்து விலங்கினைப் பழக்கி வைத்திருப்பர். அது பார்வை விலங்கு என்பபடும். அவ்விலங்கினைக் கொண்டு பிற விலங்குகளை அழைக்கச் செய்து அவற்றைக் கைப்பற்றுவர். மானைக் காட்டி மானைப் பிடித்தல் என்பது இதுவேயாகும். மான் என்பதற்கு விலங்கு என்பது பொருள். பார்வை விலங்கு போன்றது முதல்வன் தன்னை மறைத்துக் கொண்டு நிற்கும் குரு வடிவம். பார்வை விலங்கு ஏனைய விலங்குகள் அச்சமின்றி அணுகுதற்கு வழியாய் உள்ளது. அதுபோலக் குருவடிவம் பக்குவ ஆன்மாக்கள் அச்சமின்றி அணுகி ஆட்படுவதற்கு வாயிலாய் உள்ளது.
பார்வை விலங்கு தோற்றத்தால் ஏனைய விலங்குகள் போல நிற்பினும் உண்மையில் அவற்றினின்றும் வேறானது போல, ஞான குருவும் தோற்றத்தால் நம்மில் ஒருவர் போல இருப்பினும் உண்மையில் அவர் நம்மினும் வேறானவரே யாவார். இனி, மேற்கோளை விளக்குதற்கு ஆசிரியர் செய்துள்ள எடுத்துக்காட்டுச் செய்யுட்களை நோக்குவோம்.
எடுத்துக்காட்டு - 1
மூவகை உயிர்கள் :
உயிர்கள் எண்ணற்றவை யாயினும் பாசப் பிணிப்புப் பற்றி அவற்றை மூவகைப் படுத்திக் கூறுவர். அவை விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்பன.
மும்மலங்களுள் ஆணவமலம் ஒன்றை மட்டும் உடைய உயிர்கள் விஞ்ஞான கலர். ஆணவத்தோடு கன்மத்தையும் உடைய உயிர்கள் பிரளயா கலர். ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களையும் உடைய உயிர்கள் சகலர். விஞ்ஞானகலர், பிரளயா கலர் என்ற பெயர்களில் உள்ள அகலர் என்பதற்குக் கலை இல்லாதவர் என்பது பொருள். சகலர் என்பதற்குக் கலையோடு கூடியவர் என்பது பொருள். கலை என்பது மாயையைக் குறிக்கும். மயக்கும் தன்மையையுடைய மாயையோடு கூடியவர் சகலர் எனப்பட்டனர். அத்தகைய மாயையோடு கூடியவர் சகலர் எனப்பட்டனர். அத்தகைய மாயையோடு கூடாமையால் மயக்கம் இல்லாதவர் என்ற பொருளில் ஏனைய இருவகையினரும் அகலர் எனப்பட்டனர். சகலர் ஆகிய நாம் வாழும் உலகம் இதுவாக, பிரளயாகலர் வாழும் உலகங்களும், விஞ்ஞான கலர் வாழும் உலகங்களும் வேறு வேறாய் உள்ளன. இம்மூவகை உயிர்களுக்கும் முதல்வன் ஞானத்தை உணர்த்தும் முறையை முதல் எடுத்துக்காட்டில் கூறுகின்றார் ஆசிரியர்.
வெண்பா
47. மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு;
அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய் - மெய்ஞ்ஞானம்
பின் உணர்த்தும்; அன்றிப் பிரளயா கலருக்கு
முன் உணர்த்தும் தான் குருவாய் முன்.
இதன் பொருள்:
விஞ்ஞானகலர்க்கு முதல்வன் உயிர்க்குயிராய் உள்நின்று ஞானத்தை உணர்த்துவான். இவ்வாறு உணர்த்துதல், தன்மையில் நின்று உணர்த்துதல் எனப்படும்.
பிரளயா கலருக்கு முதல்வன் நான்கு தோள்களும், முக்கண்ணும், கறைமிடறும் முதலியவற்றை உடைய தனது இயற்கை வடிவோடு- முத்தொழிலை நடத்துவதற்குக் கொள்ளும் இந்த உருவோடு முன்னே நின்று குருவாய் உபதேசம் செய்து உண்மை ஞானத்தை உணர்த்துவான். இவ்வாறு உணர்த்துதல் முன்னிலையில் நின்று உணர்த்துதல் எனப்படும்.
சகலருக்கு முதல்வன் குருமூர்த்தி வடிவாய் மானுட வடிவிலே மறைந்து நின்று உண்மை ஞானத்தை உணர்த்துவான். இவ்வாறு உணர்த்துதல் படர்க்கையில் நின்று உணர்த்துதல் எனப்படும்.
பதவுரை
விஞ்ஞான கலர்க்கு - ஆணவமலம் ஒன்றையே உடைய விஞ்ஞானகலர்க்கு
மெய்ஞ்ஞானம் - உண்மை ஞானம்
தானே விளையும் - இறைவன் உயிர்க்குயிராய் உள் நின்று உணர்த்தும் முறையினால் உண்டாகும்.
பிரளயாகலருக்கு - ஆணவம், கன்மம் ஆகிய இருமலங்களை உடைய பிரளயாகலருக்கு
அன்றி - அவ்வாறன்றி
தான் குருவாய்- இறைவன் நாற்றோளும், முக்கண்ணும் கறைமிடறும் முதலியவற்றை உடைய தனது இயற்கை வடிவோடு குருவாய்த் தோன்றி
முன் உணர்த்தும் - முன்னே நின்று உண்மை ஞானத்தை உணர்த்துவான்.
அஞ்ஞான அச்ச கலர்க்கு - ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை உடையராய், முக்குணங்களால் மயங்குகின்றவராய் உள்ள சகலர்க்கு
அக்குருவாய் - இறைவன் மானுட வடிவில் உள்ள குருவிடத்தே அவனே தானாய் மேம்பட்டு விளங்கி அக் குரு வடிவில்
மெய்ஞ்ஞானம் பின் உணர்த்தும் - பின்னாக நின்று உண்மை ஞானத்தை உணர்த்துவான்.
விளக்கம்:
ஞானத்தை உணர்த்தும் முறை மூன்றாதல் :
விஞ்ஞானகலர் முதலிய மூவருக்கும் முறையே தன்மை, முன்னிலை, படர்க்கையில் நின்று இறவைன் ஞானத்தை உணர்த்துவான் என வரையறுத்துக் கூறினாராயிற்று.
எனவே எல்லாவுயிர்களுக்கும் இறைவன் ஞானத்தை உணர்த்தும் முறை இவ்வாறு மூன்றாகும் என்பது விளங்கும்.
மேலும், இறைவன் உணர்த்தாது எவருக்கும் ஞானம் நிகழாது என்பதும் பெறப்படும்.
தானே விளையும் என்பதன் பொருள் :
முதலடியில், விஞ்ஞானகலர்க்கு இறைவன் உணர்த்தாமலே ஞானம் தானே விளையும் என்பது போலக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பொருள் கூறினால் அது சித்தாந்தத்திற்கு மாறாகும். எனவே, தானே விளையும் என்பதற்கு எளிதில் விளையும் என்று பொருள் காணுதலே தக்கது.
இனி முதல்வன் எல்லாவுயிர்க்கும் ஒரு வகையிலே ஞானத்தை உணர்த்தாமல் மேற்கூறியவாறு வேறு வேறு வகையில் உணர்த்துதற்குக் காரணம் என்னை? என்னும் வினாவுக்கு விடையாக இரண்டாம் எடுத்துக் காட்டினைக் கூறுகின்றார்.
எடுத்துக்காட்டு - 2
உயிர்கள் அறியும் தன்மை :
உயிர்கள் பிறர் அறிவித்தாலன்றித் தாமாக அறிய மாட்டா; அறிவிப்பவர் முதலிலேயே முற்றவும் அறிவித்தாலும் அவற்றை ஒருங்கே அறியமாட்டா; அவற்றை ஒவ்வொன்றாகச் சிறிது சிறிதாகப் பற்றியே அறியக் கூடியனவாகும். ஒரு பொருளை அறியும்பொழுது அந்த ஒன்றில் அழுந்தி விடுவதால் அப்பொழுது மற்றொன்றை அறிய மாட்டாவாகும்.
அறிவு நிலையில் உள்ள வேறுபாடு :
அறிவிக்க அறிதலும், ஒன்றொன்றாகவே சிறிது சிறிதாகவே அறிதலும், அழுந்தி நின்று அறிதலும் ஆகிய இத்தன்மைகளெல்லாம் உயிர்களுக்கு ஒரே வகையாக அமையாமல் உயிர்தோறும் வேறு வேறாக அமைந்திருக்கின்றன.
காட்டாக, வகுப்பறையில் ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே வகையாகத் தான் உணர்த்துகிறார். ஆயினும் அம்மாணவர்கள் ஆசிரியர் உணர்த்தியவற்றை ஒரே வகையாக உணர்ந்து கொள்வதில்லை. சிறிய அளவிலும், அதனினும் சிறிய அளவிலும், பெரிய அளவிலும், அதனினும் பெரிய அளவிலும் இன்னும் பல்வேறு வகையிலும் முன் பின்னாக அவற்றை உணர்ந்து நிற்கிறார்கள். இவ்வாறு உயிர்களின் அறிவு நிலையில் உயர்வு தாழ்வுகள் அமைந்துள்ளன.
மலப் பிணிப்பில் உள்ள வேறுபாடு :
அறிவு நிலையில் உள்ள இவ்வேறுபாடுகளுக்கு ஏற்ப ஆணவமலத்தின் பிணிப்பும் உயிர்தோறும் வேறு வேறு வகையாகவே இருக்கும். அப்பிணிப்பு தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்னும் மூன்று வகையில் அமையும்.
அப்பிணிப்பு வகை பற்றியே உயிர்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர், என மூவகைப்படுகின்றன. ஆணவமலம் தூலமாய், வன்னமயாய்ப் பற்றியுள்ள உயிர்கள் சகலர். ஆணவ மலம் சூக்குமமாய், மென்மையாய்ப் பற்றியுள்ள உயிர்கள் பிரளயாகலர். ஆணவமலம் அதி சூக்குமமாய், மிகவும் மென்மையாய்ப் பற்றியுள்ள உயிர்கள் விஞ்ஞான கலர்.
ஞானத்தை மூன்று வகையில் உணர்த்துதல் :
இவ்வாறு ஆணவ மலம் எல்லாவுயிர்களையும் ஒரு வகையாகவே மறைக்காமல் மேற்கூறியவாறு தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்னும் மூவகையில் மறைத்து நிற்றலால், அதற்கேற்ப இறைவன் உயிர்களுக்கு ஞானத்தை ஒரு வகையில் நின்று உணர்த்தாமல் மூன்று வகையில் நின்று உணர்த்துகிறான்.
சகலர்க்கு இறைவன் குருவாகி எழுந்தருளி வந்து உபதேச மொழியாலும் நூல்கள் வாயிலாகவும் உண்மைகளை உணர்த்தி அவற்றைக் கேட்டும் பல காலும் சிந்தித்தும் படிப்படியே தெளிவுடையுமாறு செய்வித்தாலேயே, அவர்களுக்குத் தூல நிலையை உடைய ஆணவ மலம் நீங்கி உண்மை ஞானம் விளங்கும்.
பிரளயாகலருக்கு இவ்வாறெல்லாம் மிகவும் உணர்த்த வேண்டுவதில்லை. இறைவன் ஒரு முறை தன் இயற்கை வடிவிலே தோன்றி உணர்த்திய அளவிலே, சூக்கும நிலையை உடைய ஆணவ மலம் நீங்கி அவர்க்கு உண்மை ஞானம் விளங்கும்.
