பதிவு செய்த நாள்
18
நவ
2013
02:11
சோளிங்கர்: யோக நரசிம்மர் மலைக்கோவிலில், கார்த்திகை சிறப்பு உற்சவம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம் சோளிங்கர் மலைக்கோவிலில், கார்த்திகை மாதம், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும். நேற்று கார்த்திகை மாதம் முதல் தேதி, ஞாயிற்றுக்கிழமையுடன் துவங்கியது. சோளிங்கர் அடுத்து கொண்டபாளையம் பெரிய மலையில் அமைந்துள்ள யோக நரசிம்மர் கோவில் மற்றும் அதன் கிழக்கே அமைந்துள்ள சிறிய மலைக்கோவில் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு உற்சவம் நடந்தது. பெரிய மலையில், நரசிம்மரை தரிசனம் செய்யும் பக்தர்கள், சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயரிடம் தங்கள் வேண்டுதலை கூறுவர். நரசிம்மரின் சேவகன் ஆஞ்சநேயர், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற பணிக்கப்பட்டுள்ளார் என்பது ஐதீகம். இதனால், பக்தர்கள், கட்டாயமாக இரண்டு மலைக்கோவிலுக்கும் சென்று சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். கடிகாசல ஷேத்திரம் என பெயர் பெற்ற இந்த தலத்தில், மலையடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் குளி“ததால், நோய்கள் அகலும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், குணம் பெறுவர் எனபது சிறப்பு. சோளிங்கர் நகரின் மையப்பகுதியி“ல் உற்சவ மூர்த்திக்கு கோவில் அமைந்துள்ளது. நேற்று ஆர்.கே.பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர்.