பதிவு செய்த நாள்
21
நவ
2013
11:11
பழநி: பழநிகோயில் கிரிவீதியில், அதிவேகமாக செல்லும், வாகனங்களால், கிரிவலம் வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். முருகப்பெருமானின் மூன்றாம்படைவீடான பழநி கோயிலுக்கு, கார்த்திகை மாதத்தையோட்டி, ஐயப்ப பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள், தேவஸ்தானம் ஒதுக்கியுள்ள, சுற்றுலா பஸ்ஸ்டாண்ட்டில் வாகனங்களை நிறுத்தாமல், கிரிவீதியை சுற்றி நிறுத்துகின்றனர். இதன் காரணமாக கிரிவீதி பாதையின் அகலம் குறைந்து, அவ்வழியாக, வேகமாக செல்லும் வாகனங்களால், விபத்துகள் நடக்கிறது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் விபத்து அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். கிரிவீதியை சுற்றி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி, கோயில் சுற்றுலா பஸ்ஸ்டாண்ட்டில் நிறுத்த வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.