விஞ்ஞான கலருக்கு இறைவன் வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்பதும் இல்லை. உயிருக்குயிராய் உள்நின்று உணர்த்தினாலே அதி சூக்கும நிலையை உடைய ஆணவ மலம் நீங்கி உண்மை ஞானம் விளங்கும்.
இக்கருத்தமைந்த எடுத்துக் காட்டுச் செய்யுளைக் காண்போம்.
வெண்பா
48. அறிவிக்க அன்றி அறியா உளங்கள்;
செறியுமாம் முன்பின் குறைகள்- நெறியின்
குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடுஎன்;
குறைவில் சகன் சூழ்கொள் பவர்க்கு.
இதன் பொருள் :
படிமுறையில் தம் தம் பக்குவ நிலைக்கு ஏற்ப அறிவிக்கவே அறியும் தன்மையுடையன உயிர்கள். எனவே எல்லாவுயிர்க்கும் ஒரு முறையிலே அறிவித்தால் அறிய வல்லன அல்ல என்பது விளங்கும்.
உயிர்களுள் பிரளயாகலரும், சகலரும் குறைவில்லாத குருமூர்த்தியின் உபதேசத்தைப் பெற்றே உண்மையை உணர்பவர் ஆவர். அவர்க்கு அவ்வுபதேசமாகிய இன்றியமையாப் பொருள் முறையே முன்னிலையிலும் பின் நிலையிலும் கிடைக்கும்.
இனி, அத்தகைய உபதேசத்தைக் கொள்ளாமலே ஞானம் பெறுதற்கு உரியவர் விஞ்ஞான கலர். அவ்வுயிர்களிடத்தில் இறைவனது இருப்பு மாத்திரத்தில் உண்மை ஞானம் நிகழும்.
பதவுரை
உளங்கள் - உயிர்கள்
நெறியின் - தத்தமக்கு உரிய படி முறையில்
அறிவிக்க அன்றி அறியா - அறிவிக்க அறியுமேயன்றி அனைத்துயிர்களுக்கும் ஒருமுறையிலே அறிவித்தால் அறிய மாட்டா. (ஆதலால்)
குறைவு இல் சகன் - குறைவில்லாத குருவினது
சூழ் - உபதேசத்தை
கொள்பவர்க்கு - இன்றியமையாது வேண்டி, நிற்போராகிய பிரளயாகலருக்கும் சகலருக்கும்
குறைகள் - உபதேச மொழிகளாகிய இன்றியமையாப் பொருள்
முன்பின் செறியும் - முறையே முன்னிலையிலும், பின் நிலையி<லும் கிடைக்கும்.
குறையுடைய சொல் கொள்ளார் - குருவினது உபதேசத்தை வேண்டாத விஞ்ஞான கலர்க்கு
கொள் பவத்தின் - இறைவன் அவரிடத்தில் கொண்டிருக்கின்ற இருப்பு மாத்திரத்தால்
வீடு - வீடுபேற்றைத் தரும் உண்மை ஞானம் (உண்டாகும்)
என் - என்று அறிவாயாக.
விளக்கம்
உளங்கள் நெறியின் அறிவிக்க அன்றி அறியா; குறைவில் சகன் சூழ் கொள்பவர்க்குக் குறைகள் முன்பின் செறியும்; குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடு என் என்ற முறையில் சொற்களை இயைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
குறை - இன்றியமையாத பொருள்; இங்கு, ஞானாசிரியரது உபதேச மொழியைக் குறித்தது.
சகன்-உலகில் தோன்றி நிற்கும் உருவுடைய கடவுள்;
குருமூர்த்தியை இவ்வாறு குறிப்பிட்டார்.
சூழ்-உபதேசம்; சூழ் கொள்பவர் சகலரும் பிரளயாகலரும் ஆவர். சொற் கொள்ளார் என்பவர் விஞ்ஞான கலர். பவம்-இருப்பு;
இறைவனது இருப்பு மாத்திரத்தில் ஞானம் நிகழும் என்பதற்குக் கருத்து, இறைவன் உயிர்க்குயிராய் உள்நின்று உணர்த்திய அளவிலே ஞானம் நிகழும் என்பதேயாம்.
தனக்கென்று யாதொரு வடிவமும் இல்லாதவனாகிய இறைவன் உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தி உய்விக்க வேண்டும் என்னும் பெருங்கருணையாலே குரு வடிவாய் வருவான் என்பதைக் கூறுவது அடுத்து வருவதாகிய மூன்றாவது எடுத்துக்காட்டு.
எடுத்துக்காட்டு - 3
வெண்பா
49. இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால்
நல்லாய், உளவாமால்; நீர் நிழல்போல் - இல்லா
அருவாகி நின்றானை யார் அறிவார் தானே
உருவாகித் தோன்றானேல் உற்று.
இதன் பொருள்
ஞானத்தால் நலம் பெற்ற மாணாக்கனே, ஒரு தாய் தன் குழந்தையினிடத்திற் கொண்ட அன்பு முலைப்பாலும் கண்ணீருமாய் வெளிப்படுதலைக் காணலாம். அருவமாகிய அன்பின் உருவமாய் அவை வெளிப்படுகின்றன. அதுபோல
நீரில் வாழும் மீன் முதலிய உயிரினங்களின் நிழல் புலப்படாமல் அந்நீரினுள் மறைந்தே யிருத்தல் போல ஆன்மாக்களிடத்தில் சிறிதும் புலப்படாமல் மறைந்தே நிற்கின்ற இறைவன் அவ்வான்மாக்களின் மேல் வைத்த கருணையினால் குரு வடிவாய்த் தோன்றுகின்றான். அவ்வாறு தோன்றானாயின் அவனை யார் அறிய வல்லார்? ஒருவரும் அறியார் என்பதாம்.
பதவுரை
நல்லாய் - நன்னெறியை அடைந்த மாணாக்கனே,
ஏந்திழைபால் - ஒரு பெண்ணினிடத்து
முலைப்பாலும் கண்ணீரும் - பாலும் கண்ணீரும் என்னும் இவையிரண்டும்
இல்லா உளவாம் - அவள் தன் மகவைக் காணுதற்கு முன்பு வெளிப்படாதனவாய், பின்பு கண்டபொழுது அவை வெளிப்பட்டுத் தோன்றுகின்றன. (அதுபோல)
நீர் நிழல் போல் - நீரினுள் இயங்கும் உயிர்களது நிழல் புலப்பட்டுத் தோன்றாதது போல
இல்லா அருவாகி நின்றானை - (உயிருக்குப் பக்குவம் வராதபொழுது உயிர்க் குயிராய் உள்ளே தோன்றாது நின்ற இறைவன் பக்குவம் வந்தபொழுது குருவாய் வெளிப்பட்டுத் தோன்றுவான்.) அவ்வாறு உயிர்களிடத்தில் தோன்றாது அருவமாய் நிற்கின்ற இறைவனை
தானே உருவாகி உற்றுத் தோன்றானேல் - அவனே குருவடிவில் வந்து தோன்றாவிடில்
யார் அறிவார் - யார் அறியவல்லார்? (ஒருவரும் அறிய மாட்டார்.)
இரண்டு உவமைகள் :
இச்செய்யுளில் இரண்டு உவமைகள் வந்துள்ளன. ஒன்று, தாய் தன் மகவின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாகிய பாலும் கண்ணீரும். மற்றொன்று நீரில் மறைந்துள்ள நிழல்.
முதல் உவமை :
ஒரு தாய் தன் மகவின்மீது கொண்டுள்ள அன்புக்கு ஈடு இணை சொல்ல முடியாது. அவ்வன்பு வெளிப்படாது அருவமாய் நிற்கின்றது. ஆகவே அவ்வன்பின் நிலையைப் பிறர் அறிதல் இயலாது. அவ்வன்பு பிறர் அறியுமாறு வெளிப்படுகின்ற காலம் உண்டு. அம்மகவு பசியால் வருந்தி அழும் காலத்தில் அத்தாய் பால் சுரந்து ஊட்டி அதன் பசியைத் தீர்க்கின்றாள்; அம்மகவு நோயுற்று நலிந்த காலத்தில் அவள் துன்பக் கண்ணீர் வடிக்கின்றாள்; அப்பாலும் கண்ணீரும் மகவின்மீது அவள் கொண்ட அன்பின் வெளிப்பாடே எனலாம். அவ்வன்பு முன்பு புலப்படாததாய் நின்று, பின்பு பால், கண்ணீர் என்னும் இவற்றின் வடிவில் வெளிப்படுவதாயிற்று. அதுபோல, இறைவன் உயிரின்கண் சிறிதும் புலப்படாமல் மறைந்திருந்து பின் குரு வடிவில் வெளிப்படுகின்றான்.
தாய் மகவின்மீது கொண்ட அருவமாகிய அன்பு, அருவாகிய இறைவனுக்கு உவமையாயிற்று. அன்பின் வடிவமாகிய பாலும், கண்ணீரும், இறைவன் பிறர் காணும்படி தோன்றுகின்ற குருமூர்த்தியாகிய வடிவத்திற்கு உவமைகள் ஆயின. பாலும் கண்ணீரும் வெளிப்படவில்லையென்றால் அவ்வன்பு நிலையினைப் பிறர் அறிதல் இயலாது. அதுபோலக் குருமூர்த்தியாய் வெளிப்படவில்லையென்றால் அருவாகிய இறைவனை யாரும் அறிதல் இயலாது என்பதாம்.
இரண்டாவது உவமை : இனி, இரண்டாவது உவமையை நோக்குவோம். நீரில் மீன் முதலிய உயிரினங்கள் வாழ்கின்றன. நமது உடம்பின் நிழல் போல அந்நீர் வாழ்வனவற்றிகும் நிழல் உண்டுதானே. நமது நிழல் வெளியே விளங்கித் தோன்றுகிறது. ஆயின் அவற்றின் நிழல் நீராகிய வெளியில் விளங்கித் தோன்றுவதில்லை. அது நீரினுள்ளே கலந்து விரவி நிற்றலால் புலப்படாததாயிற்று. அந்நீர் நிழல் போல இறைவன் உயிரினுள் விரவிக் கலந்து மறைந்து நிற்கின்றான். நீர் நிழல், இறைவன் புலப்படாமைக்கு மட்டும் உவமையாயிற்று. புலப்படுவதற்குப் பாலும் கண்ணீரும் ஆகிய உவமைகளைக் கூறினார்.
மூன்றாம் கூறு
இப்பகுதியில், ஐம்பொறி முதலிய கருவிகள் புலன் உணர்வைத் தருமேயன்றி மெய்யுணர்வாகிய ஞானத்தைத் தரமாட்டா என்பதையும், ஞான குரு வந்து உணர்த்த ஆன்மா அக்கருவிகளின் நீங்கி உண்மை ஞானத்தைப் பெற்றுப் பயனடையும் என்பதையும் உணர்த்துகிறார் ஆசிரியர்.
மேற்கோள்
இனி, இவ்வான்மாக்கள் ஐயுணர்வுகளான் மயங்கித் தம்மை உணரா- என்றது.
மேற்கோளின் பொருள்
உயிர்கள் ஐம்பொறிகளால் மயக்க அறிவை எய்தித் தமது உண்மையியல்பை உணரமாட்டா.
மேற்கோள் விளக்கம்
நமது அறிவு ஐம்பொறி முதலிய கருவிகளால் வருவது. அவற்றால் உண்டாகின்ற அறிவு நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவேயாகும். அவ்வறிவு மயக்க அறிவு என்பது வெளிப்படை.
