பதிவு செய்த நாள்
19
நவ
2013
10:11
திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, உண்ணாமுலையம்மன் சமேதராக அண்ணாமலையார், இன்று கிரிவலம் வருகிறார். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலையில், கோவிலுக்குள் பரணி தீபமும், மாலையில், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபமும் ஏற்றப்பட்டது. இந்த தீபம் தொடர்ந்து, 11 நாட்கள் எரியும். அதாவது, தினமும் மாலை, 6:00 மணிக்கு, மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டு, இரவு முழுவதும் பிரகாசிக்கும். இதற்காக, சுழற்சி முறையில், பருவதராஜகுல மரபினர் மற்றும் கோவில் பணியாளர்கள், மலை மீது முகாமிட்டு, தீபம் ஏற்றும் பணியை செய்து வருகின்றனர். மகா தீபம் ஏற்றியதை தொடர்ந்து, நேற்று இரவு, ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடந்தது. இன்று இரவு, பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை சுப்ரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. ஆண்டு தோறும், தை மாதத்தில் நடைபெறும், திருவூடல் விழாவின் போதும், தீபத் திருவிழா முடிந்த பிறகும், அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, இன்று காலை, உண்ணாமுலையம்மன் சமேதராக அண்ணாமலையார் கிரிவலம் வருகிறார். அண்ணாமலையார் கிரிவலத்தை முன்னிட்டு, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும். - நமது நிருபர்-