பதிவு செய்த நாள்
18
நவ
2013
10:11
சேர்ந்தமரம்: திருமலாபுரம் குடவரைக் கோயிலில் கார்த்திகை விழா சிவனடியார்கள் கலந்து கொண்ட கிரிவலம் நடந்தது.சேர்ந்தமரம் அருகே திருமலாபுரம் (வாரணாசிபுரம்) குடவரை பசுபதேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை விழா கோலாகலமாக நடந்தது. காலையில் யாகசாலை பூஜையும் அதனை தொடர்ந்து காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை புனித தீர்த்தம் 11 கலசங்களில் பசுபதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. மதியம் தென் மாவட்டங்களில் உள்ள சிவனடியார்களின் பன்னிருதிருமுறை பாராயணத்துடன் கிரிவலம் நடந்தது. 108 கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடும் நடந்தன. மதியம் அன்னதானம் நடந்தது. விழாவில் குற்றாலம் விவேகானந்தா ஆசிரமம் சுவாமி அகிலானந்தா, கோவில்பட்டி கோ.மு.ரா. சொருபானந்தா சுவாமிஜி, சுவாமி ராகவானந்தா, சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபை தலைவர் ஆவுடையப்பன், கடகாலீஸ்வரர் கோயில் பஞ்சவாத்திய இசை குழு முப்பிடாதி, நெல்லை காரைக்கால் வழிபாட்டுக்குழு தலைவர் முருகேசன், நெல்லை திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக்குழுவினர் மற்றும் நெல்லை சைவசித்தாந்த சபை தலைவர் முத்துக்குமாரசுவாமி, திருவாசகம் முற்றோதுதல் குழு தலைவர் கணேசன் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருமலாபுரம், சேர்ந்தமரம், வலசை, கரடிகுளம், கம்பனேரி, மாவடிக்கால் ஆகிய ஊர் சமுதாய கமிட்டி நிர்வாகிகளும், குடவறைக்கோயில் கார்த்திகை கமிட்டி நிர்வாகிகளும் செய்திருந்தனர்.