ஐம்பொறிகளின் செயல் : ஐம்பொறிகள் நம் வசத்திலே நிற்பதில்லை. மாறான போக்கிலேயே நம்மை ஈர்த்துச் செல்லுகின்றன. திருக்கோயிலுக்குச் சென்றாலும் நமது கண்கள் இறைவனது திருக்கோலத்தில் ஈடுபடுவதில்லை; அங்கே உள்ள வேறு பல காட்சிகளைப் பார்க்கவே ஓடுகின்றன. திருமுறை இசையை நம் செவிகள் கேட்பதில்லை; அங்கே ஏதேனும் கூச்சல் எழுந்தால் அங்கென்ன ஓசை என்றறியச் சென்று விடுகின்றன. இவ்வாறு ஐம்பொறிகள் மாறி நின்று உயிரை மயக்குகின்றன. ஐம்பொறிகளும் உலகப் பொருள்களையே காட்டி அவற்றையே பற்றி நிற்கும் படி செய்கின்றன. அதனால் உயிர்கள் நிலையாத அப்பொருள்களையே நிலையுடையன என்று கருதி, அவற்றிலேயே இன்பம் உள்ளதாக எண்ணி மயங்கித் துன்பத்தைத் தேடிக் கொள்கின்றன.
உயிர்கள் தம்மை உணராமை : உயிர்கள் உள் முகமாக நோக்கினாலன்றோ தம்மியல்பை உணர்தல் கூடும். ஐம்பொறிகளும் உயிர்களைப் புறத்தே செலுத்திப் புறப்பொருள்களிலேயே அழுந்தி நிற்கும்படி - மயங்கி நிற்கும்படி செய்வதனால், அவ்வுயிர்கள் தம்மை உணரமாட்டாதனவாய் உள்ளன.
இனி, ஐம்பபொறிகளால் உயிர் தன்னை உணருமாறு இல்லை என்பதை உவமை முகத்தால் விளக்கி மேற்கோளை நிறுவுவதற்கு ஏதுக் கூறுகின்றார்.
ஏது
அவை தாம் பளிங்கில் இட்ட வன்னம் போல் காட்டிற்றைக் காட்டி நிற்றலான்
ஏது விளக்கம்
கருவிகளால் ஆன்ம சொரூபம் விளங்காமை : பளிங்குக் கல்லில் தீட்டப்பட்ட பல நிறங்கள் அப்பளிங்கின் உண்மையான ஒளியைத் தோன்ற விடாமல் அடக்கித் தமது இயல்பையே பளிங்கினிடத்தில் இடைவிடாமல் தோற்றுவித்து நிற்கின்றன. அதுபோல, ஆன்மாவைப் பொருந்தியுள்ள ஐம்பொறி முதலிய கருவிகள் ஆன்மாவின் உண்மையியல்பை, வியாபக அறிவைத் தோன்ற விடாமல் அடக்கித் தம் இயல்பாகிய ஐம்புல உணர்வையே தோன்றச் செய்கின்றன. ஆதலால் அக்கருவிகளால் ஆன்ம சொரூபம் விளங்குமாறு இல்லை. அதுபற்றியே, இவ்வான்மாக்கள் ஐயுணர்வுகளான் மயங்கித் தம்மை உணரா என மேற்கோள் கொண்டது என்பதாம். இதனால், கருவிகள் புலன் உணர்வைத் தருமேயன்றி ஞானத்தைத் தரமாட்டா என்பது புலனாகும். இனிக் கருவி கரணங்கள் நீங்கி ஞானம் நிகழும் முறையை விளக்கி எடுத்துக்காட்டுச் செய்யுள் கூறுகின்றார்.
எடுத்துக்காட்டு - 4
வெண்பா
50. பன்னிறம் காட்டும் படிகம்போல் இந்திரியம்
தன்னிறமே காட்டும் தகை நினைந்து - பன்னிறத்துப்
பொய்ப்புலனை வேறுஉணர்ந்து பொய்பொய்யா மெய்கண்டான்
மெய்ப் பொருட்டுத் தைவமாம் வேறு.
இதன் பொருள் :
பளிங்கு தன்மேல் தீட்டப்பட்ட பல நிறங்ளையே தன் நிறமாகக் காட்டி நிற்கும். அதுபோல ஆன்மா தன்னைப் பொருந்தியிருக்கும் இந்திரியங்களின் இயல்பையே தனது இயல்பாகக் கொண்டு நிற்கும். ஆன்மா தனது இயல்பைச் சிந்தித்து உணரின், பளிங்கில் தீட்டப்பட்ட நிறங்கள் அதற்கு வேறாதல் போலத் தன்னைப் பற்றி நிற்கும் இந்திரியங்கள் தனக்கு வேறானவையே என்பது விளங்கும். வேறாகிய அவ்விந்திரியங்களையே தானாக உணர்ந்து நின்ற அப்பொய்யுணர்வை நீக்கித் தனது உண்மையியல்பை ஒருவன் உணர்ந்தானாயின், அவன் அசத்தாகிய அக்கருவிகளின் வழிப்பட்டு நில்லாமல் சத்தாகிய சிவத்தை உணர்ந்து அதற்கு அடிமையாவன்.
பதவுரை
பன்னிறம் காட்டும் படிகம் போல் - தன்மேல் தீட்டப்பட்ட பல நிறங்களையே தனது நிறமாகக் காட்டுகின்ற பளிங்கு போல
இந்திரியந்தன் நிறமே - ஐம்பொறி முதலிய கருவிகளின் இயல்பையே
காட்டும் - தனது இயல்பாகக் கொண்டு காட்டுகின்ற
தகை - சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது உயிர் எனத் தனது இயல்பை
நினைந்து - முன்னர் சிந்தித்து உணர்ந்து (பின்னர்)
பன்னிறத்து - பலவாய நிறங்கள் பளிங்கின் நிறத்திற்கு வேறாதல் போல
பொய்ப்புலனை - நிலையாத தன்மையுடைய கருவிகளை
வேறு உணர்ந்து - தன்னின் வேறாக உணர்ந்து
பொய் பொய்யா - நிலையாமையை உடைய அக்கருவிகள் நீங்கிப் போக
மெய்கண்டான் - நிலைத்ததாகிய தனது உண்மை இயல்பை உணரும் நிலை உண்டாகும். அவ்வாறு தன்னை உணர்ந்தவன்
வேறு மெய்ப்பொருட்கு - அசத்து ஆகிய அக்கருவிகளின் வேறாய் சத்தாகிய சிவத்தைச் சார்ந்து அதற்கு
தைவம் ஆம் - அடிமை ஆவன்.
விளக்கம்
ஞானாசிரியர் முப்பொருளின் இயல்புகளையும் விளங்க உணர்த்துவார். அவர் உணர்த்தியவற்றைச் சிந்திக்கும் இடத்து ஆன்மாவின் இயல்பு விளங்கித் தோன்றும். அஃதாவது ஆன்மா எப்பொருளைச் சார்கின்றதோ அப்பொருளின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்கும் என்பதும், அம்முறையில் கருவிகளைச் சார்ந்து அவற்றால் உண்டாகும் புலன் அறிவையே தன்னறிவாகக் கொண்டு நிற்கும் என்பதும், அச்சிற்றறிவாகிய புலனறிவு ஆன்மாவிற்குச் செயற்கையேயன்றி இயற்கை ஆகாது என்பதும் நன்கு விளங்கும். கருவிகளால் வரும் அறிவு தனக்குச் செயற்கையாகிய பொதுவியல்பே என்பதையும், தனது உண்மையியல்பு வேறு என்பதையும் உள்ளவாறு உணர்ந்தால், ஆன்மா அக்கருவிகளின் வழிப்பட்டு நில்லாது நீங்கும். அவ்வாறு நீங்கவே, அது மெய்ப்பொருளாகிய சிவத்தை உணர்ந்து அதற்கு அடிமையாய் நிற்கும் என்பதாம்.
நான்காம் கூறு
இப்பகுதியில், விட்டு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே என்ற நூற்பாத் தொடருக்கு விளக்கம் அளிக்கின்றார் ஆசிரியர்.
விடுதல் என்பது ஐம்பொறி முதலிய கருவிகளை விட்டு நீங்குதல். அரன்கழல் செல்<லுதல் என்பது சிவனது திருவடியைச் சென்றடைதல். கருவிகளை விட்டு நீங்குதல் என்பதனை முதலில் பார்ப்போம்.
கருவிகளை விட்டு நீங்குதல் என்பதன் பொருள் :
ஒருவர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். ஒருநாள் அவ்வீட்டின் <உரிமையாளர் வந்து அந்த வீடு தனது பயன்பாட்டிற்கு வேண்டும் என்றும், அதனால் வேறு வீடு பார்த்துச் செல்லுமாறும் சொல்லுகிறார். அவரும் மற்றொரு வீட்டை அரிதின் முயன்று தேடி அங்கே குடிபெயர்ந்து போகிறார். இப்பொழுது அவருக்கும் பழைய வீட்டிற்கும் தொடர்பு இல்லை. பழைய வீட்டை விடுத்து வந்த இந்த நீக்கம் இடம் பெயர்தலால் உண்டானது என்பது விளங்கும்.
இது போன்ற நீக்கம் ஆன்மாவுக்கும் அதன் கருவிகளுக்கும் இடையே நிகழ்தல் இல்லை. ஆன்மா இப் பிறப்பு உள்ள வரையில் ஐம்பொறி முதலியவற்றோடு கூடியே வாழவேண்டியுள்ளது. அவற்றை விட்டு எங்கேயும் அகன்று ஓட முடியாது. எங்கு சென்றாலும் அவையும் நம்மோடு வந்தே தீரும். வீடும் அதில் குடியிருப்பவரும் வேறாக இருப்பதனால் அவர் அவ் வீட்டை விட்டு இடம் பெயர்ந்து செல்ல முடிந்தது. ஆன்மாவும் கருவிகளும் அவ்வாறு வேறாய் நிற்கவில்லையே. ஆன்மா அவற்றோடு ஒன்றாய் அல்லவா நிற்கிறது. ஒன்றாய் உள்ள அக்கருவிகளை விட்டு ஆன்மா இடம் பெயர்ந்து செல்ல முடியாது. ஆதலால் கருவிகளை விட்டு நீங்குதல் என்றால் அவற்றை விட்டு இடம் பெயர்ந்து அகன்று போதல் என்பது பொருளன்று. மற்று, அதன் பொருள்தான் யாது என்பதைப் பார்ப்போம்.
அதி தீவிர சத்தி நிபாதத்தை உடைய உத்தம மாணாக்கனுக்கு ஞானாசிரியர் பின்வருமாறு உணர்த்துவார்; நீ உன் உடம்பு, ஐம்பொறிகள் முதலிய கருவிக் கூட்டத்தில் அகப்பட்டு, அவை உனக்கு வேறானவை என்பதை உணராமல் அவையே நான் என மயங்கி நின்றாய். அம் மயக்கத்தினால், அவைகளுக்கு வருகின்ற தோற்றம், அழிவு, வலிவு, மெலிவு, நோய் முதலியவற்றை உன்னுடையனவாகக் கருதித் துன்புற்றாய். அவைகளோடு கூடியிருத்தல் உனது உண்மையான இயல்பு அன்று. அக்கருவிகள் யாவும் சடப்பொருள். நீயோ அறிவுடைய சித்துப் பொருள். அக் கருவிகளுக்கே தோற்றம், அழிவு, வளர்ச்சி, தளர்ச்சி முதலிய மாற்றங்கள் உண்டு. உண்மையில் உனக்கு அம்மாற்றங்கள் இல்லை. நீ சிவத்தைச் சார்ந்து என்றும் ஒரு நிலையாய் இருத்தற்கு உரியவன் என்று அறிவுறுத்துவார்.
