பதிவு செய்த நாள்
22
நவ
2013
09:11
சபரிமலை: சபரிமலை தங்கும் விடுதிகளில், அறை வாடகை நான்கு மடங்காக
உயர்த்தப்பட்டுள்ளது. சபரிமலையில், சில தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை, பக்தர்கள் நன்கொடையாக கட்டிக் கொடுத்தவை. இந்த விடுதிகள், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன. இதையடுத்து, விடுதி அறைகளுக்கான வாடகையை, நான்கு மடங்காக, தேவசம்போர்டு உயர்த்தியுள்ளது.
30 சதவீதம்: ஸ்ரீமணிகண்டன் என்ற விடுதியில், நான்கு பேர் தங்கும் வசதியுடைய, அறை ஒன்றின் வாடகை, 400 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது; அறை எடுக்கும் போது, 1,600 ரூபாய் டெபாசிட் என, 3,200 ரூபாய் செலுத்த வேண்டும். வாடகை, 12 மணி நேரத்துக்கு மட்டுமே. அடுத்த நான்கு மணி நேரத்திற்கு, 30 சதவீதம் கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.இதேபோல், மற்ற தங்கும் விடுதிகளிலும், அறைகளின் தன்மைகளுக்கு ஏற்ற வகையில், கட்டணம் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அறை வாடகை உயர்வால் பக்தர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.இதற்கிடையில், சபரிமலையில், மண்டல மகரவிளக்கு காலத்திலும், இதர மாத பூஜை நாட்களிலும், 40 வகையான பூஜைகள் நடத்தப்படுவதாகவும், அவற்றுக்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மிகக் குறைந்த கட்டணம் நெய்யபிஷேகத்துக்கும், அதிக பட்ச கட்டணம், படி பூஜைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.