வேடர் கூட்டத்தில் வளர்ந்த அரசகுமாரன், அரசன் வந்து உணர்த்திய அபபொழுதே அவ்வேடர் கூட்டத்தை விட்டு விலகுவதுபோல, ஞானாசிரியரது உபதேசத்தைப் பெற்ற நன் மாணவன் அப்பொழுதே தான் சார்ந்திருந்த கருவிக் கூட்டத்தை விட்டு நீங்குவான்.
இங்கு நீங்குதல் என்பது உடம்பும், ஐம்பொறிகளும், மனமும் ஆகிய அவையே தானாக நின்ற அம்மயக்கம் தீர்ந்து, அக்கருவிகள் தனக்கு வேறானவை என்பதை உணர்ந்து, அவற்றின் வழிப்பட்டு நில்லாமல் நீங்கியிருத்தலாகும். சுருங்கக் கூறினால், நீங்குதல் என்பது இடத்தால் நீங்குதல் அன்று; அறிவால் நீங்குதல் ஆகும்.
அறிவால் நீங்குதல் :
அறிவால் நீங்குதல் என்பதைச் சிறிது விளக்குவோம். ஒரு நண்பருக்கு இனிப்புப் பண்டம் என்றால் கொள்ளை ஆசை. அதனால் எங்கே விருந்து நடந்தாலும் அதனைத் தவற விடமாட்டார். ஒரு நாள் மிகப் பெரிய அளவில் விருந்தொன்று நிகழவிருந்தது. அதற்கு அவருக்கு அழைப்பும் இருந்தது. ஆனால் அதற்கு முந்திய நாளோ அவர் வேறோர் ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரும் வேறு வழியின்றிப் புறப்பட்டுச் சென்றார்.
மறுநாள் வந்தது. சென்ற இடத்தில் இருந்து கொண்டு அந்த விருந்தை எண்ணிப் பெருமூச்சு விட்டார். அடடா! இந்த நேரத்தில் அங்கே விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். அருமையான இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று எண்ணி ஏங்கினார். அவர் அந்த இனிப்புப் பொருள்களினின்றும் இடத்தால் நீங்கியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அறிவினால் நீங்கவில்லை என்று தெரிகிறது அல்லவா?
இனி, அறிவினால் நீங்கியிருத்தலுக்கு எடுத்துக்காட்டுத் தருவோம். திருநீலகண்டர் என்னும் நாயனார் தில்லையில் வாழ்ந்தார். சிவபெருமானது பெருங்கருணையை விளக்குவதாய் உள்ள திருநீலகண்டத்தின்மீது அவருக்கு அளப்பரிய ஈடுபாடு. அதனால் எப்பொழுதும் அப்பெயரையே கூறிவந்தார். அதனால் அவரது பெயரும் அதுவாயிற்று.
அவர் சிற்றின்பத் துறையில் எளியராய், பரத்தமை ஒழுக்கம் உடையவரானார். அதனையறிந்து அவர் மனைவியார் ஊடல் கொண்டார். அதனைப் போக்கக் கருதிய நாயனார் இன்னுரை பல பகர்ந்து அவரை நெருங்கினார். அவ்வம்மையார் சினந்து எம்மைத் தொடாதீர். திருநீலகண்டத்தின் மேல் ஆணை என்று கூறினார்.
அச்சொற்களைக் கேட்ட அப்பொழுதே அவரிடம் வியத்தகு மாற்றம் நிகழ்ந்தது; சிற்றின்ப வேட்கை ஒழிந்தது. இதுகாறும் அவ்வம்மையாரை மனைவியாராக நோக்கி வந்த அந்த நோக்கமும் ஒழிந்தது. இப்பொழுது அவரது பார்வையில் அவ்வம்மையார் அயலாராகவே தோன்றினார்.
அன்று முதல் அவர்கள் ஒரு வீட்டில் ஓரிடத்தில் வாழ்ந்தாலும் இல்வாழ்க்கைக் குரிய செய்கைகளையெல்லாம் குறைவறச் செய்து வந்தாலும்- பிறர் அறியா வகையில் ஒட்டுதல் இன்றி, வாழ்ந்தனர். இடத்தால் நீங்குதல் இன்றி அறிவினால் நீங்கியிருத்தல் இயலும் என்பதைக் காட்டும் நிகழ்ச்சி இது.
திருநீலகண்டர் தம் மனைவியாரை அயலாகக் கருதி வாழ்ந்தது போல, உடம்பு, ஐம்பொறி முதலிய கருவிகளோடு கூடி வாழ்ந்தாலும் அவற்றை வேறாகக் கண்டு விலகி நிற்றல் கூடும்.
மற்றுமொரு எடுத்துக்காட்டினைக் காண்போம். சிற்றம்பல நாடிகள் என்பவர் சிறந்த ஞானியாக விளங்கியவர்; 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரிடம் உபதேசம் பெற்ற பக்குவமாணவர் பலர். அவர்கள் தம் ஆசிரியரோடு சேர்ந்தே வாழ்ந்தனர். மயிலாடுதுறையில் காவிரியாற்றின் கரையில் தங்கியிருந்து வழிபாடு நிகழ்த்தி வந்தனர்.
ஒருநாள் இவர்களுடைய பரிசாரகன் இவர்கள் உண்ணும்போது மறந்துபோய் வேப்பெண்ணெயைக் கொண்டு வந்து நெய்யென்று ஊற்றிவிட்டான். சிற்றம்பல நாடிகளும் ஏனைய அடியார்களும் வேற்றுமையுணர்ச்சி சிறிதும் இன்றி உண்டனராம். உண்ணும் உணவில் உப்புச் சிறிது குறைந்தாலும் மிகுந்தாலும் முகம் வேறுபடுகின்ற நம்மவர் நிலை எங்கே! நாவின் வழிப்பட்டு நில்லாமல் நீங்கி நின்ற அவ்வடியார்களின் பக்குவநிலை எங்கே!
அவ்வடியார்களுள் ஒருவர் மட்டும் வேப்பெண்ணெய் என்று உணர்ந்து வாய் கசந்து நின்றனர் எனவும், அவர் தமது பக்குவக் குறைவினை உணர்ந்து வருந்தி அத்திருக்கூட்டத்தினின்றும் தாமே நீங்கிச் சென்றார் எனவும் கூறப்படுகிறது.
அவ்வடியார்களைப் போல ஐம்பொறிகளோடு கூடி வாழ்ந்தாலும் அவற்றில் அழுந்தி நில்லாமல் அவற்றின் வயப்பட்டு நில்லாமல், அவற்றை வேறாகக் கண்டு விலகி நிற்றல் கூடும்.
மேற்கூறியவற்றால் கருவிகளை வேறாகக் கண்டு நீங்குதல் என்பது பற்று அறுதலாகிய நிலையே என்பது நன்கு விளங்கும்.
இதுகாறும் கருவிகளை விடுதல் என்பது பற்றிய விளக்கத்தைப் பார்த்தோம். இனி, சிவத்தைச் சென்றடைதல் என்ற கருத்தினை நோக்குவோம்.
சிவத்தை அடைதல் என்பதன் பொருள் :
நமக்கு வேறாய் மற்றோர் இடத்தில் உள்ள பொருளையே நாம் சென்றடைதல் கூடும். ஆனால் சிவபரம் பொருள் நமக்கு வேறாய் எங்கேயோ ஓரிடத்தில் இருப்பது அன்று; அஃது உயிர்க்கு உயிராய்த் தழைத்திருப்பது; உள்ளேயே உடன் கலந்து இருப்பது. நம்முடனே இருக்கின்ற சிவத்தைச் சென்று அடைதல் வேண்டும் என்று கூறத் தேவையில்லையே என்னும் ஐயம் எழலாம். அவ்வாறு கூறுவதன் கருத்தைப் பின்வருமாறு உணர்த்தலாம்.
சிவன் நமக்கு வேறாய் இல்லாது ஒன்றாய் இருப்பினும் நம் அறிவிலே உள்ள மயக்கம் காரணமாக அவனை உணராதிருக்கிறோம்; அன்று தொட்டு இன்றுவரை நாம் அவனோடு இயைந்திருந்தாலும் ஏதும் பழக்கம் இல்லாமல் இருக்கிறோம்; அவனது இருப்பையும் உடனிருந்து செய்யும் உதவியையும் சிறிதும் உணராமல் நானே எல்லாம் என்றும். நானே யாவும் செய்கின்றேன் என்றும் எண்ணி வருகிறோம்.
இவ்வாறு சிவனோடு கூடியிருந்தும் அதனை உணராமையால் அவன் நமக்கு வேறானவனாய்-சேய்மையனாய் இருக்கின்றான். இமைப்பொழுதும் நீங்காத அவன் இவ்வகையில் நீங்கியிருக்கின்றான்.
எனவே, சிவனோடு கூடியிருந்தும் அதனை அறியாதிருத்தலே அவனை நீங்கியிருத்தல் ஆகும். அவன் தன்னோடு அத்துவிதமாய் இயைந்து நிற்றலை உள்ளவாறு அறிதலே அவனை அடைதல் ஆகும்.
தன்னோடு உடனாய் இருக்கும் ஒரு பொருளை நீங்கினாற் போலவும், பின் மீள அடைந்தாற் போலவும் உணர்ந்து சொல்லுகின்ற வழக்கினை உலகியலிற்காணலாம். இதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறுவோம்.
ஒரு தாய்க்கு ஒரே பிள்ளை. அவன் கடும் நோய்வாய்ப்பட்டுச் சாகும் நிலையில் கிடக்கின்றான். மருத்துவரெல்லாம் கைவிட்டுப் போயினர். தாய் கதறுகிறாள்; பதறுகிறாள். அவள் செல்லாத கோயில் இல்லை. செய்யாத வேண்டுதல் இல்லை. கடவுளருளால் அப்பிள்ளை கண் திறக்கிறான்; உயிர் பிழைக்கிறான். அத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையுண்டா? எனக்குக் கிடைத்து விட்டான் என்று சொல்லிச் சொல்லி மகிழ்கிறாள்.
தன்னைவிட்டு நீங்கிப் போன ஒரு பொருளை மீண்டும் பெற்றபோது கிடைத்து விட்டது என்று சொல்லுதல் முறை. ஆனால் அவளது மகன் அவளை விட்டு நீங்கி விடவில்லையே; அருகில் தானே இருக்கின்றான். அவ்வாறிருக்க, கிடைத்து விட்டான் என்று கூறுவது ஏன் எனில், அவன் தன்னை விட்டு நீங்கினாற்போல முதலில் உணர்ந்தாள். ஆதலின் அவன் பிழைத்துக் கொண்டபோது அவனைத் திரும்ப அடைந்தாற்போல உணர்ந்து அப்படிச் சொல்<லுகிறாள்.
இறைவன் நீங்காது உடன் இருக்கவும் உயிர் அவனைப் பிரிந்திருக்கிறது என்பது, தன் மகன் அருகில் இருக்கவும் அத் தாய் அவனை நீங்கினாற்போல உணர்தல் போன்றது. உயிர் இறைவனை அடைதல் என்பது, அத் தாய் தன் மகன் கிடைத்து விட்டதாக உணர்தல் போன்றது.
உயிர் தன்னோடு முதல்வன் பிரியாமல் இருக்கவும் அதனை உணராமையால் அவனின் நீங்கியிருப்பதாக உணர்கிறது. பின் ஞானாசிரியர் உபதேசத்தால் அதனை உணர்நத பொழுது அவனை அடைந்ததாக உணர்கிறது.
இதனால், நீங்குதலும் அடைதலும் அறிவினால் நிகழ்வன என்பது விளங்கும்.
நிட்டை கூடுதலே சிவத்தை அடைதல் :
அறிதலே அடைதல் எனப் பார்த்தோம். ஆயினும் அறிதலிலே பல படி நிலைகள் உண்டு. அவை கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் என்பன.
அவற்றுள் கேட்டலாவது ஐம்பொறி முதலிய கருவிகளும், பிறவுலகப் பொருள்களும் தனக்கு உண்மையான சார்பு ஆகா. சிவபரம்பொருளே தன் வாழ் முதலாக-உண்மையான பற்றுக் கோடாக இருப்பது என்பதனை ஞானசிரியர்பால் உபதேச முறையில் கேட்டறிதல்.
அவ்வாறு கேட்டதனை நூல்களிற் கூறியவற்றோடு ஒட்டி வைத்து இது பொருந்துமா என ஆராய்ந்து உணர்தலே சிந்தித்தல் ஆகும். அவ்வாறு ஆராயுங்காலத்தில் பல ஐயங்கள் எழும். அவ் ஐயங்களெல்லாம் தீர்ந்து பின் அதுவே உண்மை என உறுதியாகத் துணிதலே தெளிதல் ஆகும்.
தெளிந்தபின் பிற பற்றுக்களையெல்லாம் விட்டு அச் சிவ முதற் பொருளில் அழுந்துதலே நிட்டை கூடுதல் ஆகும். இதுவே சிவானுபவம் என்பது. எனவே கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்பவற்றைக் கடந்து, அழுந்தியறிதல் ஆகிய- அனுபவித்தல் ஆகிய நிட்டை கூடுதலே உயிர் சிவத்தை அடைந்த நிலையாகும் என்பது அறியத்தகும்.
நிட்டை என்பதன் விளக்கம்:
நிட்டையாகிய உயர்நிலையை மேலும் சிறிது விளக்குவோம். எவ்வகை அனுபவத்திலும் மூன்று பொருள்கள் உள்ளன. அவை அறிபவன், அவனது அறிவு, அறியப்படும் பொருள் என்பன. வடமொழியில் ஞாதுரு, ஞானம், ஞேயம் என்று சொல்லப்படும் அம்மூன்றையும் திரிபுடி என்பர்.
சிவனும் உயிரும் வேற்றுமை சிறிதும் தோன்றாதவாறு தம்முள் மிகவும் கலத்தலாகிய சிவானுபவத்திலும் அம்மூன்றும் உள்ளன. ஆயினும் அவை வேறு வேறாய் உள்ள தன்மை தோன்றுவதில்லை. அஃதாவது, அறிபவனாகிய உயிர் தன்னையும் தனது அறிவையும் அறியாது சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தி நிற்கும்.
ஆன்மா ஞேயப் பொருளாகிய சிவம் ஒன்றையே உணரும் நிலையை விடுத்து, யான் இதனை அறிகிறேன் எனத் தன்னையும் தனது ஞானத்தையும் பகுத்து உணர்ந்து நிற்குமாயின் சிவானுபவம் இல்லையாய் விடும். ஏனெனில், ஆன்மா ஒன்றை அறியுங்காலத்தில் மற்றொன்றை அறிய மாட்டாது. ஆகவே அது தன்னையும் தனது ஞானத்தையும் அறியும் பொழுது சிவத்தை அறியாது மறக்கும். அந்நிலையில் சிவானுபவம் எவ்வாறு நிலைக்கும்? இதனால், ஆன்மா ஞாதுருவாகிய தன்னையும் தனது ஞானத்தையும் அறியாது ஞேயமாகிய சிவம் ஒன்றையே அறிந்து அழுந்தி நிற்றலே சிவானுபவம் என்பது விளங்கும்.
தன்னை மறந்து சிவத்தில் அழுந்திச் சிவானந்தத்தில் திளைத்திருத்தல் ஆகிய இந்நிலையை இவ்வுலகில் இவ்வுடம்போடு கூடியிருக்கும்போதே பெற்றிருத்தலே நிட்டை என்று சொல்லப்படுகிறது.
அரன் கழல் செல்லுதல் :
நிட்டையில் ஆன்ம அறிவு சிவானந்தத்தில் மூழ்கி விடுதலின் ஆன்மா அந்நிலையில் தன்னையோ, பிறரையோ, பிற பொருள்களையோ உணர்வதெங்கே! மனமும் சொல்லும் கடந்த நிலை அது. அன்றலர்ந்த பூவின் மது நிறைய வாரி ஆவலுடன் உண்ட வண்டு அப்பூவிலேயே மயங்கிக் கிடத்தல்போல ஆன்மா சிவனது திருவடி வியாபகத்துள் அடங்கி நிற்கும் நிலை அது. அந்நிட்டை நிலையையே அரன் கழல் செல்லுதல் என இந்நூற்பா குறித்ததாயிற்று.
இனி, கருவிகள் நீங்கியபொழுது உயிர் முதல்வன் திருவடியை அடையும் எனக் கூறும் மேற்கோளினைக் காண்போம்.
மேற்கோள்
இனி, இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான்
காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என்றது.
மேற்கோள் விளக்கம்
தன்னைக் கருவிகளின் வேறாகக் காணுதல் :
ஆன்மா சித்தாயும் வியாபகமாயும் இருப்பது. ஐம்பொறி முதலிய கருவிகள் சடமாயும் ஏகதேசமாயும் இருப்பன. ஏகதேசமாகிய இக்கருவிகள் ஏகதேசப் பொருள்களையே, அஃதாவது வரையறைக்கு உட்பட்ட புறப்பொருள்களையே உணர்த்தும். அவை வியாபகமாகிய ஆன்ம இயல்பை உணர்த்தமாட்டா என்பது தெளிவு. எனவே ஆன்மா ஆசிரியரது உபதேசத்தின் வழியே தன்னை ஆராய்ந்து உணர்வதற்குக் கருவிகள் செய்யும் உதவி யாதொன்றும் இல்லை. ஆன்மா தன்னியல்பை ஆராயுங்காலத்தில் தன்னைக் கருவி கரணங்களின் வேறாக உணரும். அவ்வாறு உணர்ந்த அப்பொழுதே அவ்வான்மா முதல்வனது திருவடியை அடைந்து விடும் என்பதாம்.
ஆன்மா கருவிகளின் நீங்குதல் என்பது அறிவினால் நீங்குதலேயாகும். அஃதாவது, தன்னை அவற்றின் வேறாக உணர்தலேயாகும். இக்கருத்து விளங்குதற் பொருட்டே இந்திரியத்தின் வேறாய் நீங்கவே என்னாது, இந்திரியத்தின் வேறாவான் காணவே என்றார் ஆசிரியர்.
ஆன்மா சத்து, அசத்து என்னும் இரண்டனுள் ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்குமேயன்றித் தனித்து நில்லாது என முந்திய ஏழாம் நூற்பாவில் கூறியது நினைவிருக்கலாம். அவ்வியல்பினால், அசத்தாகிய ஐம்பொறிகளைப் பற்றி நின்று அறிவு மயங்கிய ஆன்மா ஆசிரியரின் உபதேசத்தால் தன்னை உணர்ந்து அக்கருவிகளின் நீங்கிய அப்பொழுதே சத்தாகிய சிவத்தைச் சேர்ந்து விடும் என அறியலாம்.
இனி, கருவிகளை நீங்கிய ஆன்மா சிவத்தை அடைவதற்கு முயற்சி எதுவும் செய்யத் தேவையில்லை; கருவிகளை வேறாக உணர்ந்த அப்பொழுதே அவ்வான்மா வேறு முயற்சி இன்றியே இறைவன் திருவடியை அடைந்துவிடும் என்பதை உவமையில் வைத்து உணர்த்துவாராய் ஏதுக் கூறுகின்றார்.
ஏது
ஊசல் கயிறு அற்றால் தாய் தரையேயாம் துணையான்
ஏதுவின் பொருள்
ஒருவன் ஊசலிலே அமர்ந்து ஆடுகின்றான்; அந்த ஊசலின் கயிறுகள் அறுந்து விடுமாயின் கீழே விழும் அவனை அக்கணமே நிலமானது தாய் போலத் தாங்கிக் கொள்ளும். அதுபோலக் கருவிக் கூட்டங்களின் நீங்கிய ஆன்மாவை அப்பொழுதே இறைவனது திருவருள் தாங்கிக் கொள்ளும். ஊசலில் இருந்து விழுந்தவன் தரையை அடைவதற்கு என்ன முயற்சியைச் செய்தான்? ஒரு முயற்சியும் செய்தானில்லை. கருவிகளை வேறாகக் கண்டு நீங்கிய ஆன்மா இறைவன் திருவடியை அடைவதும் அதுபோன்றதேயாகும்.
ஏது விளக்கம்
ஊசலில் அமர்ந்து ஆடுகின்றவன் அவ்வூசலைச் சில சமயம் மெல்லச் செலுத்துகின்றான். சில சமயம் விரையச் செலுத்துகின்றான். கீழே விழாமல் ஆடுகின்ற தனது திறமையைக் குறித்துத் தன்னைத்தானே வியக்கின்றான்; அவ்வாட்டத்திற்குத் தானே தலைவன் என்றும் மதிக்கின்றான். ஆனால் உண்மையில் அவனுக்கும் அவன் அமர்ந்திருக்கும் ஊசலுக்கும் ஆதாரமாய் இருப்பது நிலமேயன்றோ? நிலம் தாரகமாய் இருந்து தாங்கவில்லையென்றால் ஊசல் ஏது? அவனது ஆட்டம் ஏது?
இந்திரியங்கள் ஊசல் போன்றவை. ஆன்மா அவ்விந்திரியங்களைப் பொருந்தி நின்று உலக வாழ்வில் ஆடிக் களிக்கின்றது. ஊசலோடு ஒன்றியிருந்து ஆடுகின்றவன் தன்னையே அச்செயலுக்குத் தலைவனாகக் கருதி, ஆதாரமாய் உள்ள நிலத்தை அடியோடு மறத்தல் போல, ஆன்மாவும் இந்திரியங்களே தானாக அவற்றோடு ஒன்றி நின்று எச்செயலுக்கும் தன்னையே தலைவனாகக் கொண்டு, தன் செயல் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பது இறைவன் திருவருளே என்பதை மறந்து நிற்கின்றது.
யாதொரு செயலுக்கும் தன்னையே தலைவனாகக் கொள்ளுதலே யான் எனது என்னும் செருக்கு. யான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. இவ்விரு பற்றுக்களும் ஊசலின் கயிறுகள் போன்றவை. கயிறுகள் வலிமையாக உள்ள வரையில் ஊசலில் ஆடுகின்றவன் தனக்குத் தெரிகின்ற உலகக் காட்சியைக் கண்டு களிப்பானேயன்றித் தரையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதுபோலப் பற்றுக்கள் வன்மையாக உள்ள வரையில் ஆன்மா உலக வாழ்வில் திளைத்து நிற்குமேயன்றித் திருவருளை நினைத்துப் பார்ப்பதில்லை.
ஊசலின் கயிறு அறுந்தபொழுதே அதிலிருந்து ஆடியவன் தாய் போலத் தன்னை ஏன்று கொள்ளும் நிலத்தைப் புகலாக அடைவான். அதுபோல, இந்திரியங்களைத் தன்னின் வேறாகக் கண்டு பற்று அற்றபொழுதே ஆன்மா இறைவனது அருளைப் புகலாக அடையும்.
இவ்ஏதுவினால், ஊசலின் மேல் இருத்தல் செயற்கையும், நிலத்தில் இருத்தலே இயற்கையும் ஆதல் போல இந்திரியங்களின் வயப்பட்டிருத்தல் ஆன்மாவுக்குச் செயற்கை என்பதும், இந்திரியப் பறவை இரிந்து ஓட இறையருளைச் சார்ந்து நிற்றலே ஆன்மாவுக்கு இயற்கை என்பதும் புலனாகும்.
தன்னை இந்திரியங்களின் வேறாகக் காணின் இறையருளை அடைவதற்குச் சிறிதும் இடையீடு இல்லை என்பதும் விளங்கும்.
ஏதுவில் உள்ள துணை என்பதற்கு ஒப்புமை என்பது பொருளாகும்.
இனி எடுத்துக் காட்டுச் செய்யுட்களை நோக்குவோம்.
எடுத்துக்காட்டு - 1
வெண்பா
51. சிறை செய்ய நின்ற செழும்புனலின் உள்ளம்
சிறை செய் புலன் உணர்வில் தீர்ந்து- சிறைவிட்டு
அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல் மீளாது
உலைவில் அரன் பாதத்தை உற்று.
இதன் பொருள்:
மிகுதியான ஆற்று நீரை அணைக்கட்டுத் தடுத்து நிறுத்துகிறது. அதுபோல உயிரினது வியாபகத்தைக் கருவிக் கூட்டம் தடைப்படுத்துகின்றது. அதனால் உயிரின் வியாபக அறிவு விளங்காமல் அக் கருவிகளின் அளவாகத் தடையுண்டு சிற்றறிவாய் -பாசஞானமாய் நிற்கிறது.
அணை உடைந்தால் அதனுள்ளே தேங்கி நின்ற ஆற்றுநீர் அத்தடை நீங்கி விரைந்து ஓடி அலைகடலிற் பாய்ந்து அதனுள் அடங்கி அந்நீரேயாகிவிடும். அதுபோலக் கருவிகளாகிய தடை நீங்குமானால் உயிர் சிற்றறிவு நீங்கித் தனது வியாபக இயல்பைப் பெற்றுச் சிவபிரானது திருவருள் வியாபகத்துள் அடங்கிச் சிவமேயாய் நிற்கும்.
அலைகடலைச் சென்றடைந்த ஆற்று நீர் திரும்பி வராததைப்போலக் கருவிகளின் நீங்கிச் சத்தாகிய சிவத்தை அடைந்த உயிர் மீளவும் கருவிகளோடு கூடி அசத்தாகிய உலகப் பொருள்களை நோக்குதல் இல்லை.
பதவுரை
சிறை செய்ய - அணையைக் கட்டித் தடைசெய்ய (அதனால்)
நின்ற - கடலை நோக்கி ஓடாது தடைப்பட்டுத் தேங்கி நின்ற
செழும் புனலின் - மிகுதியான ஆற்று நீர் போல
உள்ளம் - உயிர்
சிறை செய் புலன் உணர்வின் - மெய்ப்பொருளாகிய இறைவனைச் சேரவிடாது தடுக்கின்ற, கருவியுணர்வாகிய பாசஞானத்தால் தடைப்பட்டு நின்று,
சிறைவிட்டு அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல் - அணை உடைந்தவுடன் விரைந்து ஓடிக் கடலை அடைந்து அதனுள் அடங்கி மீண்டு வாராத ஆற்று நீர் போல
தீர்ந்து - கருவியுணர்வாகிய பாசஞானம் நீங்கியவுடன்
உலைவு இல் அரன் பாதத்தை உற்று - கெடுதல் இல்லாத சிவனது திருவடி எனப்படும் திருவருள் வியாபகத்தை அணைந்து அதனுள் அடங்கி
மீளாது - பின் மீளுதலைச் செய்யாது.
விளக்கம்:
ஆன்மா சித்தாயும் வியாபகமாயும் இருப்பது. அதுவே அதன் இயற்கை. ஆற்றின் செழும்புனலைச் செயற்கையாகிய அணை தடுத்து நிறுத்தித் தன் எல்லைக்குட்படுத்துவதுபோல, ஆன்மாவினது வியாபகத்தை உடம்பும் பிற கருவிகளும் தடை செய்து தம் அளவாக ஏகதேசப்படுத்துகின்றன; கட்டுப்படுத்துகின்றன. அதனால் ஆன்மா சிற்றறிவுடையதாய் நிற்கிறது. இவ்வாறு நிற்பது உயிரின் இயற்கை நிலையன்று; கருவிகளால் ஆய செயற்கை நிலையேயாம்.
ஞானாசிரியரின் உபதேசத்தைப் பெற்றுத் தன் உண்மை நிலையை உணர்ந்த ஆன்மா அக்கருவிகளை விட்டு நீங்கும். கருவிகள் நீங்கவே அவற்றால் ஆன செயற்கையாகிய சிற்றறிவும் நீங்கும். சிற்றறிவாகிய பாச ஞானம் நீங்கவே, உயிரின் வியாபக அறிவு விளங்குவதற்குத் தடையில்லை. அவ்வாறு விளங்கிய வியாபக அறிவின்கண் மெய்ப் பொருளாகிய சிவம் விளங்கித் தோன்றும். ஆன்மா அதுகாறும் நுகர்ந்து வந்த உலக இன்பத்திற் பெரிதும் வேறுபட்டதாய், எல்லையின்றி வளர்வதாகிய பேரின்பம் தோன்றும். அத்தகைய நிலைபேறுடைய பேரின்பத்தை நுகர்ந்த ஆன்மா பின் நிலையற்றதாகிய உலக இன்பத்தை மீண்டும் நோக்குதல் இல்லை என்பது கருத்து.
இங்கு ஓர் ஐயம் எழலாம். கருவிகள் நீங்கியபோது ஆன்மா அறியாமையாகிய கேவலத்தை அடையும் என நான்காம் நூற்பாவில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கக் கருவிகளின் நீங்கிய ஆன்மா சிவத்தை அடையும் என்றல் பொருந்துமோ? என்பதே அவ் ஐயம். பின்வரும் விளக்கம் அதனைத் தெளிவிப்பதாகும்.
மலமே தாரகம் ஆதல் :
நான்காம் நூற்பா சகல நிலையில் நிகழும் கேவலம் பற்றிக் கூறுவது. உலக வாழ்வாகிய சகல நிலை என்பது ஆணவ மலமும் அதனை நீங்க வந்த மாயை, கன்மங்களாகிய மலங்களும் கூடிய நிலையாகும் என்பது நாம் அறிந்தது. ஆணவ மலமாகிய இருள் மாயா கருவிகளாகிய விளக்கொளியால் சிறிது நீங்குவதாகும். மாயா கருவிகள் விழிப்பு நிலையில் செயற்படுவதனால் அறியாமையிருள் நீங்கி அறிவு விளக்கம் பெற்று வருகிறோம். உறக்க நிலையில் அக்கருவிகள் செயற்படாது போதலினால் அறிவு விளங்காமல் அறியாமையின் வயப்படுகிறோம். விளக்கொளி நீங்கியதும் இருள் வந்து சூழ்ந்து கொள்ளுதல் போன்றது இது.
மலத்தொடு கூடிய இந்நிலையில் மாயா கருவிகள் நீங்குதலாவது, அவை செயற்படாது போதல் ஆகும். அவ்வாறு அவை செயலற்றுப் போகவே, உயிர் ஒன்றையும் அறியமாட்டாது ஆணவ மலத்தின் வசப்பட்டு அறியாமையுள் அழுந்தும். எனவே மலத்தொடு கூடிய நிலையில் மாயா கருவிகள் நீங்கினால் ஆன்மாவுக்கு மலமே தாரகம் என்பது விளங்கும்.
திருவருளே தாரகம் ஆதல் :
இனி எட்டாம் நூற்பா ஆணவ மலம் நீங்கிய சுத்த நிலை பற்றிக் கூறுவது. சுத்த நிலையாவது இரவு நீங்கிப் பொழுது விடிந்தாற் போன்றது; இருள் முற்றிலும் நீங்கிச் சூரியனது பொன்னொளி எங்கும் பரவினாற் போன்றது. ஆணவ மலமாகிய இருள் முழுதும் விலகித் திருவருள் ஒளி ஆன்ம அறிவில் விளங்கித் தோன்றும் நிலை இது.
சூரியவொளி ஒளிர்கின்ற காலத்தில் விளக்கொளி இருந்தும் இல்லாததேயாகும். திருவருளாகிய சூரியவொளி மேம்பட்டு நிற்கும் இக்காலத்தில், விளக்கொளியாகிய - மாயா கருவிகளால் வரும் சிற்றறிவாகிய-பாசஞானத்தால் ஆன்மாவுக்கு ஆவது ஒன்றும் இல்லை. அக்கருவிகள் செயற்படினும் ஆன்மா அவற்றின் வழிச்சென்று உலகப் பொருள்களை நாடி நிற்றல் இல்லை. ஆன்மா கருவிகளின் வயப்படாமல் நிற்கின்ற நிலை இது. சுத்த நிலையில் கருவிகள் நீங்குதல் என்றால் அவை செயற்படாமல் போதல் என்பது கருத்தன்று. மற்று, அக்கருவிகளே தானாக நின்ற அம்மயக்கத்தினின்றும் நீங்குதலே கருவிகளின் நீங்குதலாகும்.
மலத்தொடு கூடிய நிலையில் கருவிகள் நீங்குதல் என்பதற்கும், சத்த நிலையில் கருவிகள் நீங்குதல் என்பதற்கும் உள்ள இவ்வேறுபாடு அறிதற்குரியது.
கருவிகளால் வரும் மயக்கத்தினின்றும் நீங்கவே, ஆன்மா திருவருளை உணர்ந்து அதன் வசப்பட்டு அதில் அழுந்தும். எனவே மலம் நீங்கிய சுத்த நிலையில் மாயா கருவிகள் நீங்கினால் ஆன்மாவுக்குத் திருவருளே தாரகம் என்பது விளங்கும்.
மலத்தை அடைந்த ஆன்மா மீளுதல் :
முன்னே கூறியவாறு, கருவிகள் நீங்கி மலமே தாரகமாய்க் கேவல நிலையை அடைந்த ஆன்மா அந்நிலையினின்றும் மீள்வதாகும். சடமாகிய ஆணவமலத்தின் சத்திக்குக் கெடுதல் உண்டு. ஆதலால் இறைவனது திரோதான சத்தி அம்மல சத்தியைக் கெடுத்து அதில் அழுந்தி நின்ற ஆன்மாவை விடுவித்து மீண்டும் மாயா கருவிகளோடு கூட்டி அறிவை விளக்கி வரும். இதனால், மலத்தை அடைந்த ஆன்மாவுக்கு மீட்சி உண்டு என்பது புலனாகும்.
திருவருளை அடைந்த ஆன்மாவுக்கு மீட்சி இல்லை :
மற்று, சுத்த நிலையில் கருவிகளை நீங்கித் திருவருளே தாரகமாய்ச் சென்றடைந்த ஆன்மா அந்நிலையினின்றும் மீண்டு கருவிகளின் வயப்படுதல் இல்லை. ஏனெனில், திருவருட்சத்திக்கு என்றும் கெடுதல் என்பது இல்லை. அது கேடு அடைந்து மெலிவுற்றால் அல்லவா அதனைச் சார்ந்த ஆன்மா அதிலிருந்து விடுபட முடியும்! திருவருட்சத்தி என்றும் ஒரு தன்மைத்தாய் இருப்பது ஆகலின் அதன் வயப்பட்ட ஆன்மாவுக்கு மீட்சியில்லை என்பது புலனாகும்.
இது பற்றியே வெண்பாவின் இறுதியில் , சிவசத்தி கெடுதல் இல்லாதது என்னும் பொருளில் உலைவு இல் அரன்பாதம் எனக் குறித்தார் ஆசிரியர். அதற்கு என்றும் கெடுதல் இல்லாமையால் சிவத்தையடைந்த ஆன்மா அதனினின்றும் திரும்புவதற்குக் காரணம் இல்லை என உணர்த்தினராயிற்று.
கருவிகளின் நீங்கிய ஆன்மா கேவலத்தை அடையும் என்னாது சிவத்தை அடையும் என்றல் பொருந்துமோ? என முன்னே எழுப்பிய வினாவுக்கு இப்பொழுது விடை கூறலாம். ஆன்மாத் தன்னை உணராத பொழுதே, கருவிகளின் நீங்கினால், கேவலத்தை அடையும். தன்னை உணர்ந்தபின் அவற்றின் நீங்கினால் சிவத்தை அடையமேயன்றிக் கேவலத்தை அடையாது என்பதே அதற்கு விடையாகும்.
எடுத்துக்காட்டு - 2
ஒரு சாரார் பின்வருமாறு கூறுவர். சிவத்தை அணைந்தோர் சிவமாதல் போல அவர் தம் கருவி கரணங்களும் சிவ கரணங்களாகும். ஆகையால் அவர் மீட்டும் ஐம்புலன் வழியே சென்றாலும் அதனால் தீங்கு ஒன்றும் இல்லை என்பர். அவர் கூற்றை மறுத்தற்கு இவ்விரண்டாம் எடுத்துக்காட்டினைக் கூறுகின்றார் ஆசிரியர்.
வெண்பா
52. எவ்வுருவும் தான் என்னில் எய்துவார் இல்லைதாள்;
இவ்வுருவின் வேறேல் இறையல்லன்;- எவ்வுருவும்
கண்போல் அவயவங்கள் காணா; அக் கண்ணில்லார்
கண்பேறே காண் அக் கழல்.
இதன் பொருள் :
சுத்த நிலையில் உயிர் சிவமாதல் போலக் கருவிகளும் சிவமே எனில், கருவிகளின் நீங்கிச் சிவனது திருவடியை அடையவேண்டும் என நூல்கள் கூற வேண்டாமே. மாறாக, பதியை அடைவதற்குப் பாசமாகிய கருவிகளை விட வேண்டும் என்றுதானே அந்நூல்கள் வற்புறுத்துகின்றன.
அவ்வாறாயின், உயிரும் கருவிகளும் சிவனின் வேறே எனக் கொள்ளலாமோ? எனில், அதுவும் பொருந்தாது. ஏனெனில் அனைத்துப் பொருள்களிலும் அவையேயாய் இயைந்து நின்று இயக்குகின்றவன் சிவனே என நூல்கள் கூறுகின்றன. ஆதலால் உயிரும் கருவிகளும் சிவனின் வேறு என்றால், அஃது அந்நூல்கள் கூறுவதற்கு மாறாய் அமையும்; மேலும் சிவனுக்கு முதன்மையும் இல்லாது போகும்.
உயிரும் கருவிகளும் ஆகிய இவற்றின் இயல்புகளை வேறு எவ்வாறுதான் கூறுவது என்னும் வினா எழும். அதற்கான விடையைப் பன்னிரண்டடிகளில் அமைத்துள்ளார் ஆசிரியர்.
ஐம்பொறிகளிலும் உயிர் ஒரு படித்தாய்க் கலந்து நிற்கிறது. ஆயினும் அவை ஐந்தும் தம்முள் ஒப்பன ஆகா. அவற்றுள், கண்ணே உயர்வுடையது. மெய், வாய், மூக்கு, செவி என்னும் பிற நான்கு பொறிகளும் தாழ்வுடையன. அஃது எவ்வாறு எனில், கண்ணொளி தன் புலனாகிய உருவத்தை அஃது உள்ள இடத்திற்குச் சென்று அறியும். அவ்வாறின்றி மெய் முதலிய நான்கும் தத்தம் புலன்கள் தாம் இருக்கும் இடத்திற்கு வந்தால் மட்டுமே அறியும்; அவை கண்போலச் சென்று அறிய மாட்டாவாம். அவ்வகையில் கண்ணே பிற பொறிகளினும் ஏற்றம் உடையதாகும்; கண்ணிற்கு உள்ள இச்சிறப்புத் தன்மை ஒளி மழுங்கிய கண்ணுடையாரிடத்தில் விளங்கித் தோன்றாதாயினும் ஒளி பெற்ற கண்ணுடையாரிடத்தே தெளிவாக விளங்கும்.
இதுவரை கூறியது உவமையாகும். இவ்வுவமையால் பெறப்படும் கருத்தை இனிக் காண்போம்.
உயிரிடத்திலும் கருவிகளிடத்திலும் சிவம் ஒரு படித்தாய்க் கலந்து நிற்பினும், அதுபற்றி உயிரும் கருவிகளும் சமமாகி விடுவதில்லை. கருவிகள் தாழ்ந்தன வேயாம். கருகளின் உண்மையியல்பு ஏகதேசமாய்- வரையறைப்பட்டு நிற்றல். உயிரின் உண்மையியல்பு வியாபகமாய் - எல்லையின்றி விரிந்து நிற்றல்.
உயிருக்குள்ள இவ்வுயர்வு சிவத்துவம் பெறாதவரிடத்தில் விளங்கித் தோன்றாதாயினும் சிவத்துவம் பெற்றவரிடத்தில் இனிது விளங்கும்.
ஆதலால் சிவத்தை அணைந்தோர் அந்நிலையினின்றும் நீங்கித் தாழ்வுடைய பொறிகளின் வழியே செல்லுதல் குற்றமாகும் என்பது உணர்த்தப்பட்டது.
பதவுரை
எவ்வுருவும் தான் என்னின் - முத்தியில் உயிர் சிவமாதல் போலக் கருவிகளும் சிவத்தன்மை உடையனவே யாம். (அதனால் அந்நிலையில் கருவிகளின் மீளினும் குற்றமில்லை) எனக் கூறினால்
தாள் எய்துவார் இல்லை - பாசமாகிய கருவிகளை விட்டு நீங்குதலே முத்தி என்பதின்றி, பாசத்தில் நிற்றலே முத்தி என்று ஆகும். அதனால் பாசத்தை விட்டுச் சிவனது திருவடியை அடைய முயல்வார் ஒருவரும் இலர் ஆவர். (அவ்வாறாயின்)
இவ்வுருவின் வேறேல் - பாசமாகிய கருவிகளில் சிவனது கலப்பு இல்லை என்று கூறலாமோ? எனில், அறிவில் பொருள்களில் அவனது கலப்பு இல்லை என்று கொண்டால்
இறை அல்லன் - அனைத்துப் பொருள்களிலும் அவையேயாய் இயைந்து நின்று இயக்குகின்றவன் என்று நூல்கள் கூறுவது பொருந்தாமற் போகும். மேலும் அவனுக்கு முதன்மையும் இல்லாது போகும்.
(கருவிகளும் உயிரும் சிவனது கலப்பை உடையனவாயினும் அறிவுடைப் பொருளாகிய உயிரில் சிவத்தன்மை சிறந்து நிற்றலைப் பின் இரண்டு அடிகளில் உவமை கூறி உணர்த்துகிறார் ஆசிரியர்.)
எவ்வுருவும் - எல்லா உறுப்புகளிலும் உயிர் கலந்து நிற்பினும்
அவயவங்கள் கண் போல் காணா - கண் நீங்கலாக மற்ற நான்கு பொறிகளும் கண் தன் புலனை உணர்தல் போல உணரமாட்டா.
(அஃதாவது, கண் தன் புலனாகிய உருவத்தை அஃது உள்ள இடத்திற்குச் சென்று அறியும். ஆனால் மற்ற நான்கு பொறிகளும் நின்ற இடத்தில் நின்று ஓசை முதலிய தத்தம் புலன்களை அவை தம்மிடத்து வந்த பின் அவற்றைப் பொருந்தி அறியும்.)
அக்கழல் - கண்ணிற்கு உள்ள அவ்வெற்றிப் பாட்டினை
அக்கண்ணில்லார் கண் பேறே காண் - அத்தகைய கண்ணில்லாதவர் பின்னர் அக்கண்ணைப் பெற்ற இடத்து நீ கண்டுணர் வாயாக.
(அதுபோல, உயிரிடத்தும் கருவிகளிடத்தும் சிவம் ஒப்பக் கலந்து நிற்பினும் முத்தியில் உயிர் தன் உண்மையியல்லைத் தலைப்பட்டு எல்லையின்றி விரிந்து நிற்கும்; வியாபகவுணர்வைப் பெற்று நிற்கும்; கருவிகள் அவ்வாறு நிற்க மாட்டா. அவை சுட்டுணர்வையன்றி, வியாபகவுணர்வைத் தரமாட்டா என்பது கூறப்பட்டது.)
குறிப்பு :
செய்யுளின் ஈற்றில் உள்ள கழல் என்ற சொல் வெற்றியைக் குறிக்கும். கண்ணுக்கு வெற்றியாவது, ஏனைய நான்கு பொறிகளைவிட உயர்வுடையாதல்.
பின்னிரண்டடிகளில் உவமை மட்டுமே உள்ளது. அதற்கு ஏற்பக் கருத்து வருவித்து உரைக்கப்பட்டது.
எடுத்துக்காட்டு - 3
ஞானம் பெற்றோர் முடிநிலை இன்பமாகிய சிவானுபவத்தை - உடம்பு நீங்கியபின் பெறுதற்கு உரிய அப்பேரின்பத்தை- உடம்போடு கூடியிருக்கும்போதே பெறுவதுதான் நிட்டை என முன்னே பார்த்தோம். ஆயின் ஞானம் பெற்றோர் அனைவரும் அந்நிட்டை நிலையை எய்தி விடுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலர் குருவின் உபதேசத்தைப் பெற்ற பின்பும் அந்நிலையை எய்த மாட்டாதவராய் உள்ளனர். அதன் காரணத்தைப் பின் வருமாறு கூறலாம்.
ஞானம் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு படிகளாய் நிகழ்ந்து பெருகி முற்றுப் பெறும். குருவின் உபதேசத்தைக் கேட்டல், ஞானத்திற் சரியை எனப்படும். அதனைச் சிந்தித்தல் ஞானத்திற் கிரியை எனப்படும். அதனைத் தெளிதல் ஞானத்தில் யோகம் எனப்படும், தெளிந்த பின் சிவத்தில் அழுந்துதல் ஆகிய நிட்டை கூடல் ஞானத்தில் ஞானம் எனப்படும்.
மலபரிபாகமும், அதற்கு ஏற்ப நிகழும் சத்தி நிபாதமும் ஆகிய நிலைகளுக்கு ஏற்பவே ஞானம் விளங்குவதாகும். அந்நிலைகள் ஆன்மாக்கள் தோறும் ஒரு வகையாக அமையாமல் மந்தம். தீவிரம் என்றாற்போல வெவ்வேறு வகையாய் இருக்கும். அதற்கேற்ப, சிந்தித்தல் தெளிதல்களும் பல்வேறு வகைப்பட மந்தமாகவும், தீவிரமாகவும் நிகழும்.
தீவிரத்தின் மேற்பட்ட, அதிதீவிரம் என்னும் மிகு சத்தி நிபாதம் வரும் போதுதான் ஞானத்தில் ஞானமாகிய- நிட்டை கூடுதல் ஆகிய - சிவானுபவம் வாய்க்கும். அம்மிகு பக்குவ நிலையைப் பெறாமையினாலேயே பலர் குருவருளைப் பெற்ற பின்னரும் நிட்டை நிலையை எய்தாதவராய் உள்ளனர்.
நிட்டை நிலையை அடைந்தோரை இருவகைப்படுத்தலாம். நிட்டையிலேயே அழுந்தி மீளாது நிற்போர் ஒருவகையினர். பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் என்று கூறியது இவர்களை நோக்கியேயாம். மற்றொரு வகையினர் பழைய பழக்கம் காரணமாக நிட்டையினின்றும் மீண்டு உலகை நோக்குவோர். இவ்விரண்டாம் வகையினர் நிலையைப் பின்வரும் திருவாசகப் பகுதியால் உணரலாம்.
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
விடும் தகை யோனை விடுதி கண்டாய் (நீத்தல் விண்ணப்பம், 12)
இதன் பொருள், பெருமானே, , நின் கருணையினால் என்னை நீ ஆட்கொண்டாய். நானோ அவ்வருமையை உணராமல் என்னைக் கீழ்நிலைப்படுத்தும் ஐம்புலன்களின் வழியே சென்று நின் சார்பை விடலானேன் என்பது.
இதனால், சிவனது பாதத்தை அணைந்தோர் அதனை மறந்து மீண்டும் ஐம்பொறிகளோடு கூடி உலகத்தை நோக்குதலும் உண்டு என்பது பெறப்படும்.
இவ்வாறு பழக்கம் காரணமாக ஓரொரு சமயத்தில் பாச ஞானத்தில் செல்ல நேரிடும் என்பதையும், அதனை மாற்றிக் கொள்ளுதற்கு உரிய வழி இது என்பதையும் உணர்த்துதற்கு இம்மூன்றாம் எடுத்துக்காட்டினைக் கூறுகின்றார் ஆசிரியர்.
வெண்பா
53. ஐம்பொறியின் அல்லை எனும் அந்ததர, சிவனை
ஐம்பொறியை விட்டங்கு அணைசகலன்- ஐம்பொறியின்
நீங்கான்; நீர்ப் பாசிபோல் நீங்கு மல கன்மம் வரின்
நீங்கானை நீங்கும் நினைந்து.
இதன் பொருள் :
நீ ஐம்பொறிகளைப் போல ஏகதேசப் பொருள் ஆகாய்; சித்தாய் வியாபகமாய் மேம்பட்டு நிற்பதே உனது இயல்பு என்று கூறப்பட்ட உபதேசத்தைப் பெற்றுள்ள, பக்குவத்தில் மேம்பட்ட மாணவனே,
ஐம்பாறிகளால் வரும் புலன் உணர்வின் நீங்கிச் சிவனது திருவடியை அணைந்த சகலன் மீண்டும் அவ்வைம்பொறிகளின் செயலால் அத்திருவடியை மறந்து புலன் உணர்வுக்கு ஆட்பட மாட்டான்.
நீரில் படர்ந்துள்ள பாசி கல்லெறிபட்ட பொழுது விட்டு நீங்குதல் போல இறைவனது திருவடியை உணர்ந்து நின்ற காலத்தில் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் அவனை விட்டு நீங்கும். அவை நீங்கிய பின்னும் அவற்றின் வாசனை அவனைப் பற்றியிருத்தலும் உண்டு.
கல்லெறியின் வேகம் தணிந்தபொழுது முன்னர் விலகிய பாசி மீள வந்து மூடுதல் போல அம்மலங்களின் வாசனை பழையபடி அவனது அறிவை மயக்குதல் கூடும். அது காரணமாக அவன் சிவத்தை உணர்தலை விடுத்து ஐம்பொறிகளின் வசப்பட்டு உலகத்தை நோக்க நேரிடலாம்.
ஆதலால் அவ்வாறு நிகழா வகையில் அந்தச் சகலன் இனிவரும் நூற்பாக்களில் கூறப்படும் உபாயங்களைக் கைக்கொண்டு, தன்னை விட்டு என்றும் நீங்காது உடனாய் நிற்கின்ற முதல்வனைச் சிந்தித்து உணர்ந்து, அம்மல வாசனையினின்றும் நீங்கி அவனது திருவடியில் நிலைத்து நிற்பான்.
பதவுரை
ஐம்பொறியின் அல்லை எனும் - நீ ஐம்பொறி முதலிய கருவிகள் ஆகாய்; அவற்றின் வேறாவாய் என்னும்
அந்த தர - சித்தாந்தப் பொருளை உணர்ந்து, மேன்மை பெற்ற மாணவனே,
அங்கு ஐம்பொறியை விட்டு - ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி,
சிவனன அணை சகலன் - சிவத்திற் சென்று பொருந்திய சகலனாகிய ஆன்மா
ஐம்பொறியின் நீங்கான் - பின்பு ஐம்பொறி முதலிய அக்கருவிகளின் செயலால் சிவனது திருவடியை விட்டு நீங்கி மீண்டும் புலன் உணர்விற்கு ஆட்படமாட்டான்.
நீர்ப்பாசி போல் - கல்லெறிந்த பொழுது நீங்கி, அக்கல்லெறியின் வேகம் தணிந்தபோது மீள வந்து மூடும் நீர்ப்பாசி போல
நீங்கு மலகன்மம்வரின் - மெய்ப்பொருளை உணர்தலால் நீங்கிய மும்மலங்கள் சமயம் பார்த்து எப்போதேனும் வாசனை அளவாக மெல்ல வந்து பற்றுமாயின்
நீங்கானை நினைந்து - என்றும் தன்னை விட்டு நீங்காது உடனாய் நிற்கின்ற சிவனைச் சிந்தித்து உணர்ந்து
நீங்கும் - அவற்றினின்றும் நீங்கிச் சிவனது திருவடியிலே நிலைத்து நிற்பான்.
விளக்கம் :
இறைவனது திருவடி எனப்படும் திருவருளைச் சேர்ந்தவர், கருவிகளால் வரும் பாச ஞானத்தில் திரும்புதல் இல்லை என்பதும், ஒரு கால் பாச ஞானத்தில் மீள நேருமாயின் அம்மீட்சிக்குக் காரணம் மல வாசனையே என்பதும், அம்மீட்சியும் மல வாசனையால் சிறிதே நிகழ்வது என்பதும், அம்மல வாசனையை நீக்கிக் கொள்ளுதற்கு வழி திருவடியைச் சிந்தித்தல் என்பதும் கூறப்பட்டன.
மல கன்மம் வரின் என்பதில் அறிய வேண்டிய ஒரு குறிப்பு உள்ளது. அஃது, உலக நிகழ்ச்சி ஒன்றைக் கொண்டு உணர்த்தினால் விளங்கும். இக்காலத்து இளைஞன் ஒருவனிடம் எப்பொழுது திருமணம் பண்ணிக் கொள்வாய்? என்று கேட்டால் என்ன பதில் கூறுவான்? வேலை கிடைக்கும், பிறகு திருமணம் பண்ணிக் கொள்வேன் என்று உறுதியாகக் கூறமாட்டான். வேலை கிடைக்கும் என்ற நிலை தான் எங்கும் இல்லையே. ஆதலால் வேலை கிடைத்தால் திருமணம் செய்வது பற்றி எண்ணலாம் என்பான். வேலை கிடைத்தால் என்று அவன் கூறியதில் உள்ள குறிப்பு வேலை கிடைத்தல் உறுதியில்லை என்பதுதானே. அதுபோல மல கன்மம் வந்தால் என்பதில் உள்ள குறிப்பு, வருதல் உறுதியன்று என்பதேயாம்.
இறுதியடியாகிய நீங்கானை நீங்கும் நினைந்து என்பதை நீங்கானை நினைந்து நீங்கும் என மாற்றி அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். நீங்கான்- முதல்வன்.
அந்ததர என்பதன் பொருள் :
மாணவனை முன்னிலைப்படுத்தி அந்த தர என அழைக்கின்றார். அந்த தரம் உடையவனே என்பது பொருள். அந்தம், தரம் என்ற இரு சொற்கள் உள்ளன. அந்தம் - சித்தாந்தம். தரம் - மேன்மை.
எனவே, சித்தாந்தப் பொருளை உணர்ந்து மேன்மை பெற்ற மாணவனே என்பது இதன் பொருளாகும்.
மாணவனின் நிலைக்குத் தக அழைத்தல் :
நூலின் தொடக்கத்தில் முதன் முதலில் மாணவனை அழைத்த முறைமைக்கும் இப்பொழுது அழைக்கும் முறைமைக்கும் உள்ள வேறுபாடு எண்ணுதற்குரியது.
உபதேசம் பெறல் உற்ற தொடக்க நாளில் அவன் சித்தாந்த உண்மைகளை அறியாதவனாக - பேதைமை உடையவனாக இருந்தான். ஆகலின் அந்நிலைக்கு ஏற்ப அவனைப் பேதாய் (முதல் நூற்பா, முதல் எடுத்துக்காட்டு) என அழைத்தார்.
இப்பொழுது அவன் ஆசிரியரின் உபதேசத்தைக் கேட்டுத் தெளிந்தவனாய் மிகவுயர்ந்த பக்குவ நிலையில் நிற்கின்றான். ஆகலின் அந்நிலைக்குத் தக அவனை அந்த தர என அழைத்தது பொருத்தமே.
இவ்வெட்டாம் நூற்பா நிறைவு பெறும் இவ்விடத்தில் பின்வரும் கருத்துக்கள் ஊன்றி உளங்கொள்ளுதற்கு உரியன :
1. ஞானத்தை உணர்த்தும் ஆசிரியர் சிவமேயன்றிப் பிறர் அல்லர்.
2. கருவிகளின் நீங்குதலும், சிவத்தைச் சேர்தலும் ஆகிய இவை உடற் செய்கைகள் அல்ல; அறிவின் செயல்கள் ஆகும்.
3. சூரியனும் அதன் ஒளியும் போலச் சிவம் தானும் தன் சத்தியும் என இருதிறப்பட்டு நிற்பது. கண் முதலில் சூரியவொளியைப் பொருந்திப் பின் அதன் வழியாகச் சூரியனைக் காணுதல்போல, ஆன்மா முதலில் சத்தியாகிய திருவருளை அறிந்தே பின் சிவத்தை அறியும் நிலை உண்டாகும். திருவருளை அறிந்து அதனோடு கூடுதலே அருள் நிலை என்பது. பின் அத்திருவருள் வழியாகச் சிவத்தை அறிந்து அதனோடு கூடுதலே ஆனந்த நிலை என்பது.
4. ஞானத்தின் படிநிலைகளாகிய கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கனுள் தெளிதல் என்பது அருள் நிலையாகும். தெளிதல் என்ற படி நிலையில் உயிர் திருவருள் நிலையை <உள்ளவாறு உணர்ந்து அதன் வயப்பட்டு ஒன்றி நிற்கும்; என் செயலென ஒன்றில்லை, எல்லாம் திருவருட்செயலே என உணர்ந்து நிற்கும். அருளைச் சார்ந்து நிற்கின்ற நிலையாதலின் இஃது அருள் நிலையாயிற்று.
5. நிட்டை கூடல் என்பது ஆனந்த நிலையாகும். உடம்போடு கூடியிருக்கும் போதே உலகத்தின் தொடர்பின்றி உலக நினைவற்றுத் தன் நினைவும் அற்றுச் சிவத்தில் அழுந்திச் சிவானுபவத்தில் திளைத்திருக்கும் நிலையே நிட்டையாதலின் அஃது ஆனந்த நிலையாயிற்று.
6. அருள் நிலை துரியம் எனப்படும். ஆனந்த நிலை துரியாதீதம் அல்லது அதீதம் எனப்படும்.
7. துரிய நிலையில் நின்ற உயிரை மேலேயுள்ள அதீத நிலையாகிய ஆனந்த நிலையிற் செல்ல வொட்டாமல் உலகத்தை நோக்கி நிற்கும்படி கீழ்நிலைப் படுத்துவது ஆணவ மல வாசனை. அம் மல வாசனையை நீக்கி அதீதத்தில் செல்லுதற்கு வழியாக உள்ளவையே திருவைந்தெழுத்து முதலியவை.
அச்சாதனங்களை அடுத்து வரும் நூற்பாவிற் காண்போம்.
எட்டாம் நூற்பா முடிந்தது.